
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ 21ஆவது கூட்டத்தில் நான் வாசித்த கவிதைகள்
- ஏலி! ஏலி! லாமா சபக்தானி!
எங்கே உனது இஸ்ரவேல்?
எங்கே உனது தேவபிதா?
எங்கே உனது தெய்வீக உடல்?
உனது தீர்க்கமான பார்வையும்
வாளைப் போன்ற கூர்மையான
அந்த வார்த்தைகளும் எங்கே?
எங்கே உனது யூதாஸ்?
முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விலைபோனவன் எங்கே?
உன் சிலுவைப்பாட்டைக் கண்டு
கண்ணீர் விட்டழுத மரியாள் எங்கே?
உன் பாதம் பட்ட கல்வாரிமலை எங்கே?
எங்கே உனது தேவனுடைய ராஜ்ஜியம்?
வானரசைப் பற்றிய
உனது தீர்க்கதரிசனம் எங்கே?
நீ தோளில் சுமந்த சிலுவை எங்கே?
மனுசகுமாரனை கசையால் அடித்த கரங்கள் யாருடையவை?
ஆணி அறைந்த போதும்
உன் விருப்பம் அதுவானால்
அப்படியே ஆகட்டும் என
பிதாவுக்கு தன்னை முழுமையாக
ஒப்புக் கொடுத்த மகன் எங்கே?
தாகத்துக்கு தா எனக் கேட்ட
உனது பரிசுத்தமான இதழ்கள் எங்கே?
இயேசுவாக சிலுவையில் மரித்து
மூன்றாம் நாளில்
கிறிஸ்துவாக உயிர்த்தெழுந்த
யூதர்களின் ராஜாவே
நீ எங்கே? எங்கே? எங்கே?
- கடைசி இரவு
கொண்டாடுவதற்கு இங்கொன்றுமில்லை
பெருவெடிப்பிலிருந்து தொடங்கி
நாம் இங்கு இருந்து வருகிறோம்
எத்தனைப் பிறவிகளாய்
எதை எதையோ தேடிக்
கொண்டிருக்கிறோம்
எங்கே எதைத் தொலைத்தோம்
என்பதை மறந்து
இந்த நீண்ட நெடிய
பாதை எங்கே போய் முடியும்
இதன் ஆரம்பமும்
முடிவும் எங்கே
எனது ஆன்மா பயணிக்கிறது
நட்சத்திரங்களற்ற வானத்தில்
நிலவற்ற பூமியில்
வானம் ஞானத்தைப் பரிசளிக்கிறது
மண்ணோ அனைத்தையும்
பிடுங்கிக் கொள்கிறது
தப்பித்தவர்கள் இங்கு யார்?
யாருக்கு இங்கே விதிவிலக்கு?
உப்புப்பெறாத காரியத்துக்காக
உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பவன்
எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறான்?
நீலமலர்கள் எங்கே?
வெண்சங்கு எங்கே?
பனிமலைகள் எங்கே?
கைவிடப்பட்ட உலகத்திற்கு
இறுதித் தூதரும்
வந்து சென்ற பிறகும்
பிணக்குவியல்களுக்கு மேல்
பள்ளிகொண்டிருக்கும்
சவலைக் கடவுள்
எப்போது துயிலெழுவான்?
- அவர்கள் அப்படித்தான்!
இவர்கள் எனக்கொரு பொருட்டல்ல
இவர்கள் வேனலை வெறுப்பார்கள்
மழைக்காக ஒப்பாரி வைப்பார்கள்
தாகங்கொண்ட மழை
கொட்டித் தீர்த்தால் வயிறெரிவார்கள்
வருணனை ஏசுவார்கள்
பரிதி கிழக்கில் முளைப்பது போல்
கனவு காணுவார்கள்
இயற்கைக்கு பணியும் குணம்
இவர்களிடத்தில் இல்லை
இவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்
ஏட்டுச்சுவடியை படிக்கிறார்கள்
அதன்படி நடக்க மறுக்கிறார்கள்
இவர்கள் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்
மரணத்தை மறுதலிக்கிறார்கள்
இயேசுவே பரலோகத்திலிருந்து
இறங்கி வந்தாலும்
இங்கு கொய்யா மரத்தில்
மாங்காய் காய்க்குமா?
இவர்கள் ஆத்மனை அறிந்துகொள்ளாதவர்கள்
அழிகின்ற உடலுக்கு
ஒப்பனை செய்வதிலேயே
தன் ஆயுளைக் கழிப்பவர்கள்
விரிகடலும், ஆகாயமும்
வினா எழுப்பும் போது
இவர்கள் விக்கிரகங்களுக்கு
ஆராதனையும், விரதமும்
மேற்கொண்டிருப்பார்கள்
மண்ணாலான உடல்
மக்கித்தான் போகும் என்பதை
இவர்கள் மறந்துவிடுகிறார்கள்
இயேசும், புத்தரும் தோன்றி
ஞான நெருப்பை ஏற்றிவைத்த
போதும்
இவர்கள் பிணவறை இருட்டில்
இருப்பதையே பழகிக் கொண்டார்கள்
பிறந்தன இறக்கும்
என்பதை புரிந்து கொள்ளாத
இவர்களன்றோ
தினமும் பிணமெரியும்
மயானத்தில் வசிப்பவர்கள்!
