கடலூர் ந.பாஸ்கரன்/வேறு ஒருவருடன் …

09.05.2024 –

ஒட்ட வைக்க முடியாததாய்
உருக்குலைந்து
சில்லு சில்லாய்
உடைந்து போய் விட்டது
நம்பிக்கை..!?

உச்சி முகந்து
உள்ளம் சிலிர்த்திருந்தத் தருணத்தில்
நான்கு அங்குல ஆழத்திற்கு
நடுவயிற்றில்
பாய்ச்சப்பட்டதுக்
கத்தி.,
அதிலிருந்து ரத்தம் சொட்டியது
துரோகம் பாசத்தைப் பேசியது .

தோளில் தூக்கிச்சுமந்து
துள்ளிக்குதித்து ஓடியபோது ..
பின்பக்கத்துக்குப்
பறக்கும் முத்தத்தைப் பறக்க வைக்க
சுமக்கும் மூச்சை
உருவி எடுத்து உதவ வைத்தது
அழுகிய அன்பு.

நமநமத்த நாக்குடன்
நலம் விசாரிக்க
எண்ணிட்ட காதுக்குள்
அழைக்கும் நபர்
வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்
துண்டிக்கலாம் அல்லது காத்திருக்கலாம் என்ற
தேன்தடவிய அம்புகள்
அலைஅலையாய் வந்து சொருகிக்கொண்டன.

தோட்கப்பட்ட செவிகள்
சான்றோன் என்ற சொல் கேட்க
வாய்ப்பிளந்து காத்துக்கிடக்கிறது …