ஹரணி/மியாவ்.. மியாவ்..


அவன் அந்தப் பூனையைக் கொல்வதாக உறுதியான முடிவெடுத்து மூன்று மணிநேரம் கழிந்திருந்தது. எப்படியும் இன்றிரவு அந்தப் பூனையில்லாமல் உறங்குவது என்றுதான் தீர்மானம் பண்ணியிருந்தான். அதற்கு முன்னதாகக் கழிந்த பொழுதுகளில் பின்வரும் மூன்று குறித்து தீவிர யோசனையும் இருந்தது.
  1. அந்தப் பூனை வந்த சம்பவம்
  2. அந்தப் பூனை அவனிடம் பழகிய விதம்.
  3. பொதுவாக பூனையின் குணங்கள்.
    பக்கத்து வீட்டில் ஒரு மணல் வண்டிகாரன் குடியிருக்கிறான். அவனும் அவன் மனைவி மட்டுமே. இரண்டு பேருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. அவள் எங்கோ தனியார் சூடம் தயாரிக்கும் கம்பெனியில் இருக்கிறாள். அவன் மணல் வண்டி ஓட்டுகிறான். இதற்கு முன்னதாக அவன் திருட்டு மணல்தான் அடிப்பான். அவன் மட்டுமல்ல அவனையொத்த மணல் வண்டி ஓட்டுபவர்கள் எல்லாருமே. எல்லோரும் மாட்ட இவன் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்தே வந்திருக்கிறான். அதைப் பலமுறை பெருமையாகவும் அக்கம் பக்கம் பகிர்ந்துகொண்டேயிருப்பான். அதற்கு மண்விழுவதுபோல மாட்டி, சிறைக்குப்போய மூன்று மாதங்கள் இருந்து இப்போது பிணையில் இருக்கிறான். அவன்வீட்டில்தான் தெருவில் உள்ள எல்லோருக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் குடியிருந்தன. மாடுகள், ஆடுகள், கோழிகள், பூனைகள், நாய்கள் என் எல்லாவற்றையும் வளர்க்க அவை வசிப்பதற்கு அந்த வீடும் மற்றபடி எல்லாவற்றும் தெருவின் எல்லா வீடுகளையும் பயன்படுத்தத்தொடங்கின. தினமும் பஞ்சாயத்து ஆகும். கவலைப்படமாட்டார்கள். அவரவர்கள் வாசலில் செடிகளையும் கொடிகளையும் பாதுகாக்கப் போராடவேண்டியிருந்தது.
    அவன் வளர்த்த பூனைகளுள் ஒன்றுதான் மேற்சுட்டிய பூனை. அது பெண்பூனை வயிற்றில் கர்ப்பம் தரித்துக் குட்டிகளுடன் எங்கே போடலாம் குட்டிகளை என்று தேடித்தேடி வீடுவீடாய் அலைந்தது. எல்லோரும் கண்கொத்திப் பாம்பாய் அதை அடித்து விரட்டிக்கொண்டேயிருந்தார்கள். எந்த நிமிடமும் குட்டிப்போடும் நிலையில் கத்தியபடி சுற்றிச்சுற்றி வந்தது. அன்று அவன் சற்றே கண்ணயர்ந்துவிட்டான். அதிகாலையில் முன் வராந்தாவில் பூனைகள் சப்தம் கேட்கப் பாய்ந்து கதவைத் திறந்து பார்க்க அந்தப் பூனை நாலைந்து குட்டிகளை வராந்தாவில் போட்டுப் படுத்துக் கிடந்தது. இவனுக்கு ஆத்திரம்வர அந்தத் தாய்ப்பூனையை அடிக்கக் குச்சி போன்ற பொருளைத் தேடினான். அதற்குத் தெரிந்தும் அது தப்பித்துவிட முயன்று வெளியே தாவியோடியது. குட்டிகள் தவித்து அலைய அவனுக்குப் பரிதாபம் வந்துவிட்டது. அந்தப் பரிதாபத்தைச் சரியாக அந்தப் பூனை பயன்படுத்திக்கொண்டது. அப்புறம் குட்டிகளைத் தூக்கிக்கொண்டு எங்கோ போய்விட்டது. இரண்டு நாள் கழித்து மியாவ் என்று குரல் எழுப்பியபடி அவனைப் பார்த்து தலையை அண்ணாத்தியிருக்க வாவென்று கூப்பிட்டுக்கொண்டான். முப்பது நாள்களில் அவனுடன் நன்றாக ஒட்டிக்கொண்டது. ஆனால் மறந்தும்கூட ஒரு சிறு கீறல்கூட அவன்மேல் பட்டதில்லை. ஆகவே அவனும் ஒட்டிக்கொண்டான். உண்ண, உறங்க என்று அந்தப் பூனையோடு.
