சுகன்யா சம்பத்குமார்/ நாளைய முதலாளி 

ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை . வாராவாரம் ராமசாமி தன் மனைவி கோமளாவுடனும் மகன் ரவியுடனும் எங்காவது வெளியில் சென்று வருவார் .
அன்று ரவி, இந்த வாரம் அப்பா எங்கு அழைத்துச் செல்வார் என்ற எண்ணத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தான் . வீட்டிற்குள் நுழையும் போது தன் அம்மா கண்ணீரோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான் , பதறியடித்து போய் “ஏன் அம்மா என்ன ஆச்சு ?? “ என்று கேட்டான் .அவன் அம்மா அழுதுகொண்டேன் ,”அப்பா வேலை பார்க்கும் இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்து ,தலையில் பலத்த காயத்துடன் வந்திருந்தார் .அவருடைய வலது கையிலும் பலத்த அடி . மருத்துவர் அவரை ஒரு மூன்று மாதங்களுக்கு ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்கிறார் “ என்றாள் அழுது கொண்டே .
அவனுக்கு ஒரு நிமிடம் அப்பாவைப் பார்த்தவுடன் ஒன்றுமே புரியவில்லை .அவன் அப்பாவால் பேசக் கூட முடியவில்லை ,அவர் கிட்டே சென்று அவர் கண்ணீரைத் துடைத்து விட்டு, அவர் கையை பிடித்து ஆறுதல் சொன்னான் ரவி . அடுத்த நாள் காலை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் நாள் இருந்த இருக்கமான சூழலினால் அனைவரும் மெதுவாகத் தான் கண் விழித்தனர் .
ராமசாமி எழுந்து போய் பல் விளக்க முயற்சி செய்யும்போது ,தலை சுற்றி கீழே சாய்ந்தார் . அவரை படக்கென்று போய் ரவி தாங்கி பிடித்தான் , அவரை மெதுவாக அழைத்துச் சென்று அவருக்குப் பல் விளக்கிக் குளிக்க வைத்தான் . அவருக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது ,தலையில் அடிபட்டதால் அவரால் முழுவதுமாக பேச முடியவில்லை , வாய் குளறியபடி
மனைவியைக் கூப்பிட்டார். அதற்குள் ரவி “அப்பா அம்மா உள்ள வேலையா இருக்காங்க , நான் உங்கள குளிப்பாட்டறேன் “ என்றான் . அவருக்கு ஆனந்தக் கண்ணீரில் பேச்சு வரவில்லை .
2 நாட்கள் கடந்தன , கோமளா ரவியைக் கூப்பிட்டு , “ரவி, அப்பா இப்பொழுது இருக்கும் நிலையில் வேலைக்குச் செல்ல குறைந்தது 6 மாதம் ஆகும் , அதனால் இன்று முதல் ஏதாவது ஒரு வேலையை நான் தேடிப்பார்க்கிறேன் “என்றாள் .
அவனும் சரி அம்மா , என்றான் . ஆனால் மனதிற்குள் “நம்மால் ஏதாவது உதவி புரிய முடிந்தால் நன்றாக இருக்கும் , ஆனால் படிக்கும் நமக்கு யார் வேலை தருவார்கள் ? என்று யோசித்தபடியே ,அம்மாவிடம் தன் நண்பன் வீட்டுக்குச் சென்று வருவதாகக்கூறிவிட்டுச் சென்றான் .
அப்பொழுது போகும் வழியில் காமாட்சி பாட்டி சிற்றுண்டி கடை இருந்தது , காமாட்சி பாட்டி அவனுக்கு மிகவும் நெருக்கம் ,உள்ளே சென்று பாட்டியிடம் பேசிவிட்டுப் போகலாம் என்று உள்ளே நுழைந்தான் , அங்குப் பாட்டி வருத்தத்தில் உட்கார்ந்திருந்தார் . என்ன பாட்டி என்று கேட்ட போது , அடுத்த தெருவில் இருக்கும் அடுக்குமாடி அலுவலகத்திற்குத் தினமும் தான் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு போய் அவர்களுக்குக் கொடுக்கும் ஆட்டோ அன்று வரவில்லை , காரணம் கேட்டபோது ஆட்டோ விபத்துக்குள்ளானதால் ,அதனுடைய ஓட்டுநர் பாட்டியிடம் வந்து இனி சிறிது நாளைக்கு உணவை என்னால் கொண்டு செல்ல முடியாது என்று கூறிவிட்டார் . அதனால் அன்று தயார் செய்த உணவை எப்படிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் .
