பி. ஆர்.கிரிஜா/அன்பின் அடையாளம்

ஒரு மணி நேரமாக அந்த கிராமத்து மரத்தடியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் ஆறுமுகம். பஸ் வந்தபாடில்லை. கால் துவண்டு போனது.
ஒரு வழியாக பஸ் வருவதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விட்டார். அடுத்த கிராமத்தில் இருக்கும் அண்ணனுக்கு உடம்பு சரியில்லை என அண்ணி ஃபோன் செய்த உடனேயே கிளம்பி விட்டார். பஸ்ஸில் ஒரே கூட்டம். உட்கார இடமில்லை. நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று ஏறிக் கொண்டார். பையில் பத்தாயிரம் ரூபாய் எடுத்து வந்திருந்தார். அதை பத்திரமாக ஒரு துணிப் பையில் வைத்திருந்தார். அவர் மனைவி மரகதம் கெட்டிக்காரி. இந்த அழுக்குப் பையில எடுத்துப் போங்க. யாரும் உங்க கிட்டேயே நெருங்க மாட்டாங்க. பணமும் பத்திரமா இருக்கும்னு சொல்லி அனுப்பினாள். உண்மையைச் சொல்லப் போனால் அவருக்கு அந்தப் பணத்தை அண்ணனுக்குக் கொடுக்க விருப்பமில்லைதான். மரகதந்தான் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று வற்புறுத்தி கொடுத்து அனுப்பினாள். தேவையானால் மட்டுமே கொடுப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டார். ஒரு
வழியாக அடுத்த கிராமத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
பத்து நிமிட நேரத்தில் அண்ணன் வீடு வந்து சேர்ந்தார்
“வாங்க தம்பி” என்று முக மலர்ச்சியுடன் அவர் அண்ணி சொன்னதும், அப்பாடி அண்ணன் சுகமாகத்தான் உள்ளார் என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டார் ஆறுமுகம்.
“அண்ணனுக்கு லேசா நெஞ்சு வலி… உங்கள உடனே பாக்கணும்னு சொன்னதால ஃபோன் செய்தேன். இப்ப நல்லாத்தான் இருக்காரு. இருந்து சாப்பிட்டுப் போங்க தம்பி “என்று அன்பொழுகச் சொன்னார் அண்ணி.
“சரிங்கண்ணி….. என்றார். மனதிற்குள் நல்ல வேளை, இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை இல்லாமால் போய் விட்டது என்று நினைத்துக் கொண்டார்.
” தம்பி…. நான்தான் உன்னப் பாக்கணும் , உடனே வரச்
சொல்லுனு உன் அண்ணி கிட்ட
சொன்னேன். என்ன விஷயம்னா….. என்று இழுத்தார். “சொல்லுங்க
அண்ணே” ” ” நம்ம அம்மாவோட தாய் மாமன் இங்க வந்துட்டுப் போனாரு. நம்ம அம்மாவுக்குச் சேர வேண்டிய பணம்னு ரெண்டு லட்சம் ரூபாய்
கொடுத்துட்டுப் போனாரு. அதுல பாதி உனக்குச் சேர வேண்டியது. அதக் கொடுக்கத்தான் உன்ன கூப்பிட்டேன்” என்றார். ஆறுமுகத்திற்கு யாரோ தன்னை சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. ” “என்ன சொல்றீங்க அண்ணே?”
“ஆமாம் தம்பி உனக்கும் அதுல பங்கு உண்டு. அதான்…”
ஒரு நிமிடம் வெட்கித் தலை குனிந்தார் ஆறுமுகம். அவர் அண்ணன் நினைத்திருந்தால் முழுப் பணத்தையும் அவரே எடுத்துக் கொண்டு ஒன்றும் நடக்காத மாதிரி இருக்கலாம். ஆனால் தன்னைக். கூப்பிட்டு கொடுக்கிறார் . இதற்கு நான் தகுதியானவன் இல்லை என்று மனதிற்குள் புழுங்கினார். இந்த பத்தாயிரத்தக் கொடுக்கக் கூடாது என்று நினைத்த நான் எங்கே, இவர் கூப்பிட்டுக் கொடுக்கும் தெய்வம் என்று நினைக்கும் போது அவரையும் அறியாமல் கண் கலங்கிய நிலையில் “அண்ணே” என்று சொல்லி அவரைக் கட்டிக் கொண்டார். குற்ற உணர்ச்சியில் அவர் கை நடுங்கியது.
“தம்பி…. உக்காருப்பா… ஏன் உன் கை நடுங்குது? உடம்பு சரியில்லையா ?”
“ஒன்னும் இல்ல
அண்ணே…. அம்மா ஞாபகம் வந்தது” என்று சமாளித்தார். சமையல் அறையிலிருந்து வந்த அண்ணி இருவரும் அணைத்த நிலையில் இருப்பதைப் பார்த்து புன்னகைத்தாள்.
ஆறுமுகத்திற்கு இப்போது அண்ணி தன் அம்மாவாகத் தெரிந்தார்.


10/05/2024