    எப்போது அவனைக் கண்டாலும் அது சட்டென்று தாவி அவன் மேல் ஏறிக்கொள்ளும். முன்கால்களை அவன் வலது தோள் வழியாகத் தொங்கவிட்டு வாலை அவன் இடது கழுத்துப் பக்கம் அணைத்ததுபோல் நெருக்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக்கொள்ளும். பின்கழுத்து கழலை வந்தவன்போல் அவன் எங்கு சென்றாலும் அப்படியே அசையாமல் உடும்புபோல் பிடித்திருக்கும். அவனுக்கு வாலை கழுத்து அணைத்ததுபோல போட்டது பிடிக்காமல் போனதுதான் அந்தப் பூனையைக் கொல்வதற்கான காரணங்களில் முதல் காரணமாக அமைந்தது. ஏனென்றால் அந்தப் பூனையின் ஆசனவாய்அவன் பின்கழுத்துப்பகுதியில் அழுந்தியிருப்பது அவனுக்குள் ஒரு அருவருப்பை ஏற்படுத்தியிருந்தது. கெட்ட வாயுவை மனிதர்கள்போல அது வெளிப்படுத்துமோ.. அல்லது கழிவகற்றியதன் மிச்சம் கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டியிருக்குமோ என்கிற அருவருப்புதான் அது. ஆனால் அது அடிக்கடி மியாவ்.. மியாவ் என்று அவன் கன்னத்தில் இழைந்தபடி சப்தமிடுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் காதுக்குள் அது ஒரு பாடலின் இசைபோலப் படிந்திருந்தது. என்றாலும் அவன் முதுகில் அழுந்தியிருக்கும் ஆசனவாய் குறித்த அருவருப்பு அவன் மனத்துள் பரவிக் கிடந்து அந்தப் பூனைமேல ஒரு வெறுப்பு வளரத்தொடங்கியது.
    அந்தப் பூனைக்கு வேளா வேளைக்குப் பால்சோறு வைப்பான். கருவாடுத்துண்டுகளை வறுத்து வைப்பான். பொடி மீன்கள் வாங்கி வந்து மஞ்சளும் உப்பும் தடவி லேசாக அனலில் வாட்டி வைப்பான். எல்லாவற்றையும் மிச்சம் வைக்காமல் தின்றுவிட்டு எங்கோ போய் மலஜலம் கழித்துவிட்டு சட்டென்று அவன் தோளுக்கு வந்துவிடும். தோளிலேயே அது தூங்கும்.. அசையாது. அதன் இதயத்துடிப்பைக் கழுத்துப்பகுதியில் உணர்ந்து தன் இதயத் துடிப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பான். அவன் எங்கு சென்றாலும் கண்கள் மூடியபடி தொடர்ந்து இருக்கும். சிறு சப்தம் என்றாலும கண்களை லேசாக விரித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொள்ளும். சமயங்களில் எங்காவது பூங்கா போன்ற இடங்களுக்குப் போனால் அவன் கழுத்தை விட்டு அருகில் உள்ள உயரமான மரங்களில் அல்லது சுவரில் ஏறி அமர்ந்துகொள்ளும். ஆனால் அவனைக் கவனித்துக்கொண்டேயிருக்கும். கிளம்புகிறான் என்றால் அவன் யோசிப்பதற்குள் அவன் தோள்மேல் அமர்ந்திருக்கும்.
