பானுமதி ந/வினோத செய்தியாளனின் ஞாபக குறிப்புகள்

 

திரு அஜயன் பாலாவின் இந்தக் கதையை
ஜாலியாகவும் அணுகலாம், முடிந்தால்
ஆழமாகவும் அணுகலாம். கிண்டல், நக்கல்,
எள்ளல், மூடத்தனங்கள், பித்தலாட்டங்கள் என்ற
முகமூடிகளை மிக அழகாகக் கழட்டி வைக்கிறார். 
அரசியல் பத்திரிக்கையில் வினோத செய்தியாளன்
கதாநாயகன். ஒவ்வொரு வாரமும் புதனன்று
வெளிவர வேண்டிய அந்தப் பத்திரிக்கையில் மற்ற
செய்திகள் புனைவுகளாக இருக்க 
வினோத செய்திகள் அந்தப் புரட்டை மறைக்கும்
விதமாக வரவேண்டும். 

இந்தக் கதையில் அவர் சொல்லும் சம்பவங்கள்
எந்தக் கண்ணியில் கோர்க்கப்படும்? வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் கடந்து இரண்டு
சம்பவங்களிலும் சஞ்சரிக்கும் மனோபாவம் எந்த
வாசகனிடம் ரகசியமாக உள்ளதோ அது இந்தத்
தொடர்பை கண்டு கொள்ளலாம் என்று ஆசிரியர்
எழுதும் போதே அவர் பொடி வைக்கிறார் என்பதை
நாம் புரிந்து கொள்கிறோம். சிரித்தும்
கொள்கிறோம். அவர் சொல்வது இரண்டு
சம்பவங்கள் மட்டுமல்ல அந்த எண்ணிக்கையில்
இருந்தே பொய் ஆரம்பம் ஆகிறது.
வாய்மொழியாய் அவற்றை அவர் சொல்லி இருந்த

போதும், கற்பனைச் செடிகளை தழைக்க விடாமல்
கிள்ளி எறிந்து மனக்கிளர்ச்சிகள் இல்லாமல் எழுத
முயன்றிருக்கிறேன் என்பதில் கிண்டல் தொனி.

அவரது பத்திரிக்கைக்கு, இதுவரை ஒருவரும்
கேள்விப்படாத வேறு எங்கும் இதைப்போல் நடக்க
சாத்தியமற்ற செய்திகளாய், வேறு எங்குமே
பிரசுரம் ஆகாதவையாய் இருக்க வேண்டும்.
மொத்த பத்திரிகையின் விற்பனை பாரத்தையும்
தன் செய்திகளின் மூலம் தாங்க வேண்டிய
கட்டாயம் இவருக்கு. 

ஐந்து தலையுடன் பிறந்த குழந்தையைப் பற்றிய
செய்தி அதனுடைய புகைப்படம் இல்லாததால்
எடுபடவில்லை இவர் எவ்வளவோ சொல்கிறார்
குழந்தையை புகைப்படம் எடுக்க பெற்றோர் அதன்
ஆயுள் குறையும் என்று மறுத்துவிட்டார்கள்;
என்றாலும் எடிட்டர், சக ஊழியர்கள், வாசகர்கள்
யாரும் நம்பவில்லை. முண்டாசுப்பட்டி படம்
ஞாபகம் வருகிறதா? 

ஐந்து வாரம் கழித்து ஒரு திடீர் திருப்பம். ஒரு
கிராமம். அதில் உள்ள மக்கள் அனைவரும்
திருடர்கள். பெரும்பாலும் குடிசைகள் நிரம்பிய
கிராமம். பட்டப் பகலில் நடமாட்டம் இல்லாத
ஒன்று. ஆண்கள் பம்ப் செட்டையும், பெண்கள்

