தங்கேஸ்/பேய் பார்த்திருக்கிறீர்களா?

ஒருவரை இன்று நீங்கள் நல்லபடியாகப் பார்த்துப் பேசி சிரித்து பழகிப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். 

அதே நபரை நீங்கள் அடுத்த மூன்றாவது நாள் அதே இடத்தில் பார்க்கிறீர்கள்..ஆனால் அவரோ உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை .(சண்டை ஏதும் இல்லை ) இவ்வளவு ஏன்  நீங்கள் தெரிந்தவர் என்று கூட அவர் .உங்களிடம்  காட்டிக்கொள்ளாமல் வேறு எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எப்படி இருக்கும் உங்களுக்கு ?

போய் பேசிப்பார்த்தால் என்ன என்று இருக்கும் தானே ?

ஆனால் அதே நேரத்தில் அந்த  நபர் இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது உங்களுக்கு திடீரென்று ஞாபகத்திற்கு வந்தால்

தப்பி பிழைத்தால் போதும் என்று ஓட்டம் எடுப்பீர்கள் தானே

ஓட்டம் எடுக்க முடியவில்லை என்றால்  

குறைந்தது மயக்கம் போட்டாவது  விழுவீர்கள் தானே?

கேட்பதற்கே திகிலாக இருக்கிறதே நேரிலேயே நடந்தால் எப்படி இருக்கும் ?.

அப்படித்தான்  இருந்தது   எனக்கு

அன்னம்மா கிழவி இறந்து போன அன்று 

அந்த இறப்பு  என்னை எவ்விதத்திலும்  பாதிக்கவில்லை.

அந்த கிழவி  அடுத்த மூன்றாவது வீட்டு  வாசலில் உட்கார்ந்து கொண்டு வாய் நிறைய வெற்றிலையை குதப்பிக்கொண்டு வருவோர் போவோரிடமெல்லாம் பேச்சுக்கொடுக்கும் ரகம்  என்பதை தவிர வேறு ஒன்றும் ஞாபகம் வரவில்லை எனக்கு.

 ஆனால் என் பாட்டி பார்வதி கிழவி மட்டும் தான் போய் ஒரு பாட்டம் அழுது விட்டு வந்து அன்று முழுவதும் புலம்பிக்கொண்டிருந்தது.

வாசல் பந்தல் கூட இன்னும்  பிரிக்கவில்லை,

நானோ அடுத்த மூன்றாவது நாள் செகண்ட் ஷோ சினிமாவுக்குப்போய்விட்டு வீட்டுக்கு வருகிறேன்.

வீட்டுக்கு வரும் வரை எனக்கு கிழவி செத்த ஞாபகமே வரவில்லை.

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஏதேச்சையாய்  மூன்றாவது வீட்டைப்பார்க்க

அங்கே அன்னம்மா கிழவி இரவிக்கையற்ற  அதே வெள்ளைப்புடவை சகிதம்  வெள்ளை கேசம் தோளில் புரள அவரைக்கொடி பந்தலுக்கு கீழே உட்கார்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்தது

வழக்கத்திற்கு மாறாக என்னைப்பார்த்தும் பாராதது போல .வெறித்துக்கொண்டு முகத்தில் ஒருவித பிரதிபலிப்பும் காட்டாமல் உட்கார்ந்திருந்தது இலேசாக நெருட  சரி  நம்ம கிழவி தானே என்று உள்ளே நுழையப்போனவன்  ஏதேச்சையாய் 

பந்தலைப்பார்த்ததும்  நினைவு வர அதிர்ந்து போய் கிழவியைப்பார்த்தேன். 

அதற்குள் என் உடம்பில் குளிர் மைனஸ் டிகிரிக்குப்போயிருந்தது. உடம்போடு சட்டை ஒட்டி தெப்பலாக நனைந்திருந்தது. இதயம் கோழிச்சிறகடிக்கும் போது பார்த்திருக்கிறீர்களா அப்படி லப் டப் என்று எகிறி எகிறி அடித்துக்கொண்டிருந்தது.

இவ்வளவுக்கும் கிழவி எந்த ரியாக்க்ஷனும் இல்லாமல் என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டேயிருந்தது. 

சத்தியமாய் கதவை எவ்விதம் திறந்தேன் எப்படி வீட்டிற்குள் நுழைந்தேன் திறந்த கதவை எப்படி சாத்தினேன்  என்று எனக்கு எதுவுமே  எனக்கு ஞாபகம் இல்லை .அத்தனை அனிச்சையாய் இயங்கியிருக்கிறேன். பயத்தில் .தப்பித்தேன் பிழைத்தேன் என்று உள்ளே தாளிடும் போது வெற்றிலை உரலில்  வெற்றிலை இடிக்கும் சப்தம் கணீரென்று கேட்க 

என்னையறியாமலே ஒரு கதவை ஒருக்களித்து திறந்து எட்டிப்பார்த்தேன் 

கிழவி இப்பொழுது என்னைப்பார்த்து சிரித்தது.

சப்த நாடியும் ஒடுங்கிப்போய் டப்பென்று கதவைச்சாத்தினேன்.

காலையில் அம்மா வந்து பார்த்துவிட்டு காய்ச்சல் என்று சொல்ல 

என் பார்வதி பாட்டி வந்து தலையை தொட்டுப்பார்த்தபோது கொதித்துக்கொண்டிருந்தது. உடனே

புள்ள பயந்துருக்கான் போல இருக்கு என்றது பாட்டி

எப்படித்தான் பாட்டிகள் மனதிலிருப்பதை கண்டுபிடிக்கிறார்களோ? ஆச்சர்யம் உள்ளதை சொல்லுடா என்றது

ஒன்று விடாமல் சொன்னேன்   பாட்டி பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்து விட்டு இரு இந்தா வந்திடுறேன் என்று எழுந்து போனது.

கண்களை மூடிக்கொண்டேன்

சற்று நேரத்திற்கெல்லாம் பாட்டி திரும்பி வரும் காலடி ஓசை கேட்டது.

** தம்பி ** கண்களை திறக்க முயற்சி செய்தேன் 

டேய் தம்பி கண்ண திறந்து பாருடா    இந்தப்பாட்டியைப் பார்த்துத்தான் நேத்து நீ பயந்து போயிட்டியா  என்று கேட்டது. 

அவ்வளவு தான் இரத்தம் ஜிவ்வென்று இதயத்திற்குள் பாய கண்களைத்திறந்தேன்  பாட்டியின் தோளுக்குப்பின்னால் இருந்து ஒரு உருவம் பிரிந்து என் முன்னால் வந்து நின்றது  .

அச்சு அசல் அதே   நான் நேற்றிரவு பார்த்த அதே அன்னம்மா பாட்டி 

**தம்பி பயப்படாத நான் அன்னம்மா பாட்டி இல்ல  **

அவளோட உடன் பிறந்தவ … தங்கச்சி  ஆமா நாங்க இரண்டு பேரும் ரெட்டை  எங்களை யாரு முதல்ல பார்த்தாலும் குழம்பிப்போயிருவாங்க பயப்படாத நான் ஒன்னும் பேயில்லை என்று நடுங்கிக்கொண்டிருந்த  என் கைகளைப்பிடித்தது.

புன்னகைக்கும் இரண்டு பாட்டிகளையும் மாறி மாறிப்பார்த்து விட்டு ஒரு பெரிய மூச்சை விட்டு  ஆசுவாசமாய் நான் கண்களை மூடினேன்.