
தமிழ்ப் படைப்புலகில் கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர், நூலாசிரியர் என்று பன்முகத்தன்மையுடன் இயங்கும் அஜயன் பாலா பாஸ்கரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வாரம் ஒருமுறை தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பற்றிய இணையக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதன்வழியாக என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு வலுக்கட்டாயமாக கதைகளை வாசிக்க வைக்கவும் அவை பற்றிய பேச்சுக்களைக் கேட்கவும், பேசவும் வைக்கும் நவீன விருட்சம் அழகிய சிங்கருக்கு என் நன்றிகள்.
சிறுகதை என்பது எப்போதும் ஏதாவது ஒரு கதையை மட்டுமே சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை. சில நேரங்களில் கவித்துவமான வரிகள் சிறுகதைகளாகலாம். படைப்பாளியின் நுட்பமான பார்வையின் விளைவால் அங்கங்கு உதிரியாகக் கிட்டும் அனுபவத் தெரிப்புகளும் சிறுகதையாகலாம். அழகியலைத் தேடியலையும் வார்த்தைக் கூட்டங்கள் சிறுகதையாகலாம். இனிய அனுபவங்கள் மட்டுமின்றி கசப்பு நிறைந்த மன எழுச்சியும் கதைகளாகலாம்.
அஜயன் பாலாவின் “கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி” சிறுகதைத் தொகுப்பில் உள்ள “பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்” என்ற சிறுகதையின் கதையற்றுத் தெறிக்கும் மொழிநடையின் அழகு, உரையின் புரிதல் என்ற விஷயத்தைத் தாண்டி வாசகனை அப்படியே உட்கார வைத்து விடும் மாயத்தைச் செய்கிறது.
இந்தக் கதையை பின்நவீனத்துவ வகையை சேர்ந்த கதையாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகைமைக்கு ஆரம்பம், நடு, முடிவு என்பது கிடையாது. மையக்கரு என்ற எதுவும் கிடையாது. கலையை அதன் சட்டகத்திலிருந்து முழுமையாக விடுவிக்க முயற்சிப்பவை பின்நவீனத்துவக் கதை எனப்படுகிறது. எழுத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளை விரித்துப் போடும் மாயத்தை செய்வது இந்த பின்நவீனத்துவ வகைக் கதைகள். அதை இந்தியச்சூழலில் முயற்சித்து வெற்றி கண்டிருக்கிறார் அஜயன் பாலா என்பது இந்தக் கதையை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்து வார்த்தைகளின் இடுக்குகளில் உறைந்துள்ள அழகியலைத் தனியே எடுத்து ரசிக்க வைக்கும் மாயத்தை இக்கதை செய்துள்ளது.
கென்ய எழுத்தாளரான கூகி வாங் தியாங்கோ, குவாட்டமாலாவின் ரிகோ பெர்ட்டோ மென்சு, ஜப்பானிய எழுத்தாளரான ஹரூகி முரகாமி ஆகியோரைத் தொடர்ந்து கேப்ரியேல் கார்சியா மார்க்விஸ் எழுதிய One Hundred Years of Solitude போன்ற மேஜிகல் ரியலிசப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அன்றைய படைப்பாளர்களை பின்னவீனத்துவ பாணியில் துரத்தித் துரத்தி எழுத வைத்தது. ஜார்ஜ் லூயி போர்ஹே, இடாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே ஆகியோரும் மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து பல படைப்பாளிகளும் இந்த அமர்க்களத்தில் இணைந்தனர்.
1994-ல் தமிழவன் “நவீனத்துவமும் பின்நவீனத்துவமும்’‘ என்ற கட்டுரையை எழுதினார். இதுவே தமிழின் முதல் பின்நவீனத்துவம் பற்றிய கட்டுரை எனப்படுகிறது. தொடர்ந்து நாகார்ஜூனன், நோயல் ஜோசப் இருதயராஜ், க.பூர்ணசந்திரன், அ.மார்க்ஸ் ஆகியோர் பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதினார்கள். இதைத் தொடர்ந்தே பல்வேறு மொழிகளிலிருந்து பின்நவீனத்துவ/மாந்திரீக யதார்த்த அலையில் வெளிவந்த படைப்புகள் ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. தொடர்ந்து அதே காலகட்டத்தில், சதுரம், கல்குதிரை, மையம், வித்தியாசம், சிதைவு, பவளக்கொடி, போன்ற சிற்றிதழ்கள் பின் நவீனப் புனைகதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. நிறப்பிரிகை இதழும் பன்முகம் இதழும் பின் நவீனத்துக்காகவே இயங்கின.