உணவுப் பண்டங்களையும் குறிப்பாக மீன்
குழம்பையும் திருடுகிறார்கள். அரசு அலுவலகம்
போலிருந்த பாழடைந்த கட்டிடத்தில்
சிறுவர்களுக்கு திருட்டுப் பயிற்சி
அளிக்கப்படுகிறது. பயிற்சி கொடுக்க
வெளியூரிலிருந்து வருபவர்கள் அவர்களும்
திருடித்தான் பாடம் நடத்துகிறார்கள். திருட்டுக்கு
ஏதுவாக எளிதில் எடுக்கப்படும் ஓடுகள்; அவை
சத்தமும் எழுப்பாது கீழே விழுந்தால்.
ஒற்றுமையான திருட்டுக் கிராமம். இவரின் கேமரா,
எழுதுகோல் திருட்டு போகிறது. அந்த ஊருக்கு
வருபவர்கள் நிச்சயமாகத் திருட வேண்டுமாம்
கதா நாயகன் சிறுவயதில் பென்சிலைக் கூடத்
திருடாதவன், இப்போது பெரிய திருட்டை செய்ய
வேண்டும் ஆனால் அந்த அன்பு கட்டளையை மீற
முடியவில்லை. வயோதிகர்கள் பாக்கு இடிக்கும்
இரும்புக் குழவியை திருடும் ஊரில், வயதைத்
திருட முடியாத ஏக்கத்தில் இருக்கும் ஊரில்
இவருக்கு பயமும் பய மற்றும் இருக்கிறது.
குறுவாள், கருப்பு பெட்ஷீட், முண்டா பனியன்,
பச்சை பெல்ட் லுங்கி சகிதமாக முகத்தை
மறைக்கும் கருப்பு துணியும் கட்டிக்கொண்டு சுவர்
ஏறிக் குதித்து கையில் கிடைத்த ஒரு பையை
சுருட்டி எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறார்
தாவிக்குதித்து. உள்ளே ஒரு பெண் குரல்
சிரிப்பதையும் ஒரு ஆண் அதை அடக்குவதையும்

காதில் வாங்கிக் கொள்கிறார். மறுநாள் இவர்
திருடிய பொருளை அவர்கள் பார்வையிடுகிறார்கள்
சவுரியும் இரண்டு கொண்டைகளும். இவருக்கோ
அவமானமாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு
தாலி சரடு சிக்கிக் கொண்டுள்ளது. கிராமத்தார்
வழக்கப்படி இவர் அந்தப் பெண்ணை திருமணம்
செய்ய வேண்டும். அந்தப் பெண் இவரைப்
பார்க்கிறாள், இவரும் அவளை. ஆனால்,
வெளியாருக்கு தங்கள் பெண்ணை கொடுக்க
கிராமத்தார் சம்மதிக்கவில்லை. ஆசிரியர் ஜாதி
பாகு பாட்டை நாசுக்காக இங்கே நுழைக்கிறார்.
பெண் இல்லாமல் அதுவும் இளம் பெண்
இல்லாமல் ஒரு சிறுகதையா? அதையும் ஆசிரியர்
நிறைவேற்றி விடுகிறார். இந்த திருட்டு கிராமக்
கட்டுரை பயங்கர வரவேற்பை பெற்றவுடன்
எடிட்டர் பாராட்டுகிறார். மற்ற நண்பர்களை
கைதட்டி அவரை பாராட்டச் செய்கிறார். கௌபாய்
தொப்பியை பரிசாக அளிக்கிறார். 

பிறகு இவ்வளவு சுவாரஸ்யமாக ஒன்றும்
நடக்கவில்லை. அப்போது ஒரு நாள் எடிட்டர்
இவருக்கு ட்ரிபிள் பைவ் சிகரெட் பாக்கெட்டில்
இருந்து ஒன்றை அளிக்கிறார். அது வேலையை
விட்டு ராஜினாமா செய்யச் சொல்லும் சூசகம். ஒரு
சிகரெட் எடுத்துக்கொண்டு அதை மறைத்துக்
கொண்டு ஹாலுக்கு இவர் வந்தாலும் மற்ற

நிருபர்கள், ஊழியர்கள் இதைப் பார்த்து தமக்குள்
சிரித்துக் கொள்கிறார்கள். ஐந்து என்ற எண் இந்த
ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும் என
நினைக்கிறேன். 5 வாரம் ஐந்து தலை அதைப்போல்
ஐந்து, ஐந்து ஐந்து என்ற சிகரெட். இது
விலகுவதைச சொல்வதால், ட்ரிபிள் தலாக் என்று
கூட எடுத்துக் கொள்ளலாமோ? 

