
இந்திரன்
கரீபியன் சமையல்
நிலத்து நண்டு, வேகவைத்த நத்தை, புகையில் பொரித்த மீன் இவற்றோடு
தேங்காய்ப்பால், அன்னாசி, உருளைக் கிழங்கு, மிளகு
இவற்றோடு கொஞ்சம்
கண்ணீர், வியர்வை, நம்பிக்கை, துரோகம்
மூச்சு முட்ட கட்டி அணைக்கும் காதல் என்று
இளஞ்சூட்டில் சமைத்தெடுக்கப்பட்ட உணவு.
உலகெங்கிலும்
வாழ்க்கை ஓர் அசைவ உணவு.
வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா
கத்தி முள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா ?
எதுவும் செய்யலாம்.
அல்லது
சாப்பாட்டு மேசைக்குக் கீழே இருந்து கொண்டு
மெலிதாய் குரல் கொடுக்கும்
செல்ல பூனைக்குக் கூடப் பரிமாறி விடலாம்.
ஆனாலும்
நாம் கேட்காமலேயே
நமது அனுமதியின்றியே
நமக்கு பிடித்தோ, பிடிக்காமலேயோ
நமது மேசையின்மீது
சுடச் சுடப் பரிமாறப்பட்டிருக்கிறது வாழ்க்கை.
என்ன செய்யப் போகிறோம் இப்போது. ?
நன்றி : மிக அருகில் கடல் – இந்திரன் – யாளி பதிவு வெளியீடு – தொலை பேசி : 044 2472 1443 பக்கம் : 72 விலை : ₹ 70
