இந்திரநீலன் சுரேஷ்/அது ஒரு ‘கனல்’ காலம்..!

  • ☘️

திருச்சி பள்ளி நாட்களில், முழுப் பரீட்சை முடிந்து விடுமுறை துவங்கியதும் வெய்யிலில் விளையாடுவதும், வெய்யிலோடு உறவாடுவதும் சகஜமான விஷயம். திருச்சி வெய்யிலின் சிறப்புக்குக் காரணம், இமயமலைக்கெல்லாம் அண்ணனான, பில்லியன் வருடப் பழமையான மலைக்கோட்டை ! அதன் பிரம்மாண்டமான பாறைகள், சூரியக் கதிர்களைக் காதலித்து, அதனால் மேலும் உஷ்ணமாகி, ஊர் முழுவதும் வெப்ப மழையைத் தெறித்துக் கொண்டாடும்.

இருப்பினும் காலை எட்டு மணிக்கெல்லாம் St.ஜோசப் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புட்பால் ஆடத் துவங்குவோம். அதை முடித்து சிந்தாமணி படித்துறை சென்று காவிரியில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு, வரும்பொழுது எதிர்புறம் தாயுமானவர் கோயில் யானை மணி ஓசையுடன், அழகாக அசைந்து காவேரியில் உச்சிக்கால அபிஷேகத்திற்குத் தண்ணீர் எடுக்க வரும்.

‘பூச்சொரிதல்’ நிகழ்வுக்காக, மஞ்சள் ஆடை உடுத்திய பெண்கள் செருப்பில்லாமல் சமயபுரம் கோவிலுக்கு நடப்பார்கள். அடிக்கொரு தண்ணீர்ப் பந்தல் ‘நீருக்கும் மோருக்கும்’ வித்தியாசமில்லாமல் அழைக்கும்.

பத்தரை மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பாடு. அதன்பின் தெருமுனை நிழலில், சிகரெட் அட்டைகளை அடுக்கி சில்லால் குறி வைத்து அடித்து மற்றவர்களுடைய அட்டைகளைக் கவரும் விளையாட்டு. சக வயது பெண்கள் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பல்லாங்குழி ஆடுவதை அவ்வப்போது பார்ப்பதால் ஏற்படும் கவனக் குறைவால் பல லட்சங்களை (சீட்டு அட்டைகள் மூலம்) தொலைப்பது உண்டு.

உச்சி வெய்யில் நேரத்தில், நண்பன் வீட்டு மாடியின் நிலா முற்றம் (sorry) வெய்யில் முற்றத்தில் அமர்ந்து பழுப்பு நிறமான, பைண்ட் செய்யப்பட்ட கதை புத்தகங்களைப் படிப்போம். அங்கு வெய்யிலில் வேஷ்டி துணியில் காய வைத்திருக்கும் வடாம், மலர்ந்தும் மலராத நிலையில் சாப்பிடச் சுவையாக இருக்கும் (பழி,பாவம் காக்கைகளுக்குப் போய்ச் சேரும்)

நாளின் இடைச்செருகலாக, பிளாஸ்க்’கில் வரும் பால் ஐஸ், பச்சை பனங்கீற்றால் படகு போல் செய்து அதில் கொடுக்கும் நுங்குகள், தாத்தையங்கார் தோட்டத்து இமாம் பஸந்த் மாம்பழங்கள் இப்படி ஏதாவது கிடைக்கும். பல வீடுகளில் தண்ணீர் பானை வைத்து உள்ளே வெட்டிவேர் இட்டு, மடக்கு மூடி போட்டு, எவர்சில்வர் டம்ளர் வைத்திருப்பார்கள். அடியில் ஈர மணல்மேடு கட்டி, பானை மேல் ஒரு வெள்ளை துணி போர்த்தி, சாந்தி செய்து வைத்திருப்பார்கள். தண்ணீர் ஜில்லென்று இருக்கும்.

கோகோகோலா தலைமறைவாகி ’77’ என்ற பெயரில் ஒரு திரவம் பாட்டிலில் வர, உள்ளூர் ‘சிரப்’புகளுக்குச் சிறப்பு ஏற்பட்ட காலம் அது..
மலைவாசல், ஐயர் சந்தனக் கடைக்கு எதிர்புறம் இருக்கும் பெட்டிக் கடையில், எலுமிச்சம்பழம் பிழிந்து, நன்னாரி தூக்கலாக LR சர்பத் கிடைக்கும். சில சமயம், தெப்பக்குளம் தபால் ஆபீஸ் அருகில் இருக்கும் ‘மைக்கேல் ஐஸ்கிரீம்’ அழைக்கும்.