தமிழவன், ரமேஷ்-பிரேம், சாரு நிவேதிதா, கோணங்கி, தி.கண்ணன் போன்றோர் பின் நவீன எழுத்தாளர்களாக அறியப்பட்டார்கள். தொடர்ந்து கௌதம சித்தார்த்தன், எம்.ஜி.சுரேஷ் போன்றோரும் இணைந்து கொண்டார்கள். இவர்களின் படைப்புக்கள் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் சக்கை போடு போட்டன. இது தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் பேரலையாக எழுந்தது.
இந்த அலை பற்றி ஆர்.அபிலாஷ் தன்னுடைய வலைத்தளத்தில் இப்படி பதிவு செய்திருக்கிறார் – “தொண்ணூறுகளில் பின்நவினத்துவ/மாந்திரீக யதார்த்த அலை உச்சத்தில் இருந்தது. அப்போது தமிழில் பல அற்புதமான சிறுகதைகள் எழுதப்பட்டன. தமிழ்க்கதை இதுவரை பயணிக்காத தடங்களில் எல்லாம் குச்சியால் ஒற்றை டயர் ஓட்டும் ஒரு குழந்தை போல ஓடியது.அஜயன் பாலாவின் சிறந்த கதைகளும் லத்தீன் அமெரிக்க அலையின் எழுச்சியில் விளைந்தவையே,
அத்தாக்கத்தின் எதிர்மறை விளைவு என்னவென்றால் சரம் சரமாய் கோர்த்த வாக்கியங்களை எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தார்கள். வாக்கியத்தை ஆரம்பித்து படித்து முடிக்கும்போது தான் இன்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று புரியும். அதற்குள் உங்களுக்கு மூச்சு வாங்கி கண் சொருகும். மார்க்வெஸ் போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளை இதுபோன்ற காம்ப்ளெக்ஸ் வாக்கியங்களில் ஆங்கிலத்தில் படிக்க அழகாக இருக்கும். ஆனால் தமிழ் நேரடியாக எளிய வாக்கியங்களுக்கேற்ற உணர்ச்சிகரமான மொழி. இக்கதைகளை தமிழில் மொழியாக்கின போது இங்கு பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே போல தமிழிலும் எழுதிப் பார்க்க முயன்றார்கள். உதாரணமாக, “அவன் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தான் என்பதை ‘வெயில் அனைத்து ஜீவன்களையும் வாட்டின. சாலையில் பசுக்கள் சுவரொட்டிகளைக் கடித்து இழுக்கும். சைக்கிள் மணிகள் ஒலிக்கும் சூழலில் வீட்டிற்குள் அனலடித்திட, ஜன்னல் வழி உள்ளிறங்கும் வெய்யில் பூனை தன் வாலை யெளித்து முதுகை வளைத்து மியாவ் என கரைந்தபடி அவனை நோக்கி கால்களை அகட்டி வைத்து நடந்து வர, அதன் குரலின் வெம்மையில் மனம் உயராய்ந்து பற்றிக் கொள்ள அவன் தன் அன்றைய தின வேலைகளைப் பற்றி மனதில் திட்டம் வகுத்தபடி வெளியே சாலையில் கடந்து போகின்றவர்களின் காலடித் தடங்களைக் கேட்ட படி பாட்டிலைத் திறந்து நீர் அருந்தினான் என்று எழுதுவார்கள்.
ஆனால் லத்தீன் அமெரிக்க கதைகளின் மேஜிக் உண்மையில் அந்த மொழியில் இல்லை. வாழ்க்கையில் இருந்தது என்பதை அவர்கள் அதாவது இந்தப் படைப்பாளிகள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த மொழியாக்க மொழியைப் பயன்படுத்தாமல் மாந்திரி யதார்த்தத்தை கதைக்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர் அஜயன்பாலாதான். அவர் எளிமையான நேரடியான தமிழில் எழுதினார். இந்திய வாழ்க்கையில் கூட சாத்தியமான சில அமானுஷ்ய விஷயங்களைக் கதையில் கொண்டு வந்து விடுவார்” – இது அபிலாஷ்.
அபிலாஷின் இந்தக் கருத்து அஜய்பாலாவின் இந்த “பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்” என்ற சிறுகதைக்கும் கச்சிதமாகப் பொருந்தும். பின்னவீனத்துவ/மாயாவாத யதார்த்த வகையில் அடங்கும் இந்த சிறுகதையில் சிறுகதையைத் தேடினால் எங்கும் கிடைக்காது. வெறும் மூன்று பக்கங்களில் எழுதப்பட்ட கதை. குழந்தைகளின் மனநிலையில் இருந்து கதைசொல்லி விஷயத்தை நகர்த்திச் செல்கிறார். கதையை அல்ல. காட்சிகளை நகர்த்திச் செல்கிறார்.
