கடலூர் ந.பாஸ்கரன்/வைணவ சமத்துவம்

07.05.2024-சொல்புதிது இதழுக்கு…


“”””**
இரயில் பயண
கூட்ட நெரிசலில்
மனிதம் நசுங்கி
மூச்சுத் திணருகிறது.

உட்கார்ந்திருப்பவர்கள்
பேசும் சுதந்திரக் கருத்துகள்
நிற்பவர்களை
அடிமை ஆக்குகிறது.

ஒருவர்ப் படுக்கலாம்
இருவர் அமரலாம்
மூவர் நிற்கலாம் என்ற
வைணவ ஜனநாயக சமத்துவத்தைப்
பேசிய மூவர்
வாய்ப்பூட்டுச் சட்டத்தால்
ஊமையாக்கப்பட்டனர்.

சிநேகம்
வளர வேண்டிய இரயிலோட்ட ஆட்டத்தில்
நீண்டு படுத்திருந்த
இரயில் தண்டவாளங்கள்
சுயநலப்பாம்புகளாகி
சீறி எழுகின்றன.

மாற்றுத்திறனாளி
நெளி்ந்து நிற்கும் புள்ளத்தாச்சிப் பெண்
வெள்ளைத்தாடியை
நீவும் முதியவர்
அனைவரையும் பார்த்துப்
புன்னகை செய்கின்றன..
இரும்பு நாகங்கள்.