
இரவு பத்துமணி செய்தியைக் கேட்டுகொண்டிருந்தேன் . சுவற்றிலிருந்த சுவிட்சு
பெட்டியில் காற்றில் சிக்கிய ஒற்றைக் காகிதத்தாள் போல படபடவென்ற சத்தம்
கேட்டது. குழல்விளக்கினை அணைத்தேன் . சத்தம் தொடர்ந்தது . தொலைக்காட்சி
பெட்டியில் ஒலி இயல்பாகவே இருந்தது. ஒலியினைக் குறைத்துவிட்டுக் கவனித்தேன்.
படபட சத்தம் தொடர்ந்தது. வீட்டினுள் உள்ள பிற மின்விளக்குகளையும் அணைத்தேன் .
சமயலறையிலிருந்த குளிர்பதனப்பெட்டியில் வழக்கமான ஒலியே வந்தது. படுக்கைஅறையில் குளிர்விப்பானும் இயல்பான ஓசையையே வெளிபடுத்தியது. படுக்கையறையில் படுத்தபடியே மனைவி ,கைப்பேசியில் அன்றைய நாடகத்தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் . விளம்பர இடைவேளையில் நிமிர்ந்து பார்த்து “எதைப் பரபரப்பா தேடுறீங்க . என்னவேணும்?. “ “ஒண்ணுமில்லை , எதோ படபடன்னு சத்தம் கேட்குது ;அதென்னான்னு பார்க்கிறேன் “. எனது பதிலை எதிர்பாராமல் மனைவி தொடரில் மூழ்கிவிட்டார் . சத்தத்தின் காரணம் துலங்கவில்லை. தொலைக்காட்சியையும் அணைத்தேன்.படபட ஒலிப்பு நிற்கவில்லை. சுவற்றில் மின்னிணைப்பு பெட்டிக்கு மேலிருந்த அழைப்புமணி ஒலிப்புபெட்டியின் அருகே படபடப்பு சத்தம் கேட்டது. வெளிவாசல் விளக்கை மட்டும் எரியவிட்டு, சுற்றுச்சுவர் மீதிருந்த விளக்குகளையும் அணைத்தேன். இப்போ நடுக்கூடத்தில் அழைப்பு ஒலிப்பானில் ஓசை இல்லை. காலையில் எலக்ட்ரிசியனை வரச்சொல்லி சரிபார்ப்போம் என்று படுக்கைக்குப் போனேன். நாடகத்தொடர்கள் கைப்பேசியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கையில் மனைவி குறட்டையை ஆலாபனை செய்துகொண்டிருந்தார் . அலுங்காமல் அவரது கைப்பேசியை அணைத்துவிட்டுப்படுத்தேன்.விழுங்கிய மாத்திரைகளின் உதவியால் உறங்கிவிட்டேன். வாசலில் அழைப்புமணி அலறியது . எழுந்து மணிபார்த்தேன்,11-50 . இந்த நடுநிசியில் யார் வருவார் என்று யோசித்தபடியே முகத்தை துடைத்து, உடைகளை சரிசெய்துகொண்டு வாசல் விளக்குகளை ஒளிரவிட்டேன். கதவின் மரச்சட்டகத்தில் இணைக்கப்பட்ட கண்ணாடி வழி ஊடுருவினேன் . எவரும் தென்படவில்லை. அழைப்புமணி ஒலித்துக்கொண்டே இருந்தது .
கவனமாகக் கதவைத் திறந்தேன் , ஒருவருமில்லை. வெளிச்சுற்று சுவர் கேட்டருகே உள்ள மணியை யாரும் அழுத்தியிருக்கலாம் என்று கேட்டருகே போனேன். பாதுகாப்பு கருதி , கதவைத் திறக்காமல் கைப்பேசியோடு இணைக்கப்பட்ட கண்காணிப்பு காமிரா படங்களை கூர்ந்து நோக்கினேன். வெளிகேட்டிலும் , முதல்மாடி வீட்டருகிலும் எவருமில்லை. ஆனால் மணி ஒலித்துக்கொண்டே இருந்தது. வெளியே வானம் வெண்பனி போர்த்துக் கிடந்தது.
நட்சத்திரங்கள் மங்கிய ஒளியில் கொட்டாவி விட்டுக்கிடந்தன . மனிதர் எவருமில்லாமல் அழைப்புமணி தானாக ஒலிப்பது அமானுஷ்யமாக இருந்தது. மர்மம் விலகவில்லை. குளிரை மீறி உடலில் வேர்வை அரும்பின. தாமதிக்காமல் வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டேன்.