பிறகு ஒரு ஸ்கூப் கிடைக்கிறது. எடிட்டரிடம்
முக்கியமான செய்தியைச் சொல்லாமல் சக
நிருபரின் கேமராவை எடுத்துக் கொண்டு இவர்
திருப்பதிக்கு போகிறார். திருட்டு கிராமத்தில்
திருடிய போதே மனசாட்சி உறுத்த திருப்பதிக்கு
ஒரு முறை போய்விட்டு வந்தால் சரியாக போகும்
குற்றமில்லாமல் ஆகும் என்று தன்னை
சமாதானப்படுத்திக் கொண்டவர் இவர். இதிலும்
கள்ள வழியில் அதிக பணம் சேகரித்து
ஏழுமலையானுக்கு அதில் ஒரு பங்கை காணிக்கை
செலுத்தும் மனிதர்களை இவர் கிண்டல்
அடிக்கிறார். 

இந்த மூன்றாவது செய்தி சென்னையில் இருந்து
விழுப்புரம் செல்லும் ஒரு பேருந்து
தொழுப்பேட்டில் இருந்து தடம் மாறி ராக்ஷச
வேகத்தில் மேல் திருப்பதியில் மலை முகட்டில்

நின்று கொண்டு அண்ணாந்து வெறித்துப் பார்த்துக்
கொண்டிருக்கிறது. 

இவர் மனம், டிரைவர் கண்டக்டர் பயணிகள்
என்னாகியரோ எனக்கு கவலைப்பட்டு போனால்
அங்கே பயணிகள் சிரித்து பேசிக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறார்கள். சந்தர்ப்பத்தை நழுவ
விடாத ஐந்தாறு பேர் மொட்டை அடித்துக் கொண்டு
லட்டு பிரசாதத்தையும் வாங்கிக் கொண்டு
வருகிறார்கள். இன்னும் சிலர் தரிசனத்திற்காக
கியூவில் நிற்பதாகவும் அனைவரும் வந்த
பிறகுதான் மாற்றுப் பேருந்தில் விழுப்புரம்
செல்லலாம் என்றும் பயணிகள் உற்சாகமாகச்
சொல்கிறார்கள் . தொழுப்பேடு வரைக்கும் வந்தது
தான் நினைவில் இருக்கிறது என்றும், எப்படி மேல்
திருப்பதிக்கு வந்தோம் என்று நினைவில் இல்லை
என்றும் அந்தப் பயணிகள் சொல்கிறார்கள். லட்டு
கிடைக்காத ஒரு பயணி மட்டும் சொல்கிறார்
தொழுப்பேடு தாண்டுகையில் டிரைவர் தன்
இருக்கையை விட்டு எழுந்து பஸ் கண்ட்ரோலில்
இல்லாமல் தாறுமாறாகப் போகிறது என்று
சொன்னதாகவும் பயணிகள் அவரை குண்டுக்
கட்டாகத் தூக்கி மீண்டும் அந்த சீட்டில் அமர
வைத்ததாகவும் அதற்குப் பிறகு என்ன நடந்தது
என்று தனக்கு நினைவில் இல்லை என்றும் இதை
சொல்வதற்காக லஞ்சமாக ஆசிரியர் கருப்பு

