
சிதம்பரம் நாடார் வீட்டில் ஏக பரபரப்பு. தூத்துக்குடியிலிருந்து போன மாதம் திருமணமாகிப் போயிருந்த சுவர்ண ரேகாவும்,அவள் கணவன் கதிரேசனும் மறுவீடு வருவதாகச் சொல்லியிருக்க, உற்சாகத்திற்கு குறையேது?
வீடு நிறைய உறவினர்கள்.
சுவர்ண ரேகாவின் தாய் மாமா இளங்கோவும் அவன் மனைவி துர்காவும் அவர்களை அழைக்கப் போயிருந்தார்கள்.
கொல்லைப்புறத்தில் அடுப்பு போடும் வேலை துரிதமாக நடந்து கொண்டிருந்தது. சமையல் தளவாடங்களுடன் திண்டுக்கல்லிருந்து ஸ்பெஷல் பிரியாணி சமைக்கும் பார்ட்டி வந்து விட்டிருந்தனர்.
நாலைந்து இள வெள்ளாடுகள் வரும் இடர் அறியாமல் தழைகளை மென்று கொண்டிருந்தன.
ஊமையன் மட்டும் மிகுந்த வருத்தத்தில் இருந்தான்.ஆசையாய்,மனைவி பூவாத்தா வளர்ந்திருந்த ஆட்டுக்குட்டிகளுக்கு நாளை நடக்கவிருக்கும் விபரீதத்தை நினைக்க வயிற்றில் “சொறே”லென ஒரு உணர்வு. மனசு கனத்துக் கிடந்தது.
ஏழைக்கு ஏது; விருப்பும் வெறுப்பும். பிரசவ நாள் நெருங்க; கையில் காசு வேணுமே… மனசைக் கல்லாக்கிக் கொண்டுதான், அவளிடம் வாதாடினான். சம்மதம் வாங்குவதற்குள் ஆச்சி தடவின செவ்வெண்ணய் காய பேச வேண்டியிருந்தது.ம்ம்.. என்ன செய்ய?
அன்று மாலையே மகளும், மருமகப்பிள்ளையும் வந்துவிட; ஊமையனுக்கு நிற்க நேரமில்லை; நினைக்கப் பொழுதில்லை.
கருக்கிருட்டு காலையில், சிதம்பர நாடார் வெளியே வந்து,”ஊமையா! இங்கென வாடா!” என்றார். ஓடிப்போய் அவர் முன்னே நிற்க; “மன்னிச்சுக்கடா, என்னை! கல்யாணத்துக்கு அப்புறம்,அவங்க குல சாமி கோவில் பெத்தனாட்சிக்கு படையல் போடாமல் கறி சோறு திங்க மாட்டாங்களாம். இன்றைக்கு சைவ சாப்பாடுதான். ஆடுகளை ஓட்டிட்டுப் போடா வீட்டுக்கு” என்றவாறே, திரும்பியவர், செத்த நேரம் இரு, என்றார்.
திரும்பி வருகையில் கவர் ஒன்றை அவன் கையில் கொடுத்தவாறு, “பூவாத்தா மகப்பேறுக்கு வெச்சுக்க;அம்மா கொடுக்க சொல்லிச்சு” என்றதும் ஊமையனுக்கு தலைகால் புரியவில்லை.
இன்னொன்றும் அவனுக்குத் தெரியாது; சுவராணரேகா, பூவாத்தாவின் சிறுவயது தோழி என்றும், நேற்று அவர்கள் சந்தித்து இருந்ததும்.
