
அழகிய சிங்கரின் இன்றைய என்பா
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வறட்டு இருமலும்,
கரட்டு தொண்டைக்குழியும்;
எங்கே என்னை நிறுத்தப் போகிறது;
என் அச்சமும் உச்சத்தில்.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து போகிறது
ஆறு, குளம் வறண்டு போக,
என் மனம் வருந்துகிறது.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.
நீர்விடாய் பொதுவானது தானே.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வாயிலில் பந்தலிட்டு
பானகப்பானை,மோர்ப்பானை
நிரப்பின வாய் பேசா பாட்டி
நினைவில் வந்து போகிறாள்;
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
குப்பியில் அருந்தும் நீர் இல்லை.
மலையேறறத்தில்; கண்டும் காணாமல் மக்களவர்;
கோவிந்தனா தாகம் தீர்க்க?
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இரத்த அழுத்தமும்
நீர்க் கடுப்பும்;
நிறைய நீர் அருந்தும் கருத்துரை:
கேட்க; விசனமாய் இருக்கிறேன்.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
வெயிலோன் கருணை காட்ட வேண்டும்.
“வருணனை வா!” என்று கூறி,
ஆராதனை நடத்த வாரீர்.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
வடகமும் அப்பளமும் செய்து போட;
மாவு திரிக்க, இயந்திரம் போக
மின்தடை என்று அறிவிப்பு.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
கத்திரி வெயில் போகும் முன்;
பிள்ளைகளுக்கு அம்மன் வந்து சாடும்.
சள்ளையாய் இருக்கிறது; யோசிக்க.
🪷
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
அழகனும் வந்து போய் ஆயிற்று.
வைகாசி வந்தால்தான் வாய் திறக்கும்;
வான் என்றே காத்திரு
🪷
7-5-2024
