
ஜிக்கி என்கிற பூனையுடன் அவள் தன் நேர்காணலைத் தொடங்கினாள்.
உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?
இல்லை.
ஏன்?
பூனை என்றே கூப்பிடு.. எதற்குப் பெயர் எல்லாம்?
பெயர் பிடிக்கவில்லையா?
பெயர் வைப்பது பிடிக்கவில்லை.
ஏன் பிடிக்கவில்லை.
நீங்கள்தான் பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே அந்தப் பழக்கத்தை ஏன் எங்களுக்கும் ஊட்டுகிறீர்கள்?
ஓ.. பெயர் வைப்பதில் என்ன பிரச்சினை?
பூனை அழகாகத்தானே உள்ளது? இயற்பெயரை மாற்றும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?
நானும் நீயும் நண்பர்கள் என்பதால் உரிமை எடுத்துக்கொண்டேன்.
உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது. வழங்கப்படவேண்டும்.
சரி.. உன் விருப்பப்படியே நான் பூனை என்றே அழைக்கிறேன்.
நன்றி.
பால் உனக்குப் பிடிக்கவில்லையா? நாலைந்து நாள்களாகக் குறைவாக அருந்துகிறாய்.
உண்மையான பசும்பால்தான் விருப்பம். இப்போது வண்ணப் பாக்கெட்களில் அடைத்து விற்கிறார்கள். சுவையில்லை. சூடாக இருக்கிறது. சர்க்கரை கலந்திருக்கிறது. அவ்வளவுதான்.
வேறு என்னதான் வேண்டும்?
பச்சைத் தண்ணீர் போதுமென்றாலும் அதிலும் பாட்டில், பாக்கெட், கேன் என்று வந்துவிட்டது இயற்கையாக எதுவும் இல்லை.
இது காலத்தின் மாற்றம். ஏற்றுத்தானே ஆகவேண்டும்.
மனிதர்கள் மாறுபவர்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்வீர்கள். நான் விலங்கு. இயற்கை மாற்றமே எனக்கு உகந்தது.
என்ன சொல்கிறாய்?
எங்களை விட்டுவிடுங்கள்.. வளர்க்காதீர்கள். பெயரிடுவதும்.. உங்களுக்குப் பிடித்ததை உணவிடுவதும்.. கட்டிப்போடுவதும்.. இப்படி எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.. மனிதர்களை விட்டு விலகியே இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இயலவில்லை.
உனக்கு ஏன் இத்தனை கசப்பு? வெறுப்ப?
என் தாய் ஈன்று இந்த வீட்டில் வந்து போட்டுவிட்டாள். வேறு வழியில்லை..
உனக்குப் பிடிக்கவில்லையெனில் நம் நட்பைத் துண்டித்துக்கொண்டு விலகிப்போகலாம்..
நட்பு பிடிக்கிறது. ஆனால் நட்பின் பெயரால் நீங்கள் எங்களைப் படுத்துகிற பாடு பிடிக்கவில்லை. வருகிற போவோரிடம் எல்லாம் என்னைப் பற்றிப்பேசுவதும்.. தூக்கி அவர்கள் கையில் கொடுப்பதும்.. அவர்கள் என்னைப் படுத்துகிற பாடும்.. பிடிக்கவில்லை.
இப்போது நீ குட்டிப்பூனை.. வெளியில் போனால் நாய்கள் போன்ற விலங்குகளால் உனக்கு ஆபத்து? அதுதான் யோசிக்கிறேன்.
என்றைக்கு இல்லை ஆபத்து? எப்போதும் சிறு விலங்குகளுக்குப் பெரு விலங்குகளால் ஆபத்துதானே? வாழாமல் போய்விட்டோமா..? விட்டால்தானே என்னைக் காத்துக்கொள்ளும் திறனைப் புதுப்பிக்கமுடியும்? மனிதர்களால் ஆபத்து இல்லையா?
பேசாமல் இருந்தாள்.
வளர்ப்பீர்கள். அப்புறம் குறுக்கே எங்கள் வேலைக்காக ஓடினால் சகுனம் என்பீர்கள். உங்கள் வாழ்க்கையை நாங்களா தீர்மானிக்கிறோம்?
பேசாமல் இருந்தாள்.
சற்று நேரத்தில் ஒரு குரல் கேட்டது.
படிப்புல கவனமே போயிடிச்சு.. எப்பப்பாரு இந்தப் பூனையோடவே கொஞ்சிக்கிட்டு இருக்கே.. சனியன எங்காச்சும் கொண்டு போய் விட்டுட்டு வா.. பூனை மயிரு கொட்டறது தெரியாது.. அது மூளையைப் பாதிக்குமாம்.. அந்தக் கருமத்தை மடியில வச்சுக்கறதும்.. கொஞ்சுறதும்.. என்னைக்குப் பிரச்சனையாவப் போவுதுன்னு தெரியல.. அன்னிக்கு இருக்கு.. உனக்கும் பூனைக்கும்..
இப்போது இருவரும் அமைதியானார்கள்.
வாலை உயர்த்திக் கோபம் அடக்கி அவளைப் பார்த்து முறைத்தது ஜிக்கி என்று சொல்லக்கூடாத அந்தப் பூனை.
000
