
இந்தப் பிள்ளை
சரியாக சாப்பிடவில்லையென
நீ சொன்னால்
சாக்கில் பிடித்துப் போக
பூச்சாண்டி
காத்திருப்பான்.
கடைந்த தயிர்சாதத்தின்
எஞ்சிய கவளம்
மட்டும்
கடைசிக் கட்டி மாம்பழமாய்
மாறி விடும்
எனக்கு நீ ஊட்டும்
ஒருநொடிக்கு முன்னால்–
உன்னால்.
சேட்டை
அதிகம் செய்தால்,
பொய்யேதும்
சொல்லிவைத்தால்
இருளில்
புழக்கம் கொண்டால்
பூதம் ஒளிந்திருந்து
லபக்கித் தின்னும் —
என்னை…!
தடை செய்த
வெற்றிலைை
திருடித் தின்றால்
நாக்கிலே
பூச்சி வரக் காத்திருக்கும்.
வம்புகள் மேற்கொண்டால்
விசிறிக்காம்பிற்கு
வேலை வரும்.
பெண்களிடம்
பேசினாலோ
சதுக்க பூதம்
விழுங்கி வைக்கும்
காலத்தின்
ஓட்டகதியில்
யார் யாரோ மாறிப்போக
வளர்ச்சியென
தொலைந்து போனேன் நான்.
நீ கூட
படமாய் சிரிக்க
நீ சொன்ன அத்தனையும்
சத்தியமென்பதாய்த்தான் நம்பி
மனதளவில் மட்டும்
இன்னமும்
அப்படியேதான்
இருக்கிறேன் அம்மா..
என்றும் உன்
மடிதுயில் குழந்தையாக…!

Aha! Miga Arumai RK sir! 👏🙇♀️🙏🌺