முருகேசன்/ரேவதி பாலு

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்வு

திரு அஜயன் பாலா அவர்களின்
கூட்ஸ் வண்டியின் கடைசி பெட்டி என்னும் சிறுகதை தொகுப்பில் இருந்து சிறுகதை

திரு அஜயன் பாலா அவர்கள் ஆனந்த விகடனில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார் .
அவர் திரைத்துறையிலும் இருக்கிறார் .முருகேசனைப் போன்றவர்கள் தங்களிடம் இல்லாத சக்தியை இருப்பதாக கூறிக்கொண்டு எப்படி ஊர் ஜனங்களை முட்டாள்களாக்கி ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.இந்த கதையின் கதாநாயகனுக்கு முருகேசனைக் கட்டோடு பிடிக்காது.
அவனை நேரில் பார்த்தால் கொன்று விட வேண்டும் போல ஆவேசம் . ஆனால் அவன் வீட்டிலேயே அவன் தகப்பனார் முருகேசனின் படத்தை மாட்டி வழிபாடு செய்கிறார். முன்னொரு காலத்தில் முருகேசன் நிறைய அற்புதங்களை செய்ததாக ஊரில் கதை பேசுவார்கள்.அன்று ஊர் எல்லாம் ஒரே திருவிழா கோலம் .
ஆரவாரம்.
ரொம்ப நாட்களாக காணாமல் போயிருந்த முருகேசன் அன்று வரப் போகிறான் என்று. அவன் ஒன்றும் தெரியாதது போல ஊர் மக்களிடம் பேச்சு கொடுத்து பார்க்கிறான். அவர்கள் ஊரில் ஏழு வருடமாக அன்ன ஆகாரம் இல்லாமல் பேச்சும் இல்லாமல் இருக்கும் பண்டாரம் தான் இந்த செய்தியை மக்களுக்கு கூறியதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் சொன்னால் இந்த ஊர் ஜனங்கள் நம்பாமல் என்ன செய்வார்கள் என்று அதிர்ச்சி அடைகிறான்.உண்மையில் அவனுக்கு அந்த பண்டாரத்தின் மீது மிக்க மதிப்பு இருந்தது அதனாலேயே மனசில் பதைப்பு ஏற்பட்டது, ஒருவேளை அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று.முருகேசன் மீது பாட்டு எல்லாம் இயற்றப்பட்டு இருந்தது .பள்ளி கூடத்தில் அதை மனப்பாடம் செய்யாததற்காக வாத்தியார்களிடம் பிரம்படி வாங்கி இருக்கிறான் . அது மட்டும் இல்லை. ஒரு முறை அம்மாவின் தம்பி ஒருவர் தனக்கு பரிசாக தந்த பவுண்டன் பேனாவை தொலைத்து விட்டான். அப்பொழுது அம்மா “வஸ்திரம் தொலைப்பின் ஞானம் அஸ்திரம் தொலைப்பின் மரணம் ” என்று துவங்கும் முருகேசன் குறித்த பாடல் ஒன்றை பாடும்படி வற்புறுத்தினாள். அதைப் பாடினால் பேனா உடனே கைக்கு திரும்ப கிடைக்கும் என்பது அவளுடைய நம்பிக்கை. வீம்புக்காக அந்த பாடலை பாட மாட்டேன் என்று அம்மாவிடம் அடம் பிடித்தாலும், யாரும் பார்க்காத போது பள்ளி செல்லும் வழியில் கண்களை இறுக்கி மூடி ஏற்கனவே மனப்பாடம் செய்திருந்த அந்த பாடலை பாடி பார்த்தான்.
ஒரு பிரயோஜனமும் இல்லை இன்று வரை அந்த பேனா அவன் கண்ணில் படவில்லை. அதிலிருந்து அவனுக்கு முருகேசன் மேல் ஒரு வெறுப்பு .முருகேசன் ஒரு ஹம்பக் என்பதை புரிந்து கொண்டான்.பிறகு கல்லூரியில் படிக்கும் காலத்தில் பொன்னம்பல ஆசான் தான் அவனுக்கு பல விஷயங்களை புரிய வைத்தார் .முருகேசன் ஒரு காலத்தில் ரௌடியாக இருந்தவன் என்றும் பல கொலைகள் கொள்ளைகள் அவன் செய்திருந்த போதிலும் யார் கண்ணிலும் படாதபடி மாயமாக மறைந்து திரிந்தான். மக்கள் மனதில் அவன் மேல் ஏற்பட்டிருந்த பயம்தான் நாளடைவில் அவனுக்கு மரியாதையை உருவாக்கி பிற்பாடு நம்பிக்கையை வளர்த்து விட்டிருக்கிறது என்று பலவாறாக எடுத்து கூறினார்.இப்பொழுது தெரு ஜனங்கள் மத்தியில் மீண்டும் ஆரவாரம். நகருக்கு வெளியே புற வழியில் திடீரென வண்ணங்களைக் கொண்ட வித்தியாசமான பூக்கள் பூத்து வருவதை கண்டதாக அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள். இப்படி வினோத பூக்கள் நெக்லஸ் ஆக தோன்றும் பொழுது நான் மீண்டும் வருவேன் என்று முருகேசன் கூறி இருப்பதாகவும் சொன்னார்கள்.இப்பொழுது மிகுந்த கோபம் அடைந்த கதாநாயகன் பொன்னம்பல ஆசான் வீட்டுக்கு வேகமாக நடக்கிறான். திண்ணையில் அமர்ந்திருந்த ஆசானுக்கு இவனை பார்த்த உடனேயே இவன் என்ன கேட்கப் போகிறான் என்று தெரிந்து விட்டது.” நீ எதுவுமே கேட்க வேண்டாம் முருகேசன் வரப்போவது உறுதி அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் “அப்படின்னு சொல்றார்

