மா. காளிதாஸ் கவிதை

1.
ஒரு நிகழ்வை
தனித்த விளையாட்டால்
கலைத்துப் போடும் குழந்தை
கடைசி வரை
எவர்க்கும் எதன் பொருட்டும்
தன் பெயர் சொல்லாமல்
இருப்பது தான்
அந்நிகழ்வின் பெருங் கொண்டாட்டமே.

2.
பரபரப்பான
ஒரு நிகழ்வின் மத்தியில்
“அம்மா, இங்கே வாயேன்…”
எனும் குழந்தையின் அழைப்பிற்குச்
சேலைத் தலைப்பைச்
சரி செய்தபடி, தாய்மையுடன்
ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறது
பேரமைதி.

3.
நிகழ்விலிருந்து வெளியேறி
‘விளையாட வா’ என
இன்னொரு குழந்தையை அழைக்கிறது குழந்தை.
குழந்தையாய்த்
தரையிறங்குகிறது நிகழ்வு.

4.
ஒட்டுமொத்தக் கூட்டத்தையும்
தன் செய்கைகளால்
கட்டுப்படுத்தும் குழந்தைக்கு
அம்மாவின் அதட்டு
கணநேர நாட்டுப்பண்.

5.
பலூன் சிதறல்கள்
கிழிந்த காகிதங்கள்
திரும்பச் செய்த சொற்களென
இன்னொரு நிகழ்வுக்குத்
தலைமை தாங்க
குழந்தையை அழைக்கிறது அரங்கு.
ஆடிக் களைத்த அசதியில்
கனக்கிறது அம்மாவின் மடி.

6.
நிகழ்வு முடிந்ததை மறுத்து
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
வெளியேறுகிறது
மேடை ஏற வெட்கப்பட்ட
குழந்தையின் ஏற்புரை.