அழைப்புமணி அலறிக்கொண்டே இருக்கிறது ,படுக்கையில் என்னைக் காணவில்லை
என்று மனைவியும் எழுந்து “யாரு இந்த நடுச்சாமத்தில …” உறக்கச்சடவில் முணங்கியபடி வெளியே வந்தார். “யாருமில்லை ; மர்மமா இருக்கு; மணி அதுபாட்டுல அடிச்சுகிட்டே இருக்கு .என்னனு தெரியலை . வந்து படு . காலையில் பார்த்துக்கலாம் . அக்கம்பக்கத்தில இருக்கிறவங்களையும் எழுப்பி அவுங்க தூக்கத்தைக் கெடுக்கவேணாம். சத்தத்தை சகிச்சுகிட்டு தூங்கியாகணும் “
“இந்த சத்தத்தில எப்படிங்க உறங்குறது . நாலு நாளைக்கு முன்னே இந்தத் தெருவில
குடுகுடுப்பைக்காரன் வந்தானாம். அவன் எதோ குறளியை ஏவிவிட்டுட்டானோ என்னமோ? மனசு பயந்து பதறுது .”
“குறளி பேயுமில்லை பிசாசுமில்லை .அப்படி செய்வினை ஏவி ஒருத்தரைக் கெடுக்கலாமுன்னா , நம்ம நாடு எப்பவோ வல்லரசாகி இருக்கும் , ஏவுகணை செலவு மிச்சம். சும்மா பதறாம செல்லைப் பார்த்துகிட்டே படு “
“என்னாங்க நமக்கு ஏதும் ஆச்சுன்னுன்னா பிள்ளைங்க என்னபாடு படுவாங்கன்னு நான் பதறிகிட்டிருக்கேன், நீங்க ஏகடாசி பேசிகிட்டிருக்கீங்க “
“எகாதசியுமில்லை, துவாதசியுமில்ல . எதைத் தடுக்கமுடியலையோ அதைப் பொறுத்து,
பொறுமையோடுதான் எதிர்கொள்ளணும் .பேசாம தூங்கு “ விளக்குகளை அணைத்து
படுத்தேன். அழைப்பொலி நிற்கவில்லை. அலறிக்கொண்டே இருந்தது .விழிகளை மூடினேன்;
மனசு மூடவில்லை. சிறுவயதிலிருந்து கேட்ட, வாசித்த பேய்க்கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்தன . வாசித்த பேய்க்கதைகளையும் விடவும் கேட்டகதைகள் மனதில் பசுமையாக இருக்கின்றன .
அம்மா சொன்னது . “ மறுநாள் கோழிகூவ எழுந்து கடலைச் செடி பிடுங்க ,தெற்கே
மலையடிவாரத்தில் கோமாளிக் கவுண்டர் தோட்டத்திற்கு போறதுன்னு தெருமுச்சந்தியில் பொம்பிளைக பேசிகிட்டாக .தலைக்கோழி கூவ ,வாசலில் சத்தம்கேட்டது ‘லட்சுமி எந்திரி கடலைச்செடி பிடுங்கப் போகணும் , நேரமாகுது ; கூட்டம் சேர்ந்தா நிறை கிடைக்காது; கூலி கட்டாது ‘. வேலுமணி எழுப்பும் குரல் கேட்டு லட்சுமி அரக்கபரக்க எழுந்து ஓடினாள்.
‘ என்னாக்கா மத்தவங்க யாரையும் காணோம் ‘ லட்சுமி கேட்டா. ‘அவுங்கல்லாம் முந்திப்
போறாங்க. விசுக்குனு நடந்து வா ; விடியறதுக்குள்ள நிறைபிடிச்சு கடலைச்செடி
பிடுங்கணும் ‘ என்று வேலுமணி சொல்லிக்கொண்டே முன்னால் விரைந்தாள்.
‘என்னாக்கா இன்னும் தலைக்கோழிகூட கூவல போலிருக்கு . மானம் வெள்ளைபூத்துக்
கிடக்கு ,விடியாலை மீனைக் காணோம். மானத்தில மீனுக மயங்கிக்கிடக்கு. தவளை கத்தல், ஆந்தை அலறல் தவிர்த்து சனசத்தம் கேட்கலை . இவ்வளுவு தூரம் வந்துட்டோம் நம்மாளுக நடமாட்டமே தென்படலை . நடுச்சாமத்தில எழுப்பி கூட்டியாந்துட்டியாக்கா ‘
‘லட்சுமி அங்க பாருளா , ஆளுகபோறது தெரியலையா . உறக்கச்கடவு தீரலையா . விரசா
எட்டிநட . செத்தநேரத்தில அவுகளை எட்டிப் பிடிச்சிறலாம் . என் பின்னாலையே வா ‘ .
லட்சுமி வேகமா நடந்தாள். அடுத்தநொடி தொப்பென்று சத்தம் கேட்டது . கிணற்றில்
வேலுமணி விழுந்தாள். லட்சுமி கிணற்றை எட்டிப்பார்த்தாள் . அந்த உருவம் கெக்கலி
கொட்டி சிரித்தது. ‘நீயும் குதிடி . நம்ம ரெண்டுபேரும் சந்தோசமா கடலை ஆயலாம் ‘ என்று சிரித்தது. வந்தது விரும்பியவன் கிடைக்கலைன்னு கிணத்தில விழுந்து உயிரை மாச்சுகிட்ட மாரியம்மா பேய் தான் என்றுணர்ந்த லட்சுமி வரப்பிலே மயங்கி விழுந்துட்டா .
