நறுமுகை/ரயில் சினேகம்

(ஒரு புகைவண்டிப்பயணத்தில்
நடந்து முடிந்த ரயில் சினேகம்)

நீ ஒரு பாதை.
நான் ஒரு பாதை.
நம் இருவரை இணைத்தது
இருப்புப் பாதை.

தனித்தனி பயணம்
தொடர்கின்ற தருணம்
ரயில் வந்து நின்றதில்
இணைந்தது இதயம்.

பார்வைகள் மெதுவாய்
பரிமாறிடும் அழகாய்
நாணங்கள் வந்து
நடித்திடும் சுகமாய்.

மௌனத்தின் கூடு
உடைகின்ற பொழுது
வார்த்தைகள் வந்து
வழிந்திடும் அழகு.

மெது மெதுவாக
முகவரி மாற்றம்.
முதன்முதலாக
உயிர் அரங்கேற்றம்.

செல்போன் எண்கள்
சேமிக்கும் மனதில்.
முகநூல் பக்கம்
நிறைத்திடும் அழகில்.

சிந்தி விழுந்திடும்
வார்த்தைகள் கவிதை.
சொல்லத் துடித்திடும்
முளைவிடும் மனதை.

எச்சில் முழுங்கி
எழுத்தையை விழுங்கி
தப்பாய் விக்கியே
தண்ணீர் குடிக்கும்.

பார்க்கா நொடியினில்
பார்வைகள் இழக்கும்.
பாஷைகள் இன்றியே
பாடங்கள் படிக்கும்.

காற்றில் அலையும்
கார்குழல் உரசிட
மூச்சை இழந்து
மோட்சம் அடைந்திட

சிதறிய இதயம்
சிந்தித் தழும்ப
பதறிய விழிகள்
பார்வையில் விழுங்கிட

பயண நொடிகளில்
பைத்தியம் பிடித்து
சயன நேரத்தில்
சமிஞ்கைகள் கொடுத்து

இறங்கும் இடத்தை
இருவரும் மறந்து
இதயத்தை மாற்றியே
பிரிய மனமின்றிப் பிரிந்தோம்.

உயிரின் ஆவியை
உறிஞ்சியே புகையாய்
ரயிலின் எஞ்சினும்
புகை ஊதியேக் கிளம்பும்.

நடையின் மேடையில்
நடைப்பிணமாக
புகைவண்டியின் பாதையில்
புலம்பியே திரும்பினோம்.

இருவரும் பிரிந்த
இருப்புப்பாதையை
நினைத்துப் பார்த்தே
சுகமாய் அழுதோம்.

அலுவல் அவசரம்
ஆயிரம் கலவரம்
நகரும் வாழ்க்கையில்
மறதியில் இருவரும்.

ரசிக்கும் பயணம்
ரயிலின் சினேகம்.
புதுப்புது அனுபவம்
தினமும் தொடரும்.

(நன்றி  அனங்கன்)

One Comment on “நறுமுகை/ரயில் சினேகம்”

Comments are closed.