நான் கிரிக்கெட் ஆர்வலன் என்றாலும் ஐபிஎல் மேல் ஆர்வம் போய்விட்டது. அதிலும் சென்னை அணி மேல் எல்லாம் எந்த அட்டாச்மெண்டும் இல்லை. ஒரு தமிழ்நாட்டு வீரர் கூட இல்லாமல் என்ன சென்னை சூப்பர் கிங்க்ஸ் ?
ஆனால் தோனி எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர். சச்சினுக்கு பிறகு தோனி. சச்சினிடம் இல்லாத ஒன்று தோனியிடம் இருக்கிறது. அதுதான் தலைமைப் பண்பு மற்றும் கூல்நெஸ்.
ஜாக்கிசான் , சார்லி சாப்ளின் போன்ற ஒருசிலரை எல்லோருக்கும் பிடிக்கும். அதுபோன்ற ஒரு பர்ஸ்னாலிட்டி தோனி. இப்படி அமைவது ஒரு மேஜிக்.
ஒரு சில கிரிக்கெட்டரை டெக்னிக்கலாக ஷாட் ஆடுகிறார். அழகியலாக ஆடுகிறார். கிரிக்கெட்டை அதன் விதிகளுக்கும் நுட்பங்களுக்கும் உட்பட்டு ஆடுகிறார் என்றெல்லாம் சிலாகிப்பார்கள். அது தவறில்லை. அது ஒரு பார்வை , அது ஒரு ரசனை. ஆனால் கிரிக்கெட் ஆர்ட் மட்டுமல்ல, விளையாட்டு. இட் ஈஸ் எ கேம்.
ஒரு சிறபம் செதுக்குவது போல , ஒரு ஓவியம் வரைவது போல , ஒரு கவிதை எழுதுவது போல கிரிக்கெட்டை அணுக முடியாது. அப்படி பரதநாட்டியம் போல நயமாக கிரிக்கெட் ஆடுவேன் என்று ஒருவர் சொன்னால் நெட் பிராக்டீஸில் வேண்டுமானால் தனியாக செய்து கொள்ளலாம் அல்லது கையில் வந்து விட்ட டெஸ்ட் மேட்சில் செய்து பார்த்துக்கொள்ளலாம். இண்டர்நேஷனல் மேட்சில் நயம் , க்ளாஸிக் எல்லாவற்றையும் தாண்டி அணியின் வெற்றி முக்கியம். அந்த வகையில் தோனியின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரியது.
பல மேட்சுகளில் சேஸிங்கில்(பேட்டிங் & பௌலிங்) ஒரு மாஸ்டராக அணியை வழிநடத்தி இருக்கிறார்.
ஐபிஎல் அவருக்கு தேவையில்லாத சுமை.
அணியின் ஓனர் சீனிவாசனுடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நல்லுறவுதான் அவரை இந்த சீஸன் ஐபிஎல் ஆடவைத்திருக்க வேண்டும்.
என்னதான் தனிப்பட்ட உறவாக இருந்தாலும் இதைப்போன்ற ஐகான்கள் தங்களுடைய ஸ்போர்ட்ஸ் இமேஜுக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். பரவாயில்லை போகட்டும்.
இந்த சீஸன் ஆடியதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் தோனி மிகப்பெரிய இடம் பிடிக்காவிட்டாலும் (மொத்த கேரியரில் இது தேவையற்ற சறுக்கல்) கிரிக்கெட் ரசிகர்களின் அன்பை அள்ளியிருக்கிறார். இந்த அளவுக்கு ஒரு அன்பும் அட்டாச்மெண்டும் வெறெந்த கிரிக்கெட் வீரரும் பெற்றதில்லை.
தமிழ்நாடு இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தோனி ஆடும்போது இருக்கும் அதீதமான வரவேற்பைப் பார்த்தேன்.
தோனி கேரியரில் இந்த சீஸன் ஐபிஎல் எல்லாம் அவருக்கு ஒரு தமாஷ். இப்போது சச்சின் டூர் போகையில் அவ்வப்போது ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவது போல என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
தோனி சிரிக்கும்போது பார்த்திருக்கிறீர்களா ? எப்போதும் அதில் கள்ளம் கபடம் இருக்காது. அந்தச் சிரிப்பு இப்போது அபூர்வம். விளையாட்டு மற்றும் வெற்றிகளைத் தாண்டி , அந்தக் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புதான் இத்தனை மக்களை அவருக்கு மிக நெருக்கமானவராக உணர வைத்திருக்கிறது.


Super writeup.