
மனித அரவம் தென்படாத
இந்தத் தெருவில்
தன்னந்தனியே
ஒருவண்ணத்துப்பூச்சி
பறந்து செல்வது
தனிமையின் துயரை
கூட்டவோ?
மனிதம் பட்டுப்போன நாட்களில்
துளிசி செடிகள் முற்றத்தில் தழைப்பதில்லை
வாயிற்கதவு திறந்து கிடக்கும் கோவில்களிலும்
மூலவர்கள் பிரார்த்தனைகளுக்கும்
செவிமடுப்பதில்லை
இரத்த வெறி கொண்ட புன்மையின் நாவுகள்
மதங்கள் தெய்வங்கள்
சாதிகள் கட்சிகள் என
வாழ்க்கையை
அழகாக சந்தைப்படுத்தும்போது
கடவுள்கள்
கண்ணாடிப் பெட்டிக்குள்
விற்பனைக்கு காத்திருக்கும்
கொலுப்பொம்மைகளாகிறார்கள்
நீங்களும் நானும்
ராட்சத காலடிகளின்
அழுக்குகளைத் தின்று கொண்டிருக்கும்
மீன்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்
கருணை சிறிதுமற்ற மன சாட்சி
முற்றிலும் பித்தேறி
பைத்திய தாண்டவம்
ஆடிக் கொண்டிருக்கிறது

தேன் வந்து பாயுது காதிலினிலே என புலன் மாறி புதியதாய் பாரதி சொன்ன மாதிரி” மனித அரவம் தென்படாத” என காதுகள் கேட்கும் அரவத் தை விழிகளுக்கு மாற்றிய முதல் வரி நிமிர்ந்து உட்கார்ந்து உன்னிப்பாய் கவிதை வாசிக்கத் தூண்டுகிறது. யோசிக்க வைக்கிற கவிதை.