
“என்றைக்காவது ஒருநாள் ஹேமா சுதாகரைக் கொல்லப் போறா, எனக்கு நிச்சயமா தெரியும்” என்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் போஸ்.
“எப்படிச் சொல்றீங்க சார்?” என்று ஆர்வமாகக் கேட்டார் புதிதாகச் சேர்ந்திருந்த இளம் சப்-இன்ஸ்பெக்டர்.
“ப்ரிசிடெண்ட். சந்தேகப்படும் நபருடைய வாழ்வில் முன்பு நடந்தது என்னன்னு தெரிஞ்சிருக்கணும். மனிதன் பழக்கங்களுக்கு அடிமை.
“இப்போ ஹேமாவை எடுத்துக்குங்க. அவளுடைய முதல் கணவன் விஸ்வேஷ்க்குப் பாய்சன் கொடுத்துக் கொன்னுட்டான்னு கேஸ் நடந்தது…”
“அதிலே விடுதலை ஆகிட்டாங்களே!” என்றார் இளம்.
அவரைப் பரிதாபமாகப் பார்த்தான் போஸ். இளம் மௌனமானார்.
ஹேமாவின் கணவன் சுதாகரை போஸ்க்குத் தெரியும். இருவரும் ஒரே க்ளப்பில் மெம்பர்கள். இருவரும் சேர்ந்து பேட்மிண்ட்டன் ஆடுவார்கள்.
ஒருநாள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் சுதாகர். ஹேமாவைப் பார்த்ததுமே போஸ் திடுக்கிட்டான்.
பின் சுதாகரே அவனிடம் பேசினான். “ஹேமா பாவம். அவளுடைய முதல் கணவன், என் நண்பன்தான். அவன் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்துக்கிட்டான். அவன் சொத்துக்காக ஹேமாதான் அவனைக் கொன்னதா கேஸ் போட்டுட்டாங்க. கேஸ் நிரூபிக்கப்படாம ஹேமா வெளியில் வந்துட்டா. அப்போ என் மனைவி காலமான நேரம்… ஹேமா பட்ட கஷ்டத்தைப் பார்த்து நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளைவிட நல்ல மனைவி எனக்குக் கிடைக்க மாட்டா!”
போஸின் சந்தேகங்கள் தீரவில்லை. ஆனால் ஒரு நிம்மதி. விஸ்வேஷின் சொத்து அந்தக் காலத்திலேயே சில கோடிகள் பெறும். சுதாகருக்குச் சொந்தமாக வீடுகூடக் கிடையாது. அதனால் சுதாகரைக் கொன்று ஹேமாவிற்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. இக்கட்டான நேரத்தில் தன்னை நம்பி மணந்ததால் நன்றியுணர்வுகூட இருக்கலாம்.
“எவ்ரி டாக் இஸ் அலவ்ட் ஒன் பைட்” என்றான் போஸ். இளம் புரிந்ததுபோல் தலையாட்டினார்.
காலம் செல்லச் செல்ல, க்ளப்பில் சந்திக்கும்போதெல்லாம் சுதாகரின் முகம் வாடியிருப்பதைப் போஸ் கவனித்தான். சுதாகர் சிரித்து மழுப்பினாலும், பங்குச் சந்தையில் பெரிய நஷ்டங்களை அவன் சந்தித்து வருகிறான் என்று தெரிந்துகொண்டான் போஸ். நெஞ்சில் இனந்தெரியாத குளிர் தோன்றியது.
“உனக்குத் தெரிஞ்ச இன்ஷூரன்ஸ் ஏஜண்ட் இருந்தா சொல்லேன்” என்று சுதாகர் ஒருநாள் கேட்க, உஷாரானான் போஸ். மெதுவாக விவரங்கள் கேட்டான். ஹேமா, சுதாகர் இருவருமே ஆயுள் காப்பீடு எடுக்கப் போகிறார்களாம், ஒருவரை மற்றவர் நாமினியாகப் போட்டு!
அவன் பயந்தது நடந்தேவிட்டது ஒருநாள். இரவு ஒருமணிக்குக் கால் வந்தது.
“இன்றைக்கு முழுக்க என்னவோ பதட்டமாகவே இருந்தாங்க. ரெண்டுபேருமா வெளியே போயிட்டு வந்ததும் டீயைக் கொண்டுவந்து இரண்டுபேருக்கும் அவங்களே விட்டுத் தந்தாங்க. அதில்தான் ஏதோ கலந்திருக்கணும்” என்றாள் வேலைக்காரி.
