எம்.டி.முத்துக்குமாரசாமியின் முகநூல் பதிவு

போன வருடம் கவி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் மே மாதம் 7 ஆம் தேதி வந்தபோது ரவீந்திரநாத் தாகூரும் ரோலான் பார்த்தும் என்று இருவரும் ஜப்பான் சென்று வந்து எழுதிய பயண நூல்களை (Empire of signs – ஜப்பான் யாத்ரி) ஒப்பிட்டு ஒரு சிறு கட்டுரை எழுதினேன். என்னுடைய ஒப்பீட்டின் மையமாக பார்த் எப்படி ஜப்பானின், பொதுவாக கீழைத்தேயங்களின் உள்ளுறையாக இருக்கும் வன்முறை அம்சத்தை ஜப்பானின் சித்திரக் குறிகளின் உள்ளார்ந்து இருக்கும் வெறுமையை வைத்து கண்டுபிடித்து விடுகிறார் ஆனால் தாகூர் தன்னுடைய ரொமாண்டிக் மனோபாவத்தினால் கீழைத்தேயங்களின் வன்முறையைப் பார்க்கத் தவறிவிடுகிறார் என நான் எழுதிக்கொண்டிருக்கையில் கநாசு எழுதிய தாகூரின் வாழ்க்கை வரலாற்று நூலில் என்னுடைய கருதுகோளை சரிபார்த்துவிடலாமே என அதை வாசித்தேன். கநாசு தாகூர் ஜப்பான் சென்றபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டு மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டு இறந்த சம்பவத்தைப் பற்றி தாகூரிடம் இரண்டு வரி கவிதை எழுத்திதருமாறு கேட்டபோது, அந்த சம்பவத்தின் வன்முறையால் அருவருப்படைந்த தாகூர் “அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுத்து விரோதித்து சண்டையிட்டு இறந்தார்கள்; கடவுள் வெட்கிப் போய் புல்லை முளைக்க வைத்து அந்த இடத்தில் சிந்திய ரத்தத்தை மறைத்துவிட முயன்றார்” என்றெழுதிக்கொடுத்தாராம். கநாசு எழுதிய இந்த விபரத்தைப் படித்ததால் என் கட்டுரையின் கருதுகோள் தவறாகிவிட்டது; நான் என் கட்டுரையை கைவிட நேர்ந்தது. தாகூர் கீழைத்தேயங்களின் குறிப்பாக ஜப்பானின் மரபான வன்முறையை அறியாமலில்லை அதை வெறுத்து ஒதுக்கியிருக்கிறார் என்பது தெரியவந்தவுடன் ஆசுவாசமாயிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன