
ஜே ஜே சில குறிப்புகள் நாவலைக் குறித்து நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். மிகவும் பொறுமையாக வாசித்துக் குறிப்புகள் எடுத்து செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்கும்போது, ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் சோகமும் உண்டாகிறது.
மகிழ்ச்சிக்கான காரணம், வெகு நாட்களாக முழுமையாக வாசிக்காமல் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு நூலை வாசித்து முடித்தது. சோகத்திற்கான காரணம், அதற்குப் பிறகு அப்படியொரு புரட்டிப் போடும் எழுத்துவலை கொண்ட நூல்கள் நிறைய இருந்தாலும், நான் எதையும் கவனம் கூட்டி முழுமையாக வாசிக்கவில்லை என்பதுதான்.
o0O0o
இந்த நாவலில் இடம்பெறும் உதாரண எழுத்தாளரான ஜேஜே-விலிருந்து ஏனைய பல எழுத்தாளுமைகளுக்கு ஒரு முன்மாதிரி நிஜங்கள் உண்டு. முல்லைக்கல் மாதவன் நாயர், முளங்காடு கிருஷ்ண வைத்தியர் ஐயப்பன். திருச்சூர் கோபாலன் நாயர் எனப் பலரும் மலையாள எழுததுலகின் உண்மையான முகங்கள் என்று பல விமர்சனக் குறிப்புகளிலிருந்து நாம் அறிகிறோம். அந்தவகையில் இதன் கதைசொல்லி பாலுவின் எண்ணவோட்டங்களுக்கு ஒரு தீர்க்கமான பின்புலம் நமக்குப் புலனாகின்றது. ஒரு அனுபவக் குறிப்பு, அல்லது பத்திரிகை செய்தி என எடுத்துக் கொண்டு அதை ஜேஜே-வின் பார்வையில் விவரித்துக் கொண்டே, பாலுவின் பார்வையினூடே செல்கிறது நாவல். பாலுவின் ஆதர்சம் ஜேஜே என்றால், ஜேஜே-யின் நிர்தாட்சண்யமான எழுத்துத் தீவிரம் பாலுவிடம் படிந்திருக்க வேண்டும். ஆனால் எழுத்தாளரால் அந்த இடத்தை விலகியிருந்து ஆராதிக்க மட்டுமே முடியும் என்பதால், ஜேஜே-வும் பாலுவுமாக இணைகோடுகளுக்கிடையே ஒரு தர்க்கபூர்வ உணர்ச்சி தத்தளிப்பை நிகழ்த்துகிறார் நாவலாசிரியர். இந்த அனுபவக் குறிப்புகளின் மேல் நிகழ்த்தப்படும் தத்துவ விசாரணைகள், அவை நிகழ்ந்த பின்புலன்கள் பற்றிய மேலதிக தகவல்கள், அவற்றிடையேயான எழுத்தாளரின் அகப்பயணம், இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் அழகியல் என்று ஒரு கலாபூர்வ நிறைவைக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.
o0O0o
சூரியனை நோக்கி பறக்க முற்படுவதற்கும், கூரை மேலேறி கூவும் கோழியின் நிலைப் பற்றியுமான பாலுவின் விசாரம் தொடர்கிறது. ஜேஜே தன்னுடைய நெருக்கடி காலத்தில் மிகுந்து உந்துதலோடு செயல்பட்டிருக்கிறான். ஆனால் வேதனைகளுக்கும், வறுமைக்கும் மத்தியில்தான் எழுத்து பரிமளிக்க வேண்டுமென்பதில்லை. சிந்தனை பீறிடும் எழுத்தை படைப்பிலக்கியமாக ஏன் கொள்ள முடியாது என்பது பாலுவின் கேள்வி.
o0O0o
வறுமையுற்ற சூழலில்தான் கலை படைப்பூக்கத்தின் உன்னதத்திற்கான வழி பிறக்குமென்றால், வறுமையும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்று ஆதுரத்துடன் சொல்லும் ஜேஜே கலையை காசாக்க மட்டுமே பயன்படுத்தும் வணிக மனநிலை மீது சிறிதும் மதிப்புக் கொள்வதில்லை. இந்த சட்டகத்தை ஜேஜே வழியே பாலுவும், பாலுவின் வழியே கதாசிரியனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.
o0O0o
(முழுமையா வாசிக்க கட்டுரையின் சுட்டி பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது)
