நிகிதாவின் ஆசை /ராஜாமணி

நிகிதாவின் ஆசை

  1. 5. 2024 அன்று விருட்சம் நடத்தும் 84 ஆவது கதைஞர்கள் நிகழ்ச்சியில் திருமதி .
    ஆ. மீனாட்சிசுந்தரமூர்த்தி அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் இருந்து நான் பேசிய “நிகிதாவின் ஆசை” என்ற சிறுகதையைப் பற்றிய எனது உரை.

கதை நடக்கும் இடம் ஜெர்மனியின் ஹாம் பெர்க் நகரம் . மிக எளிய நடையில் , ஆங்கிலக் கலப்பின்றி ,மிக இயல்பாக குழந்தைகளின் உலகத்தை கதையில் ஆசிரியர் அழகாக சித்தரித்து இருக்கிறார். ஐந்தாண்டு காலப் பணிக்காக ஜெர்மனியில் இருக்கும் மதன் , மதுரிமா இளம் தம்பதியரின் மூன்று வயது குழந்தைதான் நிகிதா. குழந்தை வளர்ப்பில் ஐரோப்பியர்களின் அக்கறை மற்றும் ஜெர்மனியில் இருக்கும் சமூக , கலாச்சார சூழலை கதையில் காட்டி இருக்கிறார் . முதியோர்கள் ,மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் இவர்களுக்காக பேருந்துகள் மற்றும் பொதுவெளியில் செய்யப்பட்டிருக்கும் வசதிகளையும் கதையில் நாம் காண முடியும். மதனின் வீட்டு அருகில் டைகர் பார்க் என்ற ஒரு உயிரியல் பூங்கா இருக்கிது.மதுமிரா குழந்தை நிகிதாவை , காலையில் குழந்தைகள் பள்ளியில் கொண்டு விடுவாள். பள்ளியில் இருக்கும் ஆசிரியர் ஜென்னி குழந்தைகளை அன்போடு வரவேற்க , நிகிதாவும் குதூகலகமாக பள்ளிக்குச் செல்கிறாள் .நிகிதாவுக்கு ,லேன் ,பீட்டர் ,லைலா …என்று பல குழந்தை நண்பர்களும் உண்டு. பள்ளிக்குள் அணிந்து கொள்வதற்காக தனியாக அங்கு காலனி உண்டு .லேன் என்ற சிறுவயது பையன் நிகிதாவிற்கு காலணிகளை எடுத்துக் கொடுக்கிறான். மாலை மதன் அலுவலகத்திலிருந்து வந்து நிக்கிதாவை அழைத்து வருவான். பள்ளி நேரம் போக பெற்றோர் வரும் வரை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள் . அதற்கு கூடுதல் கட்டணமும் உண்டு.
பிரசவிக்க இருக்கும் லேனின் தாயாரிடம் ,”எப்போ நாள் கொடுத்திருக்கிறார்கள்? .மதன் கேட்க, “அடுத்த மாதம் பத்தாம் தேதி .நிகிதாவைப் போல எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும். லேனுக்கு நிகிதா என்றால் ரொம்ப பிடிக்கும்.” என்கிறாள் .
எவ்வளவு இயல்பான உரையாடல். இது போன்ற உரையாடல் இங்கு சாத்தியமா ?என்று யோசிக்க தோன்றுகிறது . எதிரில் இருக்கும் மிருகக்காட்சி சாலை வாயிலுக்கு முன், ஒரு 20 அடி உயர ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தைப் பிடித்துக் கொண்டு ,தொப்பி அணிந்த ஒரு மனிதன் உட்கார்ந்து இருப்பது போன்ற சிலை இருக்கிறது.
“அப்பா அதுக்கு கழுத்து வலிக்குமப்பா?”.
குழந்தைகளுக்குத்தான் சிலையாக இருந்தாலும் , இரக்கப்படும் மனநிலை உண்டு . இரண்டாவது தளத்தில் இருக்கும் இவர்களது வீட்டுக்கு வந்ததும் நிகிதா வேகமாக படிகளில் ஓடுகிறாள் . மதுரிமா நிகிதாவைப் பார்த்து “சத்தம் இல்லாமல் நடந்து வா , மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கிற போகிறது” என்று செல்லமாக கடிந்து கொள்கிறாள்.ஆனால் முதியவர்களே வாழும் அந்த குடியிருப்பில் இவர்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் ஜெர்மானிய மூதாட்டி எங்களுக்கு சங்கடமில்லை .. இந்த குழந்தை” இந்த குடியிருப்பின் இளவரசி “என்கிறார் .