    அவனுக்கும் குடும்பம் இருந்தது. மனைவி. ஓர் அழகான பெண் குழந்தை என்று. இப்போது இல்லை. அந்தப் பெண்குழந்தைக்கு முல்லை என்று பெயர் வைத்திருந்தான். அது எப்போதும் அவன் தோள்மேல் இந்தப் பூனையைப்போல்தான் தொற்றிக்கொண்டிருப்பாள். கழிவறைக்குப் போகும் நேரம் போக மற்ற நேரங்களில் அவன் தோளைவிட்டு இறங்கவே மாட்டாள். எல்லா உறவினர் நிகழ்வுகளிலும் இதை ஒரு வேடிக்கையாகப் பேசுமளவுக்குப் பேசுபொருளாக இருந்தும் முல்லை இறங்கமாட்டாள். உங்க அப்பா எங்கப் போகப் போறாங்க.. வா முல்லை என்றால்.. போ நான் வரமாட்டேன்.. அப்பாவைவிட்டுப் பிரியமாட்டேன் என்பாள். அந்தச் சம்பவம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும்போல என்பதுபோல நிகழ்ந்துவிட்டது. பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தார்கள். திருவிழாப்போலகூட்டம். யாகம் வளர்த்துக்கொண்டிருந்தார்கள். இவன் தோளில் ஏறித்தான் பற்றியிருந்தாள் முல்லை. உள்ளே போய் வணங்கிவிட்டுத் திரும்பும்போது நெருப்புப் பற்றிக்கொண்டு பரவி எல்லோரும அலறியடித்து தப்பிக்க முயற்சிக்கையில் இவனும் தோளில் முல்லையைச் சுமந்து வெளியே ஓடத்தொடங்கினான். கூடவே ஓடிவந்த மனைவியைக் காணவில்லை என்று திரும்பும்போது கண்ணெதிரே அவள் தீக்குள் அமிழ்வதைத் தடுக்கமுடியவில்லை. கைகளை நீட்டி அவளை இழுக்க முல்லை தோளில் தடையாக இருந்தாள். அவளை பற்றியபடியே இழுத்த முயற்சியில் கண்ணெதிரே மனைவி கருகி இறந்துபோனாள். அலறித்துடித்து இருவரும் பதறியபோது யாரோ சட்டென்று முல்லையைப் பறித்ததுபோல இருந்தது. அவ்வளவுதான் முல்லையும் மேலே விழுந்த சவுக்குக் கழி ஒன்று முல்லையை வழித்ததுபோல அவன் தோளிலிருந்து வழித்து தீக்குள் கருகவிட்டது. இப்போது நடைப்பிணமாகத்தான் பத்து வருடங்களாக வாழ்கிறான்.
    அந்தப் பூனை முல்லைப்போல தோளைப் பற்றிக்கொண்டதுதான் அவனுக்குப் பற்றாக நினைவுவந்தது. அதேசமயம் முல்லை இருக்கவேண்டிய தோளில் அந்தப் பூனை ஒட்டிக்கொண்டதும் அதைத் தடுக்கமுடியாத இயலாமையும் அந்தப் பூனையைக் கொல்வதற்கான காரணங்களில் இரண்டாவதாக அமைந்தது. மனைவியும் மகளும் போனபின்பு இந்த உலகில் வாழ அவனுக்கு ஏதுமில்லைதான். என்றாலும் அவனுக்கான சாவு வரும்வரை வரட்டும் என்றே வாழ்ந்திருந்தான். அவனுக்குத் தற்கொலை செய்துகொள்வதில் அடர்ந்த பயமொன்று அட்டையைப்போல மனத்துள் ஒட்டிக்கிடந்தது. ஆகவே சாவதற்காக வாழும் வாழ்வில் அந்தப் பூனை வந்தது வெறுப்பாகவும் மாறியிருந்தது. அல்லது அதிகரித்திருந்தது.