விடியக்காலையில் கடலைச்செடி பிடுங்க வந்தவுங்க , பல்லுகிட்டிக் கிடந்த லட்சுமியை
வீட்டுக்கு தூக்கியாந்து வைத்தியரிடம் காட்டி காப்பாத்துனாங்க . இதிலிருந்துஇராத்திநேரத்தில் முச்சந்தியில் காட்டுவேலை பத்தி பேசுறதில்லை . கோழிகூவுறதுக்கு முன்னே ஒத்தையா காட்டுப்பக்கம் போறதில்லை.”
அப்பாவும் இதைவிடவும் சுவாரஸ்யமான கதை சொல்லியிருக்கிறார் .எந்தக் கதையிலும் இப்படி கிண்கிணிப்பேய் வந்ததில்லை. கொள்ளிவாய்ப்பிசாசுனு கேட்டதுண்டு .
ஒவ்வொன்றுக்கும் காரணமும் தெரிந்து கொண்டதுண்டு. இப்படி அழைப்புமணிபேய்
கேட்டதுமில்லை . ஆனால் வீட்டுக்குள்ளே இப்போ பார்க்கிறோமே … படித்த , கேட்ட
பேய்கதைகளில் சுவாரஸ்யம் இருந்தது. நம்பவில்லை. இது பேயோ , என்னவோ, இந்த
மர்மப்புதிர் விளங்கவில்லையே .
இப்படி யோசனையில் புரண்டுகொண்டே இருந்தேன் . மணிஅலறலும் நிற்கவில்லை .
உறக்கமும் வரவில்லை. ஆனால் மனைவியின் குறட்டை ஆரோகண அவரோகணத்தில்
சஞ்சரித்தது. மனைவிக்கு நான் இருக்கையில் அச்சமில்லை. நான்தான் அச்சத்திற்கும் ,
ஐயத்திற்குமிடையே உழன்று கொண்டிருந்தேன் . உறங்குவதற்கான திரைப்பாடல்களை நினைவுபடுத்தி மனசுக்குள் பாடி அதன் சொல்நயங்களையும், காட்சிப்படுத்தலையும், இசை லாவண்யத்தையும் நினைந்து அலறல் ஒலியை மறந்து உறங்கிப் போனேன் .
அழைப்புமணியும் உறங்கிப் போனதோ தெரியவில்லை. காலை ஆறுமணிக்கு எழுந்ததும் கவனித்தேன் சத்தம் இல்லை.
மாடியில் யோசித்தபடியே சிறிது நடைப்பயிற்சி செய்தேன் .எலக்ட்ரிசியனுக்குப் பேசி
விவரம் சொன்னேன். “நம்பாதவனுக்கு பேயில்லை. நம்புறவனுக்குத்தான் பேய் “என்று
சிரித்தார் . எனக்கு புரியவில்லை . விவரம் கேட்டேன் . எட்டுமணிக்கு நேரில் வந்து
விளக்கமாகச் சொல்றேன் என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று யோசித்தேன்
;புரிபடவில்லை. சொன்னபடி சாமான் பையோடு , உதவியாளருடன் வந்துவிட்டார்.
நடுக்கூடத்தில் அழைப்பு ஒலிப்பானைக் காட்டி இரவெல்லாம் அலறியதையும்,
எந்நேரம் தானாக நின்றது தெரியவில்லை என்பதையும் சொன்னேன். அவர்
புன்னகையோடு , பிரச்சினை இந்தப்பெட்டியில் இல்லை. வெளியே இருக்கிறது .
வெளியே சுற்றுச்சுவர் அழைப்புமணி சுவிட்சு அருகே அழைத்து வந்தார் . சுவிட்சு
மூடியைக் கழற்றினார் . சில செவ்வெறும்புகள் ஊர்ந்ததை துணி கொண்டு துடைத்து
அப்புறப் படுத்தினார்.
“ தரைக்கு கீழே இந்த எறும்புகளும் , கரையான்களும் வயரின் மேலுள்ள நைலான்
கவரைக் கடித்து தின்றிருக்கும் . எறும்போ, கரையானோ ஊரும்போது செம்புவயர்கள்
ஒன்றோடு ஒன்று உரசும்போது மணி அடித்திருக்கிறது. எறும்பு ஊருவது நின்றதும்
மணியடிப்பது நின்றிருக்கிறது . இதுக்கு இரண்டு தீர்வு இருக்கிறது. ஒன்று இந்தத்
தரையை இடித்துத் தோண்டி , கரையான் மருந்தடித்துவிட்டு புதுவயர் வாங்கி இணைப்பு கொடுக்கலாம். ஏன் தரையை இடித்து சரி பண்ணி மீண்டும் தரைகல் பாவனுமுனு நினைச்சா , வெளி காம்பவுண்ட் சுவரிலிருக்கிற காலிங் பெல்லை டிஸ்கனக்ட் பண்ணிருலாம் . வெளியிலிருந்து யாரும் மணி அடிக்கமுடியாது . உங்களுக்கு எது சௌகரியமுனு சொல்லுங்க , செஞ்சுருவோம் “
யப்பா அன்றிரவு ஒலிப்பேய் அலறவில்லை ! வெட்டுக்குறடு ,திருப்புளி கொண்டே
