பாலகுமாரனின் துவக்க கால நாவல்…./சுரேஷ் கண்ணன்

பாலகுமாரனின் துவக்க கால நாவல் வரிசையில் எனக்குப் பிடித்தமானவைகளில் ஒன்று ‘ஆனந்த வயல்’. முன்பு பல முறை வாசித்திருக்கிறேன்.

பிள்ளைப் பேறு இல்லாத ஓர் இளம் தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூகச்சிக்கல்களையும் அவர்களின் மனச்சிக்கல்களையும் துல்லியமாக கற்பனை செய்து எழுதிய நாவல். வாசித்த ஒவ்வொரு முறையும் மனம் கசிந்து நெகிழ்ந்திருக்கிறேன். இப்போது வாசித்தாலும் கூட அது என்னுள் சலனங்களை நிகழ்த்தும் என்றே நம்புகிறேன்.

பாலகுமாரனின் பலங்களில் ஒன்று நாவலை நகர்த்திச் செல்லும் விதம், அழுத்தமான பாத்திரங்கள், கொந்தளிப்பான சூழல்கள், சொகுசான நடை.

ஒரு காலக்கட்டத்தை நகர்ந்ததும், எந்தவொரு நாவலிலும் அவர் உள்ளே வந்து விடுவதும் இடையில் உபதேசிப்பதும் அதிகமாகி விட்டது. வெகுசன வாசகர்களுக்கு இது இடையூறாய் இல்லை. இதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். அப்பா, குருவே, என்றெல்லாம் தொழ ஆரம்பித்து விட்டார்கள். (இலக்கிய மதிப்பீட்டில் இது நகைப்புரிக்குரியதாக பார்க்கப்படும் என்பது வேறு விஷயம்).

*

என் இளம் வயதிலேயே ‘ஆனந்த வயல்’ நாவல் திரைப்படமானால் எப்படியிருக்கும் என பலவிதமாக கற்பனை செய்திருக்கிறேன். ‘தேவர் மகன்’ வந்திருந்த சமயம் என நினைவு. சிவாஜி, கமல், ரேவதி என்று அதில் வரும் casting-ஐ அப்படியே இந்த நாவலுக்கும் பொருத்திப் பார்த்திருக்கிறேன். ஏதாவதொரு திறமையான இயக்குநர் கையாண்டால் இன்றும் கூட செல்லுபடியாகும் நாவலே இது.

வசனகர்த்தாவாக வெற்றியடைந்தாலும் தான் ஏன் இயக்குநராக முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை பாலகுமாரன் சுயவாக்குமூலமாக தந்திருக்கிறார்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் ‘முன்கதைச் சுருக்கம்’ ஆகிய கட்டுரைத் தொகுப்பை வாசித்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும். திரைத்துறையில் நுழைய விரும்பும் இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுதிகள் இவை. தமிழ் சினிமாத்துறையின் நடைமுறை சார்ந்த விஷயங்கள் பலவும் உள்ளன.

பாலகுமாரனால் திறமையான கதாபாத்திரங்களை, உணர்ச்சி மிகுந்த சூழல்களை, வசனங்களை உருவாக்கி விட முடியும்.

ஆனால் நாயகியின் நாயக்குட்டி முதல் எல்லாவற்றையும் கட்டி மேய்க்கும் திறமையில்லை. தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டுமெனில் சில பல விழுமியங்களை, நுண்ணுணர்வுகளை கை விட வேண்டும் என்து பொதுவிதி. (விதிவிலக்குகள் இருக்கலாம்). பல நடைமுறை கபடங்களை, கள்ளங்களைக் கற்றாக வேண்டும். இந்த துணிச்சல், சாமர்த்தியம் இல்லாதவருக்கு அது சரிவராது.

*

பாலகுமாரனின் நாவல்கள் உடனான அறிமுகம் அதிகமில்லாதவர்களுக்கு நான் கட்டாயம் பரிந்துரைக்கும் நாவல்களில் ஒன்று – ஆனந்த வயல்.

‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தை இலவசக் காட்சியாக காட்டுவது முதல் ஜன்னி வந்த கிழவியொருத்தி தலைக்கு குளித்து சாகும் வைராக்கியம் வரை பல உணர்ச்சிகரமான சூழல்கள் உண்டு.

ஆனந்த வயல் – ஏதேனும் ஓர் இளம் இயக்குநரால் என்றெனும் திரைப்படமாகும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

2 Comments on “பாலகுமாரனின் துவக்க கால நாவல்…./சுரேஷ் கண்ணன்”

  1. பாலகுமாரனின் ரசிகையான எனக்கு இந்தப்பதிவு மகிழாச்சியைதாதருகிறது. மிக்க நன்றி.

  2. குடும்ப உறவுகளின் சுக துக்கங்களை மிகத் துல்லியமாக, கரிசனத்தோடு வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட படைப்பாளி பாலகுமாரன் அவர்கள்.

Comments are closed.