இதை வைத்துக் கதை என்று எதையும் சொல்ல முடியாது. இந்தக் கதையில் உள்ள காட்சிகளை விவரித்துக் கடக்க முடியும். அவ்வளவுதான். ஒரு நான் லீனியர் திரைப்படத்தின் சட்டகங்களாகக் காட்சிகள் கரைந்து கரைந்து செல்கின்றன. பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் பச்சை வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பல்லிகள் இவர்களையே உற்றுநோக்க கரப்பான் பூச்சிகளும் அங்கு இருக்கின்றன. வெளிச்சம் மெல்ல விரியத் தொடங்கிய போது அவர்களை விட பலமடங்கு உயரமாக வள்ர்ந்த நாணற்புதர்களிடையே .ஒடியாடி அவர்களைத் துரத்திய பெரிய பல்லிகளுக்கு வருத்தமேற்பட வைக்கிறார்கள்.
அளவற்ற சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருந்த பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான அவர்கள் எங்கிருந்தோ வந்த தேயிலைச் செடியின் வாசத்தினால் கள்ளன் போலீஸ் என இரண்டு குழுக்களாகப் பிரிந்து புதிய விளையாட்டொன்றைக் கண்டெடுக்கிறார்கள். ஒரு குழு கள்ளனாகவும் மற்றொரு குழு போலீசாகவும் பின்னர் அணிமாறி போலீஸ் கள்ளனாகத் துரத்தி விளையாடுகிறார்கள். அவர்கள் விளையாட்டில் இரண்டொரு பாம்புகள் துரத்துகின்றன. சிறு ஓடையை எக்கிச் சென்று தாண்ட முயற்சிக்கின்றனர். அப்படி தாண்ட முயற்சித்த போதுஓடை சற்று அகலமாக விரியத் தொடங்கியது. மீண்டும் அவர்கள் சற்றே அகலமான அந்த ஓடை நீரில் கால் வைத்த போது ஓடை விருட்டென வேகமாக விரிந்து வெள்ளப்பிரவாகமெடுத்து பெரும் நதியாக ஓடத்துவங்கியது. அந்தப் பக்கமிருந்தவர்களின் கூக்குரல் மட்டுமே எங்கோ தொலைவில் கேட்கிறது, நாங்கள் இங்கே இங்கே என்று அந்தக் குழுவினர் விடுக்கும் குரல் மிக மெலிதாகக் கேட்கிறது. பூப்போட்ட ஜட்டியணிந்த இந்தக் குழந்தைகளுக்குஇந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இவர்களைக் கடலில் இறங்கவிடாமல் தடுத்ததே இவர்களின் ஜட்டியிலிருக்கும் பூக்கள்தான். கால்கள் கடலில் இறங்கினால் ஜட்டியிலிருக்கும் பூக்கள் ஈரமாகிவிடுமோ என்ற அச்சம்மான் இவர்கள் கடலில் இறங்காமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள். பிற்பாடு அவர்கள் பல்வேறு கடல்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு துண்டுகளாக சிதறிப் போய்விட்டார்கள் என்தையும் கேள்விப்பட்டு வருந்துகிறார்கள்.
அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான இவர்கள் வெகுநேரம் யோசித்த பிறகு மீண்டும் நதியில் கால்வைத்த போது நதியின் சலசலப்பு நின்று அமைதியாக சூழல் உறைந்திருக்கிறது. அவர்கள் காலில் பெரும் அலைகள் வந்து தீண்டியபோதுதான் அந்த நதி கடலாக மாறிவிட்டதை உணர்ந்திருக்கிறார்கள். வெகுதூரத்தில் நட்சத்திரங்கள் மின்ன இப்போது அவர்களின் கூக்குரல் கேட்கவில்லை. பயமூட்டும் அந்தகாரம் பிரம்மாண்டமாக இவர்கள் முன்பு விரிகிறது.
ஒருவழியாக எல்லாம் இப்படி முடிகிறது.
“என்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள். பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான எங்களுக்கு தொலைந்து போன அவர்களை விட எங்கள் ஜட்டிகளில் இருக்கும் பூக்களின் மீதுதானே அதிகப்பிரியம்.
கதையென்று வகைப்படுத்த முடியாத இந்த பின்நவீனத்துவ/மாந்திரீக யதார்த்த வகைக் கதை முடிந்தது.
