பி. ஆர்.கிரிஜா/ போதி மரங்கள்

சத்திரப்பட்டி கிராமத்தில் என் பாட்டனார் இருபது வருடங்களுக்கு முன் நட்ட மரங்கள் இப்போது நல்ல நிழல் தரும் அழகிய மரங்களாக உயர்ந்து நிற்பதைப் பார்த்து பூரித்துப் போனான் சரவணன்.
வட இந்தியாவில் வேலைக்குப் போன பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் தன் கிராமத்திற்கு வர முடிந்தது. சுற்று முற்றும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு ரம்மியமான வயல் வெளி. அட…. நம் கிராமமா இவ்வளவு செழிப்பாக மாறி உள்ளது? ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனான்.
” என்ன சரவணா , அப்படியே நின்னுட்டே ?” குரல் வந்த திசையைப் பார்த்தான். அட… ராமு… பால்ய தோழன்… ” ராமு.. எப்படி இருக்க பா ? “
” எனக்கென்ன இந்த வயல் மாதிரி என் வாழ்க்கையும் செழிப்பா இருக்கு பா” ராமு முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்.
” ரொம்ப நல்லது.. கேக்க எம்புட்டு சந்தோசமா இருக்கு….” ம்ம். நகரத்தில சந்தடில நாயா மிதிபட்டு அல்லாடும் தன் வாழ்க்கையை நினைத்துக் கொண்டான். எதுக்கெடுத்தாலும் ஸ்கூட்டர், இல்ல ஊபர், ஓலா…..சே…. மனதின் ஓரத்தில் ஒரு அதிருப்தியும் விரக்தியும்…. எம்புட்டு சம்பாதிச்சாலும் பத்த மாட்டேங்குது… என்ன பொழப்பு….” தன்னையே நொந்து கொண்டான் சரவணன்.
அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மாதிரி, “என்ன பா உங்க ஊர் நினப்பு வந்திருச்சோ? என்றான் ராமு.
” இல்ல பா பெரியண்ணன் உடம்பு சுகமில்ல… அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்….”
“எனக்கு வேல இருக்கு….அப்புறம் பாக்கலாம். ….இவன் பதிலுக்குக் காத்திராமல் வேகமாகக் கிளம்பினான் ராமு.
அவன் நேராக வரப்பைத் தாண்டி ஒரு சந்துக்குள் நுழைவதைப் பார்த்தான். ஒரு அழகான ராயல் என்ஃபீல்டு புல்லட்.. அதில் ஸ்டைலாக ஏறி சர்ரென்று போய் விட்டான்.
சரவணனுடைய நெடு நாளைய கனவு..
ராயல் என்ஃபீல்டு புல்லட்… அவனால் இன்னி வரைக்கும் அவன் சம்பளத்தில பட்டணத்தில வாங்க முடியல… இந்த ராமு இந்தப் பட்டிக்காட்டு ஊருல விவசாயம் பாத்துகிட்டு இப்படி அசால்ட்டா புல்லட்ல போறான்.
எதைத் தேடி நான் அங்கு சென்றேன்? அங்கேயே ஸ்தம்பித்து நின்றான். நீண்ட யோசனைக்குப் பிறகு மெதுவாக தன் அண்ணன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
சில்லென்ற காற்று அவன் முகத்தில் அடித்தது.
காத்து, தண்ணி இல்லாத பட்டண வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான். அவன் அப்பாவுக்குச் சொந்தமான நில புலன்களை அவன் அண்ணன் தான் பார்த்து வருகிறான்.
அதற்குள் அண்ணன் வீடு வந்து விட்டது. அப்படியே வாய் பிளந்து பார்த்தான். மிகவும் அழகான நேர்த்தியான சுற்றி செடி கொடிகள் உள்ள தனி வீடு. வாசலில் கார், புல்லட்….
குற்ற உணர்வில் மெதுவாக உள்ளே நுழைந்தான். ” வாங்க தம்பி…அண்ணன் வெளிநாடு போயிருக்காங்க… அங்க இயற்கை விவசாய
மாநாடுக்கு உங்க அண்ணாச்சி பேசப் போயிருக்காங்க என்று அண்ணி சொன்னவுடன் மயக்கம் வராத குறையாக அப்படியே.சரிந்து சோஃபாவில் உட்கார்ந்தான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அண்ணி கொடுத்த காபியை குடித்தான். மனம் லேசானது. அண்ணியிடம் விடை பெற்றுக் கொண்டு ஒரு தீர்மானத்தோடு எழுந்து வெளியே வந்தான்.
மனதில் ஒரு அமைதி, உற்சாகம்.
வரப்பைத் தாண்டும் போது அந்த மரங்கள் அவனுக்கு போதி மரங்களாக காட்சி அளித்தன.


03/06/2024