சரிந்து கிடந்த உடலைப் பார்த்தான் போஸ்.
சுதாகர் மாலைமாலையாய் அழுதான். “ஏன்? எதுக்கு இந்தத் தற்கொலை, போஸ்? ஒரு லெட்டர்கூட இல்லையே! குழந்தைகள் இல்லேன்னு அடிக்கடி வருத்தப்படுவா. அதுக்காகவா? அதைப் பற்றி நானே கவலைப்படலியே! நான் என்ன தப்பு செஞ்சேன்? கோபப்பட்டதே கிடையாதே! அவளே அன்பா டீயை எடுத்துக் கொடுத்தாளே! பாவி! பாவி! மாற்றிக் கொடுத்திருக்கக் கூடாதா! நான் நிம்மதியா போய்ச் சேர்ந்திருப்பேனே!”
கப் மாறித்தான் போயிருக்கிறது!
போஸ் ‘நீ எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியாது!’ என்று எண்ணிக் கொண்டான்.
**
என் சிறு வயதிலிருந்தே வசதியான வாழ்வு, தேவைக்கு அதிகமான பணம், விதவிதமான பொருட்கள் இவற்றில் கவர்ச்சி உண்டு. என் அதிர்ஷ்டம், எனக்கு வாய்த்த இணை ஓரளவு வசதியானவர். என்னைவிட வயதில் இளையவர் என்றாலும், மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா?
நாட்கள் செல்லச் செல்ல என்மீது சீறிவிழத் தொடங்கினார். “அவசியமில்லாத செலவு, நஷ்டம்” என்றெல்லாம் திட்டினார். எனக்குப் பணம் கொடுப்பதையே நிறுத்திவிட்டார்.
நான் டீ நன்றாகப் போடுவேன். மிளகும் ஏலக்காயும் மணக்க மணக்க, பொன்னிறமாய்த் தகதகக்கும். அன்று டீயைப் போட்டு என் கையால் கொடுத்தேன். மணமே இல்லாத ஒரு மருந்தை அதில் கலந்திருந்தேன் என்பது யாருக்கும் தெரியாதே! துள்ளித் துடித்து இறந்தது இணை.
போலீஸ்க்குச் சந்தேகம் வந்தது. அதிலிருந்தெல்லாம் தப்பித்துவிட்டேன். என்னைப் போலவே இணையை இழந்த ஒருவரைத் திருமணம் செய்து ஊர் வாயை அடைத்தேன்.*
கைநிறையப் பணம். மனம் நிறைய மகிழ்ச்சி. சொர்க்கமான இரண்டு ஆண்டுகள்.
இந்த இணைப் பறவையும் என் சிறகுகளை அடக்கப் பார்க்கிறதே! எனக்குத் தேவையான பணத்தை எடுக்க விட மாட்டேன் என்கிறதே! இணையே பிஸினஸ் பண்ணப் போகிறாராம். போதுமே, இவர் பிஸினஸ் செய்து! அப்படியே இருந்தாலும் நஷ்டந்தான் வரும். என் கைக்கு என்ன வரும்?
*
வீட்டில் வேலைக்காரி இருக்கிறாள். என்றாலும் இன்று நானே டீ போட்டுவிடத் தீர்மானித்திருக்கிறேன்.
இணை மறைந்தது. இனி நான் சுதந்திரப் பறவை!*
இன்ஸ்பெக்டர் என்னைப் பரிதாபமாகப் பார்க்கிறார். ‘நீ எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியாது!’ என்று அவர் எண்ணுவது எனக்கா தெரியாது!
என் பெண்மைத்தனமான உடலமைப்பும் அப்பாவித்தனமான முகமும் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாது. அவர் சந்தேகம் எந்தப் பக்கம் போக வேண்டும் என்று முன்பே முடிவுசெய்துதானே நான் இந்த இணையைத் தேர்ந்தெடுத்ததே!
இனி, சிறிதுநாள் அழுகை. பின் அடுத்த இணை.
இன்ஸ்பெக்டருக்கு என்மேல் பரிதாபம். பரிதாபம் தானா, அல்லது சந்தேகம் மெதுவாக…
பார்த்துக் கொள்ளலாம். ஒருநாள் டீ பார்ட்டிக்குக் கூப்பிட்டால் போகிறது!
இந்தச் சுதாகர் டீ போடுவதில் தலைசிறந்தவன்.