மாலை 3 மணிக்கு நேஷனல் ஹை ஸ்கூல் கிரவுண்டில் டென்னிஸ் பால் கிரிக்கெட். வீடு திரும்பும் போது தெருவே மல்லிகை மணம் வீசும். மல்லிகை சீசன் என்பதால் அரும்பு மல்லி ‘ஆழாக்கு படி’கணக்கில் வாங்கி வீட்டு வாசலில் அமர்ந்து தொடுத்துக்கொண்டிருப்பார்கள். தாழம்பூ வைத்துத் தைத்த ஜடைப் பின்னலோடு சிறுமிகள் கோவிலுக்கு (சிலர் போட்டோ ஷூட்..க்கு) போய்க்கொண்டிருப்பார்கள்.

பாட்டி, என் தங்கையை வீணை வாசிக்கவோ அல்லது அயிகிரி நந்தினி நொட்று பண்ணவோ சொல்லிக் கொண்டிருப்பாள்.
“நாய்க்கு வேலையில்ல.. நிக்க நேரமில்லை..னு இவ(ன்) சுத்திண்டு இருக்கான், இவனை நீ ஏதும் கேக்க மாட்ட.. என்னைத்தான் போட்டுப் படுத்துவ..” என்று தங்கை அங்கலாய்க்கும் சமயம் S ஆகி,

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு, நண்பர்களுடன் ஒரு விசிட் அடிப்போம். அடியில் சுடும் பாறையில் அமர்ந்தால், வெட்டவெளி காற்று பிய்த்துக்கொண்டு பறக்கும். காவிரியையும், காதலர்களையும் ஒரு சேர தரிசிக்கலாம்.

சிலநாட்கள், மெயின் கார்ட் கேட்டில் துவங்கி காவேரி பாலம் கடந்து திருவானைக்கோயிலுக்கு நடைப் பயணம் மேற்கொள்வதுண்டு. போவதற்கு இரண்டு காரணங்கள், அவையாவன: (1) நெய் வழிய ‘அயன்’ செய்து வைத்தார் போல இலையில் கட்டி வைத்திருக்கும் பிரசாத சர்க்கரைப்பொங்கல் (2) திருவானைக்காவல் பஸ் ஸ்டாப் ஒட்டி இருக்கும் கடையில் (குங்குமத்தை நெற்றியில் விபூதி போலப் பூசிக் கொண்டிருக்கும்) கடைக்காரர் போடும் வெங்காய பக்கோடா..!

சில நேரங்களில் யாராவது மாமாக்கள் மாட்ட, விபூதி பிரகார ‘பார்த்தசாரதி விலாஸில்’ செட் நெய் தோசை கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. ஆனால் தோசைக்குச் சற்று நேரம் காத்திருக்க வேண்டும். ஈர விறகின் புகை மண்டலத்துக்கு நடுவே சர்வர்கள் நடமாட்டம் சற்று மங்கலாகத் தெரியும் என்பதைத் தவிர ருசி கன ஜோர்..!

இரவு 8 மணிக்கு பிஷப் ஹிபர் பள்ளி மைதானத்தில் நடக்கும் அகில இந்திய (!) கைத்தறி கண்காட்சி மற்றும் கோடை விழாவுக்குள் நுழைந்தால், ஏதாவது மெல்லிசைக் குழுவினர், ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..’ என்று by default பாடலை ஆரம்பித்துக் கொண்டிருப்பார்கள். காமேஷ் ராஜாமணி, வீனஸ் எண்டர்டைன்ர்ஸ் வாய்த்தால், தமிழில்’ காதல் ராஜ்ஜியம் எனது..’ ஹிந்தியில் ஜெய்..ஜெய்..சிவ ..ஷங்க(ரு)…! என்று பாடக் கச்சேரி களைக்கட்டும்.

சில நாட்கள், ‘அன்னக்கிளி, மயங்குகிறாள் ஒரு மாது’ என ஏதோ ஒரு படம் செகண்ட் ஷோவிற்கு நழுவுவோம். திரும்பும் வழியில் பேலஸ், சென்ட்ரல் தியேட்டரில் மக்கள் திலகம் (அல்லது) ராஜா தியேட்டர், பிரபாத்தில் நடிகர் திலகத்தின் படம் பார்த்து விட்டு வரும் தெரு சீனியர்களிடம் மாட்டிக் கொள்வோம்.

நள்ளிரவில் வந்து வீட்டுத் திண்ணையில் வீழ்ந்தால், காலை 7 மணிக்குத் தெருவில் போகிறவர்கள் யாராவது செம்பு தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்புவார்கள்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாடு இருந்த காலம் என்பதால் நண்பர்கள் யார் பக்கெட்டில் காசு இருந்தாலும் அன்றைய தினம் சந்தோஷ தினம்தான்..!

அந்த கனல் காலமெல்லாம், வருடங்களால் நினைவடுக்குகளிலிருந்து கரைக்க முடியாத கனாக் காலம்..!