சரி. விஷயத்துக்கு வருவோம். இங்கே கதை எங்கு இருக்கிறது? ஆனாலும் ஏதோ ஒரு கதையாடல் மாயாரூபத்தில் எதையோ சொல்லிக் கொண்டே நம்மைப் பின்தொடருகிறது. குழந்தைகள்-அதுவும் பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்-அவர்களின் விளையாட்டுக்கள்- விளையாட்டின் இறுதியில் இருகரைகளாகப் பிரிந்து அதில் ஒரு குழு தொலைந்து கரைந்து போகும் மாயம். ஜட்டிகளில் உள்ள பூக்கள் நனையக்கூடாது என்று நதியில் கால்வைக்காமல் இக்கரையில் தயங்கி நிற்கும் குழந்தைகள் இவ்வளவுதான் கதை. இவ்வளவுதான் காட்சிகள். இவ்வளவுதான் இந்தக் காட்சிகளைத் துரத்திக் கொண்டு செல்லும் வாசக மனத்துக்குள் பரந்து விரியும் காட்சிகள்.
மாயாவாத யதார்த்த மொழிநடை இச்சிறு படைப்புக்கு அழகு சேர்க்கிறது. அபிலாஷ் மேற்கோளில் சொல்லிய படி மொழியால் ஜிலேபி எதையும் சுற்றவில்லை. எல்லா அனுபவங்களும் நேரடியான மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கியமும் ஏதோ ஒரு மாயம் போல கவித்துவ நிலையை அடைகிறது. இந்த வாக்கியத்தின் நேரடி அர்த்தத்தை தேடிச் சென்றால் வாசகனுக்குக் கிடைப்பது புரிதலற்ற ஒரு அவஸ்தை. ஆனால் இந்த வாக்கியங்களின் பேரழகில் மயங்கி நிற்கும்போது கிடைப்பது மாயாவாத உலகின் பல்வேறு காட்சிகள். பார்வைகள்.
இந்தக் கதை உருவானது பற்றி அஜயன் பாலா ஓரிடத்தில் சொல்கிறார்-
“இக்கதையை ஒரே வேகத்தில் 1995ல் ஒரு இரவு நேரத்தில் எழுதி முடித்தேன். அப்போது என் அறை பழவந்தாங்கலில் இருந்தது.வீட்டிற்குள் நுழைந்தபோது அறையின் கதவு திறந்திருந்தது. உள்ளே கவிஞரும் நண்பருமான யூமாவாசுகி அறியில் அமர்ந்து தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியில்தான் யூமாவாசூகியின் அறையும் இருந்தது. இருவருடைய அறையின் கதவுகளும், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தானாக பூட்டை இளக்கி கொடுக்கும் தன்மையை பெற்றிருந்தன. சிலசமயங்களில் அவர் என் அறையிலும் நான் அவரது அறையிலும் அமர்ந்து எழுதுவது வழக்கம் .அது போலத்தான் அன்று நான் வீட்டினுள் நுழைந்தபோது யூமாவாசூகி தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார். சட்டென என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த நானும் ஒரு பேப்பரை எடுத்து எழுதத்துவங்கினேன்.
அப்போது நான் வேலை செய்த அரசியல் புலனாய்வு பத்திரிக்கை அலுவலகத்துக்கு அன்று காலை வந்த சிலகடிதங்களும் செய்திகளும் என்னை பெருமளவு அலைக்கழித்துக்கொண்டிருந்தன. இக்கதை உருவாக்கம் பெற அந்த கடிதங்களே காரணம் .மேலும் அன்று யூமாவாசுகியிடம் இருந்த தீவிரமான படைப்பு மவுனமும் இப்படைப்பு எழுத முக்கியமானதொரு காரணியாக என்னுள் செயல் பட்டன”
ஒரு நல்ல கதானுபவத்தைக் கொடுத்த கதாசிரியர் அஜயன் பாலாவுக்கும் இக்கதை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் அழகியசிங்கருக்கும் என் கோடானுகோடி நன்றி.
(10-05-24)

அற்புதமான கதையனுபவப் பகிர்வு. உணர்வூப்பூர்வமாக கதைக்குள் பயணித்த அனுபவம். கதை வெளியான வருடம் கதை எழுத அமர்ந்த சூழல் என அபாரமான விவரிப்பு. மகிழ்ச்சி. “பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்”
கூட்ஸ் வண்டி கடைசி பெட்டியில் பயணிக்க தூண்டும் பகிர்வு. நன்றிகள் பல