சாய்ரேணு சங்கர்/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெறுங்கால் நடக்க மறுக்கும் சூடு
நிழலே காணா தாபம் தாகம்
நிலைமை தொடர்ந்தால் பெரும்பாடு!

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!

மாசில் வீணையை மாலை மதியினை
மனத்தில் ஆக்கிய மாண்பும் உண்டு
வீசுதென்றலை ஈசனில்கண்டு
வியனுலகு செய்தவர் உண்டு

அருவியின் நீரில் ஆடியே குளிர்வோம்
“அரி, அர” என்று பாடியே திளைப்போம்
இருளைத் தொடரும் ஒளியெனச் சொல்வோம்
இந்த நம்பிக்கையால் வெல்வோம்!