இதைக் கேட்ட ரவி பாட்டி ,உங்களுக்கு விருப்பம் இருந்தால் , இந்த வேலையை என்னிடம் கொடுக்கிறீர்களா ?”என்று கேட்டான் , பாட்டி அதற்கு “ரவி இதில் 18 உணவு டப்பாக்கள் உள்ளன ,உன்னால் கையில் எடுத்துச் செல்ல இயலாது , உன்னால் முடியாது “என்றாள்
அவன் அதற்கு “இல்லை பாட்டி என்னால் முடியும் , என்னிடம் என் அப்பாவின் சைக்கிள் இருக்கிறது ,அதில் நான் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு கவனமாகச் செல்வேன் , நீங்கள் ஆட்டுக்காரரிடம் என்ன பணம் கொடுப்பீர்களா , அதையே எனக்கும் கொடுங்கள் ,இன்றைய தினம் என் வீட்டில் ,நான் ஒரு ரூபாய் சம்பாதித்தால் கூட ,அது என் அப்பாவின் மருந்து செல்வத்திற்கு ஆகும் ”என்றான் . பாட்டி இவனுடைய பொறுப்பான பேச்சைக் கேட்டு நெகிழ்ந்து போனாள் .அவளும் சரி என்றாள் . உடனே வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் இதைக் கூறினான் , முதலில் அவள் சம்மதிக்கவில்லை பிறகு வீட்டின் சூழலும் அவளுக்கு இன்னும் வேலை கிடைக்காததாலும் சரி என்றாள் .உடனே அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்து பாட்டி வீட்டிற்குக் கிளம்பினான் . அவளும் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு தயாராக இருந்தாள் , ரவி வந்ததும் அவனிடம் சைக்கிளில் ஒவ்வொன்றாக மாட்டிக்கொண்டு விரைந்து கிளம்பினான்.
அவன் வேகம் பாட்டியைப் பிரமிப்பில் ஆழ்த்தியது , அனைத்தையும் சொன்ன படியே 10 நிமிடத்திற்குள் கொண்டு கொடுத்தான் . திரும்பி வரும் போது , இதைக் கவனித்துக் கொண்டிருந்த காவலாளி ,ரவியைக் கூப்பிட்டு “என்ன டா தம்பி பண்ணுகிறாய் ? குழந்தைகள்’வேலை செய்யக்கூடாது என்பது உனக்குத் தெரியாது ? என்று திட்டினார் .
அதற்கு அவன் எல்லாவற்றையும் கூறினான் , காவலாளியோ “தம்பி உன் பொறுப்பான செயலை நினைத்துப் பாராட்டுகிறேன் ,ஆனால் குழந்தை தொழிலாளிகள் இருக்கக்கூடாது என்பது சட்டம் “ என்றார் .
அதற்கு அவன் சிரித்துக்கொண்டே “சார் ,நான் நன்கு படிக்கக் கூடியவன் , என் அப்பா தான் எனக்கு எல்லாம் ,அவர் இன்று இப்படி இருக்கும்போது என்னால் எப்படி சும்மா இருக்க முடியும் ,தவிர நான் வேலை பார்ப்பதால் படிப்பை விட மாட்டேன் , அயல் நாட்டில் படிப்பவர்கள் அனைவரும் பார்ட் டைம் ஜாப் பார்க்கின்றனர் , இங்கு என் அப்பாவையும் குடும்பத்தையும் படிப்பையும் பார்த்துக்கொண்டு நான் பார்க்கும் வேலை மட்டும் எப்படி சட்ட விரோதமாக இருக்கும் ? என்றான்
அவரால் பதில் பேச முடியவில்லை . ரவி தொடர்ந்தான் “சார் , உங்களிடம் இப்படி எதிர்த்துப் பேசுவதற்கு மன்னிக்கவும் , நான் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வருவேன் , என்னை இன்றைய தொழிலாளியாகப் பார்க்காதீர்கள் , நாளைய முதலாளியாகப் பாருங்கள் , என்று அவரிடம் விடை பெற்றுக்கொண்டு விருட்டென்று அடுத்த ரவுண்டு சாப்பாடு டப்பாக்களை எடுத்த வரச் சென்றான் , காவலாளி அவனை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தார் …