மதுவந்தி/ தாண்டவராயன் -அஜயன் பாலா சிறுகதை ஒரு பார்வை

  

‘ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்ததாம்” என்று சொல்ல ஆரம்பித்து , பின் “ ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் “ எனச் சொல்லப்பட்ட கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்,பின்னர் எழுத்து வடிவில் சிறுகதையென அச்சிட்டு வாசிக்க ஆரம்பித்தது ஐரோப்பாவில் சிறுகதை தோன்றி வளர்ந்த நூற்றாண்டுகள் பிறகுதான். தமிழின் முதல் சிறுகதையென வ வே சு ஐயர் எழுதிய” ஆற்றங்கரை அரசமரம்” சொல்லப் படுகிறது .
“ பார்க்கப் போனால் நான் மரந்தான்,ஆனால், என் மனசிலுள்ளதையெல்லாம் சொல்கிறதானால் இன்னைக்கெல்லாம்சொன்னால் தீராது “ என்று அரசமரம் சொல்கிறதாக ஆரம்பிக்கிறது அந்த முதல் சிறுகதை. இப்படி ஆரம்பித்த தமிழ்ச் சிறுகதை வடிவம் , உத்தி, பொருள், நடை என எல்லா விதங்களிலும் பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டு , உலகின் எந்த மொழி படைப்புகளுக்கும் தாழ்வின்றி தமிழில் வாசிக்கப் படுகின்றன.. சுஜாதா சொல்கிற மாதிரி “ சிறுகதை என்பது சிறிதாக உரை நடையில் விவரிக்கப் பட்ட கதை.”
நேரடியாக கதை சொல்லும் உத்தியிலிருந்து மாறுபட்டு, மிகை யதார்த்தம் (surrealiam ) எனும் உத்தியில் தமிழிலும் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. விஞ்ஞானக் கதைகள் எதிர்க்காலம் பற்றிச் சொல்கிற கற்பனைக் கதைகள் என்றால், மிகை யதார்த்தக கதைகள் ஏதேனும் ஒரு நிகழ்வு , ஒரு வேறுபட்ட கதாபாத்திரம் இவற்றை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி நிகழ்வதைச் சொல்கிற கதைகள் எனச் சொல்லலாம். அஜயன் பாலாவின் “கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள “தாண்டவராயன் “ எனும் சிறுகதையைப் பற்றி நான் பேச இருக்கிறேன். இந்தச் சிறுகதை மிகை யதார்த்தவாதக் கதைக்கு ஒரு சிறந்த உதாரணம் எனச் சொல்ல முடியும். கதையின் முதல் வரியே வாசகனின் கவனத்தை ஈர்த்து யோசிக்க வைக்கிறது. “ கடைசியில் மட்டும் சற்றுக் கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோரத்தார் போல வீடுகள் : என ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சொல்லப் போனால் தாண்டவராயன் தெரு என்று தலைப்பு இருக்க வேண்டும். இந்தக் கதைக்கு
தங்களை ஒவ்வொருவரும் “தாண்டவராயன்’ என அழைத்துக் கொள்ளும் கர்வம் மிகுந்தவர்கள் வசிக்கிற தாண்டவராயன் தெருவில் ஒரு நாள் காலை 6.30 மணி ஆன பின்பும் சூரியக் கிரணங்கள் தோன்றவில்லை, தெருவெங்கும் இருட்டு விலகவில்லை. அலைபேசிகள் இல்லாத காலத்தில் நடக்கிற கதையெனத் தோன்றுகிறது. அந்த த் தெருவில் தாண்டவராயர்கள் “கடிகாரமும் கையுமாய் “ அரைத் தூக்கத்தில் எரிச்சலுடன் வாசலுக்கு வந்து ஏன் இப்படி இருட்டாகவே இருக்கிறது என கும்பல் கும்பலாய் பேசிக் கொள்கிறார்கள். ஒருவருக்கும் ஒன்றும் புரிவதில்லை, ஏன் இருட்டாக கிடக்கிறதென.
வெளியேயிருந்து ஓடிவரும் ஒருவன் ஓலமிட்டு அலறுகிறான் “ இது தாண்டவராயன் தெருவிற்கு மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கும் மோசமான நிலை. மற்ற தெருக்களில் எல்லாம் வழக்கம் போல் விடியல் நிகழ்ந்து வெளிச்சம் பரவிக் கிடக்கிறதாகச் சொல்கிறான். மனிதர்களுக்கே உரிய இயல்பின்படி, மற்றவர்களுக்கு கிடைப்பது/நிகழ்வது எல்லாம் தனக்கு கிடைக்காத/நிகழாத போது மிகவும் கொதித்துப் போய் ஏன் இப்படி என கூப்பாடு போடுவார்கள்.
