மதுவந்தி/ தோல்வி

உன் ஆடை உலர்ந்த
துணிக் கொடியில் கிளிப்கள்
மலர்ந்திருக்கின்றன.

கண்ணாடியில் ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டு
உன் முகத்திற்குக்
காத்திருக்கிறது.

உன் மேஜையில்
பாதி வரைந்த ஒரு ஓவியம்
காத்திருக்கிறது,
பாதியில்
முடிந்து போன உன் வாழ்வைப் போல.

தேர்வில் தோல்விதான்
உன் முடிவுக்குக் காரணமென
எல்லோரும் சொல்கிறார்கள்.

உனதல்ல என் தோல்வியென
வலியோடு உணர்கிறேன்.

பாடமும் புரியாமல்
பள்ளியும் டியூஷனுமாய்
நீ அலைந்த போது
உடனமர்ந்து பேசி
உன் பிரச்னைகளைப்
புரிந்து உதவியிருக்க வேண்டும்.

இரவில் உறக்கமின்றி
மாடியில் நீ உலாத்திய வேளைகளில்
தோள் தொட்டு கை பிடித்து
பேசி ஆறுதல்
தந்திருக்க வேண்டும்.
தோல்வியின் வலி இப்போ
புரிகிறது.

கண்ணீர் காயாத கண்களோடு
கனக்கும் மனசோடு
உன் பாதி ஓவியம்
பார்த்தபடி
அமர்ந்திருக்கிறேன்.

25.05.24.