“பீட்டர் வீட்டில் டாகி இருக்கு.லேன் வீட்டில் மிக்கி இருக்கு. எனக்கும் ஒரு டாகி (நாய்) வேணும்பா ” என்கிறாள். ஒருநாள் மதனிடம் , ஜென்னி,” உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்லி , உங்கள் வீட்டில் புலி வளர்க்கிறீர்களா ?நிகிதா சொன்னாள் “என்று கேட்க, “இல்லையே ” என்று சொல்லுகிறான் .

“இல்லை! நிகிதா சொல்கிறாள் .நீங்கள் வனவிலங்குகளை வீட்டில் வளர்க்க கூடாது. சட்ட ப்படி அது தவறு” என்கிறாள் . “நான் தான் புலி வளர்ப்பதாகச் சொன்னேன்” என்று நிகிதா சொல்ல , அதற்குள் லேன், இல்லை இல்லை பீட்டர் தான் நிகிதா வீட்டில் புலி இருப்பதாகச் சொன்னான் .நிகிதா வீட்டு புலி நிகிதாவிற்கு பூப்பறித்துக் கொடுக்குமாம், நீகிதாவோடு விளையாடுமாம் ,பாட்டுப் பாடுமாம் .புலிக்கு பர்கர் ரொம்ப பிடிக்கும் ,என்று பீட்டர் தான் சொன்னான் . மதன் நிகிதாவிடம்ன் ” நம் வீட்டில் புலி இருக்கிறதா?” நிகிதா இல்லை என்று தலையசைத்தாள். ஜென்னி அனைத்து குழந்தைகளையும் அழைத்து,” இல்லாததை எல்லாம் சொல்லக்கூடாது” என்று சொன்னதும் எல்லோரும் “தப்பு -தப்பு” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். நிகிதா மதனிடம் , “நாய் ,பூனையெல்லாம் எல்லோரும் வளர்கிறார்கள். புலி பாவம் தானே !யாரும் வளர்க்கவில்லையே! அதனால் தான் நம் வீட்டில் புலி இருப்பதாக சொன்னேன் ” என்கிறாள் .ஜென்னியும் மகிழ்ந்து மகிழ்ச்சியுடன்,” சரி! எல்லோரும் டைகர் பார்க்க போய் புலியைப் பார்த்துட்டு வருவோம் “என்கிறார். குழந்தைகள் குதுகலமாக மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்தக் கதையில் குழந்தைகளின் உலகம் எவ்வளவு சிறப்பானது, கள்ளம் கபடம் அற்றது ,குழந்தைகள் உலகத்தில் புலிகள் பூப்பறிக்கும், பாட்டு பாடும், பர்கர் சாப்பிடும் . அது மட்டுமல்ல சிலையாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கிக்கும் குழந்தைகள் இரக்கப்படும். குழந்தைகள் உலகமே உற்சாகமானது .உவப்பானது. பெரியவர்களும் குழந்தைகளோடு இருக்கும் பொழுது, முகமூடி அணிந்து கொள்ளத் தேவையில்லை . எல்லோர் மனதில் இருக்கும் குழந்தைத் தன்மையை குழந்தைகள் வெளிக் கொண்டுவரும் .
ரொம்ப அழகான அழகான சிறுகதை. ஆசிரியருக்கு பாராட்டுக்கள் . அழகே சிங்கருக்கு நன்றிகள் .


.சென்னை