எஸ்ஸார்சி /அன்பே சிவம்

லாஸ் ஏஞ்சலிஸில்
கிரிபித்
விண் ஆய்வகத்தில்
எழுதியிருந்தது
டெலஸ்கோப் வழி
விண் வெளியைப் பார்த்துவிட்ட
எந்த மனிதனும் அடுத்தவனோடு
சண்டைக்கு நிற்பதை
ஆதரிக்கவே மாட்டான்
ஆண்டொன்றுக்கு முந்நநூறு
டிரில்லியன் டாலர்
உலக ராணுவச் செலவென்பது
ஆணவத்தின் விசுவரூபம்.
டிரில்லியன் என்றால்
கேட்கக் கூச்சமாயிருக்கும்
சொல்லிவிடுகிறேன்
மில்லியன் மில்லியன்
ஒன்று போட்டு பதிமூன்று
பூச்சியங்கள்
புத்தனைக் கும்பிடுவோம்
ஏசுவை காந்தியைத்
தெய்வ மென்பதில்
எமக்கு
எத்தனையோ சவுகரியம்
விட்டுவிடுவோம் அத்தோடு.

(25.5.24 அன்று ஜூமில்
வாசித்த கவிதை)