எஸ் வி வேணுகோபாலன்/சொப்பனவாழ்வில்….


ஆசி வாங்கச்
சென்று இருக்கவேண்டும்
மாமாவுக்கு எண்பது இன்று !

தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
மிகுந்து இருக்கும்
சுகந்தாவின் பிள்ளையென்றே 
மாமா எங்களை அழைக்கையில்

மூன்று தமக்கையரின்
ஒற்றைத் தம்பி
வீட்டின்

ஒற்றை ஆண் குழந்தை மாமா

செல்லமும் சண்டையும்
பாசமும் கோபமும்
நெருக்கமும் உருக்கமும்
ஏற்றமும் இறக்கமும்
விலக முடியாதபடிக்கு
விட்டுவிட முடியாத
புகார்களும் குபார்களுமாய்
சகோதரிகளோடு
ஒட்டி உருகிக்
கொட்டிக் கொட்டிப்
பேசிக் கொண்டிருந்த
கடைக்குட்டி மாமாவுக்கு

கடந்த செப்டம்பரில்
மூன்றாம் அக்காவும்
மரித்துப் போனபின்
தெரியாமல் போனது போலும்
இனி யாரோடு
கதைத்துக் கொண்டிருக்க என்று…

சின்ன சமையலறை
ஒற்றை ஹால்
ஐம்பது ரூபா வாடகையில்
பத்துக் குடித்தன
அந்த நாள் அடுக்கு வீட்டில்
படிக்கவும் வேலை தேடவுமாக
அக்கா மகன்களும்
மைத்துனர்களுமாய்
நாங்கள் ஐந்து பேர் உடனிருக்க

அத்தை மகள்
மாலதியைக்
கைப்பிடித்துப்
புது மண வாழ்க்கை
தொடங்கி
முரட்டு அன்பிலும்
உரிமைக் கண்டிப்பிலும்
எங்களை அரவணைத்தார் மாமா

அன்பின் பேருரு
மாமாவின்
காதல் கிளி
ஒரு 

வலி  வேதனை

வாட்டம் சலிப்பு
உணரவோ
உணர்த்தவோ அறியாத
புன்னகை செல்வம்
அன்புத் தாய் தான் மாமி

சிவாஜி போலவே மாமா
உத்தமபுத்திரன் முதல்

வியட்நாம் வீடு வரை
சலியாது

பேசிக் கொண்டே இருப்போம்
சினிமாக் கதைகள்

கதை வசனம்

தயாரிப்பு இசை  இயக்கம்
எல்லாம் அத்துப்படி மாமாவுக்கு  

பி லீலா பாட்டை
பி சுசீலா என்று

யாரும் சொல்லிவிட்டால்
பொத்துக் கொண்டு வரும் கோபம்

மாமாவுக்கு!

பாலிடெக்னிக் படித்து
கட்டிட வரைகலையில்
பின்னி எடுத்த மாமாவுக்கு
எப்போதோ படித்த
குளோரின் தயாரிப்பு
வேதியியல் சமன்பாடு மனப்பாடம்

சீட்டியடிப்பது பிடிக்கும் மாமாவுக்கு
எத்தனை எத்தனை
திரைப்பாடல்கள்
பொன் ஒன்று கண்டேன் முதற்கொண்டு…

துக்ளக் பேசும்படம் 

பொம்மை பிலிமாலயா 

எல்லாம் பிடிக்கும் மாமாவுக்கு 

நாங்களும் எடுத்துப் படிப்பது அறிந்ததும்

கொண்டு வருவது நிறுத்திக் கொண்டார்
காதல் மாத இதழ்

எந்த வயதுக்காரர்களோடும்
நட்பு செழித்து இருக்கும் மாமாவுக்கு
உறவுக்காரர் எல்லார் ஜாதகமும்

மனக் கணினியில் !