அந்தத் தெருவிலும் அதே மாதிரி கூப்பாடு போடுகிறார்கள். கூடி கூடிப் பேசினாலும் இருட்டு விலகுவதாயில்லை. இருட்டைப் போக்க மாற்று வெளிச்சம் வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்து, எலக்ட்ரிக் கரண்ட் விளக்கு போடும் பண்டாரத்தை அழைத்து விளக்கு போடச் சொன்னால் வெளிச்சம் கிட்டும் என நினைக்கிறார்கள்.
அவர்களின் கூட்டு மனநிலை முன்பே தெரிந்த மாதிரி பண்டாரம் ஏற்கனவே அங்கு வந்து நிற்கிற மாதிரி தோன்றுகிறது. இருட்டிக் கிடக்கிற தெருவில் வெளிச்சம் தரவல்ல பண்டாரத்தை ஒரு தெய்வம் போலவே பாவித்து கெஞ்சி விளக்கை ஏற்றி வெளிச்சம் தர வேண்டுகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பொய்க்கும் விதமாக பண்டாரம் சொல்கிறான்,” இது இயற்கை சம்பந்தப்பட்ட விஷயம். இயற்கையின் நியதியில் தலையிட தனக்கு உரிமையில்லை. அவனுக்கு இடப்பட்ட கட்டளைப் படி கரண்ட் விளக்கு காலை 5 மணி வரை தான் எரிய வைக்க முடியும் . இட்ட கட்டளையை மீறுதல் இயலாது என்கிறான்.
கடைசி நம்பிக்கையான பண்டாரமும் இப்படிச் சொன்ன பின்பு தாண்டவராயர்கள் பயம் ,துக்கம், எல்லாம் கலந்து , ஏதாவது செய்யுங்கள் என வேண்டுகின்றனர். கொஞ்சம் யோசித்த பின் பண்டாரம் சொல்கிறான், உண்மையில் தாண்டவராயன் தெருவில் இருட்டு இல்லை, வெளிச்சம் பரவி க் கிடக்கிறது. ஆனால் தாண்டவராயர்களின் கண்கள் கட்கத்தின் இடையே புதைந்தும், செவிகள் முதுகிலும், மூக்கு முழங்கைக்கு மேலும் , வாய் தொப்புள் அருகிலும் மாற்றி வைக்கப்பட்டு, தலையற்ற வெறும் முண்டங்களாக அவர்கள் இருப்பதாகச் சொல்கிறான்
அவன் சொல்வதை நம்பாத அவர்கள் சந்தேகம் பயத்தோடு கைகளைத் தூக்கி கழுத்துக்கு மேலே தடவினால் வெற்றிடம்தான் உணர முடிகிறது. அதிர்ச்சியில் அலறுகிறார்கள். பண்டாரம் மெதுவாக பேசிக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு எல்லாம் முதலிலேயே தெரியும். ஆனால் , உண்மையைச் சொன்னால் அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பயத்தில் சொல்லாமல் விட்டு விட்டான். அவர்களின் முதுகுக்குப் பின்னால் இந்த விதிகளை மாற்றும் வாய்ய்பு இருக்கிறது . மந்திரம் போல சில வார்த்தைகளை எல்லோரும் சேர்ந்து சொன்னால் , மாற்றப்பட்ட கண்,, காது ,மூக்கு, வாய் ,தலை எல்லாம் மீண்டும் அதனதன் இடத்தில் ஒட்டிக் கொள்ள , வெளிச்சம் தரிசிக்கிற பார்வையும் கிடைக்கும் எனச் சொல்கிறரன். பண்டாரம் சொல்கிற எதையும் அவர்கள் கேட்கிற நிலயில் இல்லை. மெல்ல மெல்ல இருட்டு வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அவல நாடகம் போல கதை முடிகிறது.
பிளேக் நோய் போல , சுனாமி போல கோவிட்19 பெருந்தொற்று போல வழக்கம் அல்லாத ஒரு நிகழ்வு வெள்ளமெனப் பாய்ந்து வாழ்வைப் புரட்டிப் போடும் நேரத்தில் மனிதர்களின் எதிரிவினையை அதன் அவலத்தோடு சொல்கிற கதை. காப்பாற்றுவார் என நம்புகிற தெய்வம் போன்ற ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல் பேரிடர் ஏன் வந்தது என விளக்கம் சொன்னால் எவருக்கும் கேட்கப் பொறுமை இருப்பதில்லை. பேரிடரலிருந்து காப்பாற்று என கூக்குரல் இடுவது சுலபமாயிருக்கிறது . தப்பிக்கிற வழி சொல்லும் போது அதைக் கேட்டு முயற்சி செய்யத் தயாராய் இருப்பதில்லை.. மீள்வதற்கான எந்த முயற்சியும் எந்த வேலையும் செய்வதற்கு தயாராவது இல்லை. பேரிடரில் மூழ்கி இல்லாமல் போகிறார்கள்
மீண்டும் மறு வாசிப்பு செய்து யோசிக்க வைக்கிற கதை, கற்பனைக் கதை என்பதால் , முடிவு கொஞ்சம் மாற்றி ,நேர்மறையாக முடித்து இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றினாலும் , அதற்காக வேறு ஒரு கதைதான் எழுதவேணும் என்பதால் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் .

10.05.24.