
அது மலையடிவார கிராமம். அங்கே விண்ணை தொடும் அளவிற்கு சவுக்கு மரங்களும் , ஊசி இலை மரங்களும் போட்டி போட்டுக் கொண்டு உயரமாக வளர்ந்து நின்றன.. அந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் தான். குறு மிளகு எடுப்பது , ஏலக்காய் பறிப்பது , காபி , தேயிலை பயிரிடுவது , இவைகள் தவிர வாழையும் கரும்பும் பயரிட்டு நல்ல விளைச்சல் எடுப்பது என செழிப்பான விவசாயம் தான். ஆனாலும் என்ன பிரயோசனம் ?
அந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று எந்த நிலத்தையும் உரிமையாக பெற்றிருக்கவில்லையே . இத்தனை ஆண்டு காலமாய் வெறும் கூவிகளாகத் தானே அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இயற்கையை வெள்ளந்தியாக நேசிக்க கூடிய மனிதர்கள் அவர்கள் .
கீழே நகரத்திலிருந்து வரும்
பெரும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் தான் இந்த நிலங்களை தங்கள் வசப்படுத்தி அங்குள்ள பூர்வ குடி மக்களை நிலத்தில் வேலையாட்களாக பணிக்கு வைத்திருக்கிறார்கள்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த இசக்கி கங்காணி என்பவன் ஒரு பெரிய முதலாளியின் விசுவாசி . ஏவல் நாயைப் போன்றவன் தான் அவன் அவனுக்கு சிறிதும் மனிதாபிமானம் கிடையாது. தன் மக்கள் மீது கொஞ்சமும் விசுவாசமும் கிடையாது.. முதலாளிக்காக தன் மக்களை காட்டிக் கொடுப்பதற்கும் , இந்த காட்டையே அழிப்பதற்கும் கூட அவன் தயங்காதவன் தான்..
அந்தக் காட்டில் அந்த மலைவாழ் மக்களின் இயற்கையை நேசிக்கும் விதிகளுக்கு எதிராக , இந்த இசக்கி கங்காணி சமீபமாக ஒரு பாதகமான செயலை செய்து முடித்திருக்கிறான். அதுதான் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள , தன் முதலாளியின் ஐம்பது ஏக்கர் வாழைத் தோட்டத்தைச் சுற்றி , ஆட்களை வைத்துக் கொண்டு , ராவோடு ராவாக ரகசியமாக மின் வேலியை அமைத்து முடித்தது.
காலையில் பார்த்தால் அது சாதாரணமாக முள் கம்பி வேலி போலத்தான் தோற்றம் தரும். ஆனால் இருட்ட ஆரம்பித்த உடன் இசக்கி கங்காணி யாருக்கும் தெரியாமல் அங்கே வந்து அந்த முள் வேலிக்கு , ரகசியமாக நல்ல ஹெவி மின் இணைப்பை கொடுத்து விட்டுச் சென்று விடுவான் . பின்பு காலை வரை அந்த வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டேதானிருக்கும். அதற்கான மின் இணைப்பு பெட்டி மற்றும் சுவிட்ச் பாக்ஸ் இவைகளெல்லாம் எங்கேயிருக்கிறது என்று அவனைத் தவிர அந்த ஊரில் வேறு யாருக்கும் தெரியாது.
இன்றும் வழக்கம் போல கங்காணி வந்து ரகசியமாக அந்த வேலிக்கு மின் இணைப்பை கொடுத்து விட்டு , நைசாக ஊருக்குள் போகும் ஒற்றையடி பாதையை நோக்கி நான்கைந்து எட்டுகள் தான் எடுத்து வைத்திருப்பான், அதற்குள் அங்கேயிருந்த சவுக்கு மரங்களுக்குப் பின்னால் பதுங்கியிருந்த முறிக்கொம்பன் யானை , பயங்கரமாக பிளிறியபடியே வெளியே வந்து , அவனைத் துரத்த ஆரம்பித்து விட்டது.. ஓடுவதற்கு எதிர் திசை எதுவும் கிடைக்காமல் , உயிர் பயத்தில் , இருட்டுக்குள் வந்த வழியிலே திரும்பவும் ஒடிச் சென்றவன் , சரியாகப் போய் அதே மின் வேலியிலேயே விழுந்து விட்டான். அவன்
விழுந்த வேகத்திலேயே , மின் சாரம் அவன் உடலெல்லாம் அசுர வேகத்தில் பாய்ந்து பரவ , எழுந்திருக்க கூட சிறிதும் அவகாசம் இன்றி . அவனுடைய உடல் அந்த மின் வேலியிலேயே , சிறிது சிறிதாக துடித்து அடங்கியது .
அந்தக் காட்சியை கண்ட பிறகு தான் |முறிக் கொம்பன் யானை , சாக்கிரதையாக மெல்லப் பின் வாங்கி , இருளோடு இருளாக மறைந்தது. ஆனால் அதன் கண்களில் இன்னும் , சென்ற வாரம் இதே மின் வேலியில், குழந்தைத் தனமாக விளையாடப் போய், அடிபட்டு துடிதுடித்து இறந்து போன , தன்னுடைய செல்லக் குட்டி யானையின் தோற்றம் அப்படியே
தான் இருந்தது . அந்த இருளிலும் கூட அதன் கண்களிலிருந்து இன்னும் கண்ணீர் சொட்டிக் கொண்டேதான் இருந்தது.