வாலாஜாபாத் கதைகள்
பேச ஆரம்பிக்கும் இரவுகளில்
ரவி அண்ணனுக்கும்
மாமாவுக்கும்
ஒரு போதும் தெரியாது
அடுத்தவர் தூங்க வேண்டும் என்பது

ராஜவீதி

பெருமாள் பாத்திரக்கடை தொடங்கி
ஆற்றங்கரை
பொன் செய் கொல்லர்
தட்சிணாமூர்த்தி குள்ளி

உரக்கடை குப்பன்

சேக்காடு லட்சுமணன்

என்று போய்
ரத்தினவேல் ஸ்டூடியோ வரை

அலசி முடிக்கும் போது

முதல் குறட்டை
மாமாவுடையதாக இருக்கக்கூடும்

வசந்த மாளிகை
சிவாஜியை
அன்றாடம் பார்த்து இருக்கிறோம்
மாமாவின் உடல் மொழியில்…

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலின்
‘கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் ..’
சரணத்தை
கண்ணதாசன் எழுதியது

சிவாஜிக்காக அல்ல
முன்பின் அறிமுகமற்ற
எங்கள் மாமாவுக்காக

கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லாது 
இன்பச் சக்கரம் சுற்றுகையில்
‘அதில் நான் சக்கரவர்த்தியடா’ என்று
டி எம் எஸ் விடுக்கும் கம்பீர முழக்கம்
அவருக்கானது தான்..

வேளச்சேரியில்
வசித்து வந்தாலும்
தாத்தா மரித்துப் போன
காஞ்சிபுரமே அவரது வேடந்தாங்கல்

இயலாது இருந்த காதல் பறவையை

இணைப் பறவை மாமி
அழைத்துப் போனது

காஞ்சிக்குக் கடந்த மாதம்

தாத்தா ஹெட்மாஸ்டர் கேசியாரும்
பத்தாணிப் பாட்டியும்
தப்பக் கூடாது பிள்ளை என்ற
ஐதீகத்தில்
பிச்சை என்று அழைத்து
சக்கரவர்த்தி என்று பெயரிட்ட
கம்பராஜபுரத்து அந்த
கம்பீர உயரன்

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து … என்று

பெருங்குரல் எடுக்கும்
எம் கே டி பாகவதரின்
பெரும் ரசிகன்

எண்பது தொட்டு
எங்களுக்கு
ஆசி வழங்கவும்
நேரமில்லா அவசரத்தோடு

நிறுத்திக் கொண்டார்
தனது சிறகடிப்பை
பத்து நாட்களுக்கு முன்பே

தனது வேடந்தாங்கலில்  

சொப்பனத்தில்
மட்டுமே இனி
பார்க்கக் காத்திருக்கிறோம்
எங்கள் சக்கரவர்த்தியை

அப்படியே 

அவர் எண்பது எட்டியதை 

அவரிடமே சொல்லி 

அவரது ஆசியைப் பெற்றுக் கொள்ளவும் !

********

8 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/சொப்பனவாழ்வில்….”

  1. இந்த மாதிரியான சமயத்தில் நான் வெளிநாட்டில் இருக்கிறேன். என்நிலை எப்படி எழுத்தில் வடிக்க முடியும். படிக்கும் போதே கண்களில் நீர் மேலும் எழுத இயலவில்லை

  2. பிச்சை புகினும் கற்கை நன்றே. ஆம் பிச்சை என்னும் அன்பு உள்ள ம் கொண்டவரும் என் அத்தை அத்திம்பேர் குடும்பமும் கொடுத்த அரவணைப்பின் காரணமாக நான் என் கல்லூரி படிப்பை முடித்து வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறேன். பிச்சை போட்ட பிச்சை…..

  3. அருமை. பட்டை தீட்டிய வாரமாக மின்னியது. மேலும் குடும்பத்தின் அமைப்பு பிரமாதம் நன்றி🙏💕

Comments are closed.