அவன் அதிர்ச்சியோடு அவரைப் பார்க்க அவர் குற்ற உணர்ச்சியுடன் சுவரைப் பார்த்தார். பிறகு நடுங்கிய குரலில் “நான் முருகேசனுக்கு எதிராக செயல்பட்டது கூட அவனுடைய கட்டளைப்படி தான். இதெல்லாம் ரகசியம் என்னை எதுவும் கேட்க வேண்டாம்” என்றார்.
“நாளை அவன் வரும்போது அவனை எதிர்த்து கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்றும் அவனிடமிருந்து எனக்கு உத்தரவு வந்திருக்கிறது” என்றார் .நம் கதாநாயகன் ஆத்திரத்துடன் அவரை அடிக்க வந்த போது அவனைப் பிடித்து தள்ளிவிட்டு சட்டென்று உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார்.இப்பொழுது அவன் முற்றிலுமாக மாறிப் போனான் .தன்னை பல விதமாக கேவலமாக அவனே கற்பனை செய்துகொண்டு தெருவில் நடக்கலானான். இப்பொழுது தெருவில் புதுவிதமான ஒரு பதட்டம் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு தலை தெறிக்க ஓடினர். கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தவர்களிடம் விசாரித்த போது முருகேசனிடம் இருந்து அடுத்த தகவல் வந்திருக்கிறது என்று தெரிந்தது.பாவம் செய்தவர்களை மிருகங்களாக மாற்றுவது தான் முருகேசனின் இந்த வருகையின் பிரதான காரியம் அப்படின்னு ஒரு தகவல் வந்திருக்கு என்று எல்லோரும் பதட்டமாக பேசிக்கொண்டார்கள். எல்லோரும் அவரவர்கள் செய்த பாவத்தை எண்ணி நடுங்கி பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.ஊரே பீதியில் உறைந்திருந்த அந்த இரவு பொழுதில் அவன் மட்டும் நிம்மதியாக தூங்கினான். காலையில் எழுந்து பார்த்தபோது அந்த பிரபலமான ஆங்கில பத்திரிகையில் முருகேசன் வரவில்லை என்னும் செய்தி வந்திருந்தது.முருகேசன் என்னும் ஒரு நபர் ஊரை ஏமாற்றி பிழைத்திருக்கிறார் ஆனால் கதாசிரியர் ஒரு இடத்தில் கூட அவரை சித்தர் ,மகான், யோகி என்றோ அல்லது போலி சாமியார் என்றோ குறிப்பிடாமல் ஒரு சாதாரண மனுஷன் ஆகவே பாவித்தது வியப்புக்குரியது .தன் தந்தையிலிருந்து ஊர் ஜனங்கள் அனைவரும் முட்டாள்களாக திரிவது நிதர்சனமாக தெரிந்தும் தான் ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கும் கதாநாயகனின் மன அவதியும், அறச் சீற்றமும் மிக அருமையாக இந்த சிறுகதையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.