
காலையிலேயே இரண்டு குழுக்காரர்கள் வந்து தேவகி வீட்டு வாசலில் வந்து கத்திவிட்டுப்போனார்கள். ஒன்று விடியல் குழு இன்னொன்று சுடர் குழு. வாங்கியவர்களுக்கு விடிகிறதோ இல்லையோ கொடுப்பவர்களுக்கு விடிந்துவிடுகிறது. சுடர் குழுவில் வாங்கியவர்கள் ஒருவர் வாழ்வில்கூட சுடர்விட்டு எதுவும் பிரகாசிக்கவில்லை.
தேவகிக்கும் வேலை இல்லை. புகையிலைக் கம்பெனியில் வேலை பார்த்தாள். அரசாங்கத் தடையால் கம்பெனியை இழுத்து மூடிவிட்டார்கள். எந்தப் பணப்பயனும் இல்லை. பிஎப் மட்டும் வரும் அதுவும் எப்போது வரும் என்று தெரியாது. தேவகி கணவன் சித்தாள் வேலைக்குப் போனான். அதுதான் அவனுக்குத் தெரியும். ஆனால் சித்தாள்கள் நிறைய பேர் காத்துக்கிடந்தார்கள். எப்பவாவதுதான் வேலை கிடைக்கும்.
குழுக்கார்கள் தெருவில் நின்று கத்தியபோது மானம் போவதுபோல் இருந்தது.
சின்னவன் கல்யாணத்திற்கென்று வாங்கியது. அவன் தனிக் குடித்தனம் போய்விட்டான். அவன் மாமியார் வீடு கொஞ்சம் வசதி. அங்கே நிறைய ஆடுகள் வளர்த்தார்கள். அதில் வந்த புதிதில் மருமகள் கொண்டு வந்து இரண்டு பெண் ஆடுகளைக் கொடுத்துவிட்டுப்போனாள் பெருக்கிக் கொடுங்கள் என்று.
இரண்டு ஆடுகளும் சேர்ந்து நான்கு குட்டிகளைப் போடக் கொடுத்தார்கள்
இப்போது அதில் ஒன்று வயலுக்கு மேயப்போகும்போது பாம்பு கடித்து இறந்துபோனது.
இருப்பது ஒன்றுதான். அதுவும் சினை பிடிக்கமாட்டேங்குது.
பேசாம இதை வித்துப்புடலாங்க.. வித்துட்டு குழுவுக்குக் கட்டிடலாம். மருமகள் கிட்ட சொல்லி அப்புறமா ஆடு வித்த பணத்தைக் கொஞ்சங்கொஞ்சமா திருப்பிக் கொடுத்துடுறேன்னு சொல்லிடறேன்.. என்றாள் தேவகி.
தேவகி கணவன் கடைத்தெருவிற்குப் போய் ஆடு வாங்க ஆளை அழைத்துக்கொண்டு வந்தான்.
இது சினைபுடிக்காதுன்னா..கறிக்குத்தான் போவும்.. நீங்க சொல்ற விலை தரமுடியாது என்றான் வாங்க வந்தவன்.
அவனிடம் தேவகியும் அவள் புருஷனும் கெஞ்சிப் பேரம் பேசினார்கள்.
இந்த பேரம் நடந்துகொண்டிருக்கும்போதே.. மகனும் மருமகளும் வந்தார்கள்.
வாம்மா.. என்றழைப்பதற்குள்.
அத்தை.. வர்ற ஏழாம்தேதி தாத்தாவுக்கு முதல் திவசமாம்.. அன்னிக்கு கறிவிருந்துதான் போடணுமாம்.. இதுதான் சினை புடிக்கலேல்ல.. அம்மா இதைக் கொண்டுவரச்சொல்லிடுச்சி.. நாங்க அப்புறமா வரோம்.. அம்மா உடனே ஆட்டைப் புடிச்சிட்டு வான்னு சொல்லிடிச்சு அத்தை.. என்றபடி தேவகி பார்த்துக்கொண்டிருக்க.. தேவகி மகன் வண்டியைத் திருப்பி ஸ்டார்ட் பண்ண.. மருமகள் பின்னால் இரண்டு கால்களையும் போட்டு உட்கார்ந்துகொண்டு.. அத்தை அதைத் தூக்கிக் கொடுங்க என்றாள்.
தேவகி தூக்கிக் கொடுக்க.. அவள் மருமகள் அந்த ஆட்டை இரு கைகளாலும் வாங்கி மடியில் உட்கார வைத்துக்கொள்ள வண்டியில் போய்விட்டார்கள்.
0000
