அம்மா மகளே …….. ..
உன் அப்பாவுக்கு பயம்
வந்துவிட்டது
உன் கண்ணீரை காணும்
துணிவு இல்லாததால்
வெளியே சொல்லவில்லை
மறைத்தபடி சிரிக்கின்றேன்.
உன் கண்களிலோ சந்தேகம்
உண்மையிலேயே
உன்னை கண்டதும் நான்
வலி மறந்து சிரிக்கிறேன்.
பிறந்து வளர்ந்த நாள் முதலாய்
நீ எனக்கு அம்மாதான்
என் அம்மாவும் நீயும் பலமுறை
“அம்மா” எனும் எனது அழைப்புக்கு
ஒருசேர பதில் கொடுத்ததையும்
அதை உன் அம்மா
கிண்டலடித்ததையும்
நினைத்துப் பார்க்கிறேன்
வலி மறந்து சிரிக்கிறேன்.
நான் ஒரு அம்மா பிள்ளையென
குறைக்கூறிய உன் அம்மா
நான் உனக்கும் ஒரு
அம்மா பிள்ளையாய் ஆனதில்
அகமகிழ்ந்து போனதையும்
பெருமையுற நின்றதையும்
எண்ணிப் பார்க்கிறேன்
வலி மறந்து சிரிக்கிறேன்
ஐந்தாறு மணி நேரம் உன்
அம்மா சமைத்து வைத்ததை
அவசரமாய் அள்ளி
என் தட்டில் வைத்து
பெருமையுடன் பார்த்த
உனது பரிவையும்
ஒதுங்கி நின்று ரசித்த
உனதம்மாவையும்
நினைத்துப் பார்க்கிறேன்
வலி மறந்து சிரிக்கிறேன்.
புகுந்த வீடு போகும்போது நீ
கண்கலங்க”அப்பாவை பார்த்துக்க”
என்று அம்மாவிடம் சொன்னது
நினைவில் அலைமோத
என்னால் சிரிக்க முடியவில்லை
அழுகை வருகிறது
மறைத்துக்கொண்டு சிரிக்கிறேன்.
இப்பொழுது எனது முறை
வார்த்தையால் சொல்ல முடியவில்லை
பார்வையால் சொல்லுகிறேன்
உன் அம்மாவை அம்மாவாக இருந்து
பத்திரமாக பார்த்துக்கொள்ளம்மா.