மார்க்கெட்டில் வாங்கிய லட்டு இரண்டை
பெற்றுக்கொள்கிறார்

அந்தப் பேருந்துக்கு காவலாக ஆந்திர போலீசார்
நிற்கிறார்கள். அரைநாள் அலைந்து அந்தப் பயணி.
இவர் டிரைவரை அடர்ந்த ஒரு காட்டுக்குள்
கண்டுபிடிக்கிறார் அவர் இவர் கேள்விகளுக்கு
பதில் சொல்லவில்லை எங்கேயோ வெறித்துப்
பார்க்கிறார் இவருக்கு பயமாக இருக்கிறது இவர்
பக்கம் திரும்பாமல் வேறு எங்கோ வெறித்துப்
பார்க்கும்போது பயம் சற்று குறைகிறது பிறகு
வாயை திறந்து சொல்கிறார். இந்தக் கதை ஒரு
இதழில் பிரசுரமாகும். அசந்தர்ப்பமாக நண்பனின்
அறையில் தங்க நேரிடும் ஒருவர் உன்னைப்
பார்க்க வரும் போது உன் அறை பூட்டிக் கிடக்கும்
பிறகு உன் தொகுதிகளை படித்த அந்த நபர்
உன்னைத் தேடி அலைந்து தேசாந்தரம் சென்று
இமயமலை அடிவாரத்தில் அபௌதிகமாக
இருப்பார் என்றும் இந்தக் கதையே அவரை
மையமாகக் கொண்டது என்றும் இதை எழுதும் நீ
ஆறு விரல் கொண்டதால் இவ்வாறு எழுதப்
படைக்கப்பட்டிருக்கிறாய் என்றும் சொல்லிவிட்டு
மௌனித்து விடுகிறார் அதற்குள் பத்து பதினைந்து
பேர் பூமாலை கற்பூரத் தட்டு  எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு முழு நீள காவி உடை அணிந்து
கொண்டு ஸ்ரீலஸ்ரீ டிஎன் 09 5634 ட்ரைவர் சாமி

மகாஜன பக்த கோடிகள் என்று சிவப்பு மையால்
எழுதப்பட்ட பேனரை எடுத்துக் கொண்டு
ஊர்வலமாக போகிறார்கள். ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ. அந்த
டிரைவரின் முகமோ எடிட்டரின் முகமாக
இருக்கிறது. பஸ்ஸின் முகப்பை மட்டும் படம்
எடுக்க அனுமதிக்கிறார்கள் அது சென்னை
விழுப்புரம் என்று காட்டுகிறது. கண்டக்டர் மற்ற
பயணிகளுடன் ஒரு சுவையான பேச்சில் ஈடுபட்டு
உள்ளார். அவர் கடமை தவறாதவர் அரசுக்கு
செல்ல வேண்டிய பணத்தை அதாவது
விழுப்புரத்தில் இறங்க வேண்டியவர்கள் மேல்
திருப்பதி வரை வந்திருப்பதால் அந்த டிஃபரண்ட்
அமௌண்டை பயணிகள் தர வேண்டும் என்று
வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார். நம் கேஸ்
சிலிண்டர் வாங்க பயோமெட்ரிக் தேவை என்று
இப்போது செய்தி வந்திருக்கிறது அல்லவா அது
உங்களுக்கு நினைவில் வந்தால் நான்
பொறுப்பல்ல.

எடிட்டரை சந்திக்கும் கதாசிரியர், முன்னர் அவர்
பரிசாகத் தந்த கௌபாய் தொப்பியை அவரது
மேஜை மேலே வைத்துவிட்டு வேலையை விட்டு
விலகுகிறார். உங்கள் திருசமன்கள் என்ன என்று
புரிந்து கொண்டு விட்டேன் என்று கதாசிரியர்
சொல்லாமல் சொல்கிறார். 

ஒண்ணுமே புரியல உலகத்துல என்னமோ
நடக்குது மர்மமாய் இருக்கிறது என்ற பழைய
பாடல் இன்றைக்கும் பொருந்துவது தான் மிகவும்
வினோதம்