சசிகலா விஸ்வநாதன்/எதிர்பார்ப்பு

   

          காலையில் எழுந்ததுமே லேசான உடல் சூடும், கண்ணெரிச்சலும்; பொன்னாத்தாவிற்கு.கடுங் காப்பி  வைத்துக் குடித்துவிட்டு அரிய நாச்சியார் கோவில் போய் கும்பிட்டு வந்தவள்; அப்படியே திண்ணையில்  உட்கார்ந்து தூணில் சாய்ந்தாள்
                மடியில் அருமை பூனைக்குட்டி போல் ஒரு செல் பேசி. "அப்பப்ப கரண்ட் ஏத்திக்கிடு, ஆத்தா! அப்பந்தான்  நான் உன்னோடு பேச  தோதா இருக்கும். இல்லேன்னா; ஆஃப் ஆயிடும்"என்று சொல்லிப் போன அம்மையப்பன் பேசுவான்; மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ.

போன அமாவாசைக்கு முந்தின அமாவாசை கழிந்து ஒரு தரம் பேசினான்.”விசயம் ஒண்ணுமில்ல,,ஆத்தா! நீ நல்லாஇருக்கியான்னு கேட்டுக்கிடத்தான் பேசினேன்” என்றான். ” “நல்லாத்தாம்பா இருக்கேன்,” போனை வைச்சுட்டானா… எங்காதுக்குதான் கேக்கலியோ?
துபாயில் பொஞ்சாதி உமையாளோடும், பேரன் பூமியுடன் இருக்கிறவனுக்கு, ஆத்தாவுடன் பேச ஒண்ணுமா இல்லே? அவனுக்கே ஒண்ணுமில்லேன்னா; உமையாளுக்கு என்ன இருக்கும்?
பேரனுக்கு முடிஇறக்க வந்தபோது ஒரு வயசிலே பார்த்தது. இப்பம் அவன் நாலாப்பு படிக்கிறான்னு துபாய் போய் வந்த அவனோட வைரவன் கோயில் ஆச்சி சொன்னா; போன வாரம். கேட்டுக் கிட்டேன். அம்பட்டுத்தான். “அண்ணி! இந்தாரும்; உம்ம மகன் முளங்கால் வலிக்கு மருந்து கொடுத்து விட்டுருக்கான்” என்று,ரெண்டு டப்பா கொடுத்து விட்டு போனாள். நல்லபடியாய் அவளைப் பேசி அனுப்பின ‌ பிறகு பட்டா சாலையில் ஒரு பாட்டம் தனியே புலம்பி தீர்த்தேன். வேறு என்ன செய்ய சொல்றீக?
மாசா மாசம் பேங்கில் பணம் போட்டு விடறான். அதுல ஒரு குத்தமில்ல! மகராசி அதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லறது இல்லையோ? தெரிஞ்சுதான் அனுப்பறானோ, தெரியாமத்தானோ? அது சரி! அதை தெரிஞ்சுகிட்டு இங்கனெ, செவகங்கைல நான் என்ன செய்யப் போறேன்?
மாணிக்கம் பய வந்தாக்க, பாங்க் புஸ்தகத்தில் வரவு வெச்சு,போனுக்கு பணம் கட்டிறச் சொல்லணும்.செவ்வந்தியோட ஒரு நடை பழனி போய் விட்டு வரணும்”
இப்படியே யோசனையில் இருந்த பொன்னாத்தாவுக்கு,
கண் செருகியது.
அம்மையப்பனின் ஐயா, மணவாளஞ்செட்டியார், ஊனும் உருவுமாக வந்து போனார். “ஆத்தாடி! மூணு மாமாங்க காலம் ஆச்சுதே; அவர் போய் சேர்ந்து?
இப்பமும் மேனி குறுகாம, வளம் மாறாம, நெறம் கருக்காம, கண்ணு மினுங்க வந்திருக்காரு!” “பொன்னா! ஒரு செம்புல நீர் மோர் கொண்டா”
சப்தம் கேட்டு எழுந்த பொன்னாத்தா தலை சுற்றி கீழே விழப்போக; மணவாளஞ்செட்டி, சூதானமாகத் தாங்கிக் கொண்டார்.
சேலை மடியிலிருந்த செல்பேசி கீழே விழ, “அம்மையப்பன்” என்ற பெயர் ஒளிர்ந்தது.
வேறு யார் பெயரும் அந்த செல்பேசியில் இல்லை என்பது எவருக்குத் தெரியும்?
அவனுக்கும், தன் ஐயா வந்து போனது இப்பம் வரை தெரியாது. மாணிக்கம் வந்தால் அவனுக்கு சொல்வானாய் இருக்கும்.