    அவன் தன்பிள்ளை தன் மனைவி என்று வாழ்ந்திருந்த வாழ்வில் நிறைய கண்பட்டுவிட்டது. உறவுகள் ஏற்படுத்திய காயங்கள், செய்த துரோகங்கள், பேசிய அவதூறுகள் எல்லாமும் பூனையின் செயல்களைப்போலவே அமைந்துவிட்டதை அவன் உணரத்தொடங்கியதும் அந்தப் பூனையைக் கொல்வதற்கான காரணங்களில் முன்றாவதாக அமைந்தது. எப்படிக் கவனமாக இருந்தாலும் அடுக்களைக்குள் புகுந்து திருட்டுத்தனமாகப் பாலைக்குடித்துத் தப்பித்துப்போகும் பூனையைப்போல பல நெருங்கிய உறவுகள்.. தேவைப்படும்போது நகங்களை உள்ளிழுத்து வெளியே நீட்டும் தன்மையைப்போல பல தந்திரங்கள், பேச்சுகள் பேசி அவமானப்படுத்திய, துரோகம் செய்த, நன்றிகெட்ட உறவுகள் பல.. குறுக்கே போவது சகுனம் என்பதைப் போல அவன் வாழ்வில் பல உறவுகள் பல சந்தர்ப்பங்களில் குறுக்கீடு செய்து எதையும் நடக்காமல் செய்த கசப்பான அனுபவங்கள் எனப் பூனைகளைப்போலவே பல உறவுகள்.. நாயைப்போல நன்றி என்று சொல்வதுபோல பூனைக்கான ஒரு அடையாளம் இல்லை. அவன் வாழ்வில் அவனைப் பல தருணங்களில் உயிரோடு வைத்துக் கொன்ற பல உறவுகள். மிருகங்களின் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் அவன் சந்தித்த பலரும் பூனைகளுடன் ஒப்பிட்டே தங்கள் அனுபவங்களைச் சொல்லிவைத்தாற்போலப் பகிர்ந்துகொண்டதால் அவனுக்குப் பூனைகளைப் பார்க்கக் கொல்லவேண்டும் என்கிற எண்ணமே வலுத்திருந்தது. இதையெல்லாம் தாண்டி கொலை செய்வது என்கிற செயலுக்கு அவனுள் இருந்த பயம் என்கிற அட்டை அந்தப் பூனையை அவன் தோள்வரை முல்லைபோல ஏற்றியிருந்தாலும்.. சட்டென்று விழித்துக்கொண்டதுபோல அவன் அந்தப் பூனையைக் கொல்ல முடிவெடுத்திருந்தான்.
    மூன்று நிமிடங்களில் அதிகப்பட்சம் அந்தப் பூனையைக் கொன்றுவிடமுடியும் என்றாலும் மூன்றுமணிநேரம் கழிந்தும் அவனால் அதைச் செய்யமுடியாமைக்குக் காரணம் எப்படி அந்தப் பூனையைக் கொல்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தான்.
    தோளில் அது தன்னைக் கொல்பவனைப் பற்றிக் கவலைப்படாமல் அது கண்மூடியிருந்தது.
    கூகுளில் தேடிப்பார்த்தான் ஒரு பூனையைக் கொல்வது எப்படி என்று ஆனால் சரியான விடை கிடைக்கவில்லை. ஏன் கொல்லவேண்டும்? எதற்கு? கொன்றுவிட்டால் போதுமா? என்ன செய்யப்போகிறீர்கள்? இப்படியான பல கேள்விகளுக்கு அவனுக்கு விடைதெரியவேண்டியிருந்தது. ஆகவே மறுபடியும் யோசித்தான்.
    தன்னையே கொல்லமுடியாமல் சாவு வரும்வரை வரட்டும் என்று வாழ்பவனுக்கு அந்தப் பூனையை எப்படிக் கொல்லமுடியும்? ஆனாலும் அந்தப் பூனையை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்துப் பலவற்றை யோசித்துக் கடைசியாக ஆற்றில் வீசிவிடலாம் என்று முடிவெடுத்தான். பூனைக்கு நீந்தத் தெரியுமா என்று யோசித்தான். ஆனால் பூனைகள் தண்ணீரை அதிகம் வெறுப்பவை என்று படித்திருந்தான் சமீபமாக. ஆகவே அந்தப் பூனையைக் கொல்வதற்கு நீர்தான் சரியானது என்று தீர்மானித்து அருகில் ஓடும் ஆற்றிற்குப் போனான். நீர் கரைதொட்டு ஒடிக்கொண்டிருந்தது. அவன் பத்துமணிதாண்டிய இரவில் போனான். சுற்றும் முற்றும் யாரும் இல்லை. தோளிலிருந்து அகற்றி அந்தப் பூனையை எறிவதற்காக அவன் தோளில் கைவைத்து கால்களையும் வாலையும் ஒருசேரப் பற்றியபோது அந்தப் பூனை இரண்டு முறை மியாவ்.. மியாவ். என்று குரலெழுப்பியது. அது அப்பா.. என்று முல்லை அழைப்பதுபோல இருந்தது.
    மின்சாரம் தாக்கியதுபோல அதிர்ந்து அப்படியே நின்றான்.

00000