மோகன் ஜி /மோகினி

“சிரத்தையா எதையோ ஒட்டிகிட்டிருக்கியே? என்ன படம் அக்ஷரா இது?”

சற்று நேரத்துக்கு முன்புதான் அவள் கேட்டபடி வெள்ளைத்தாளை நீளவாகில் சில நறுக்குகளாக வெட்டிக் கொடுத்திருந்தேன்.

“டிஸ்டர்ப் பண்ணாதே தாத்தா! இந்த கட்டிங்கைல்லாம் சின்ன சின்னதா இப்படி மடிச்சுக் கொடு” என்றாள் ஒரு டெமான்ஸ்ட்ரேஷனோடு.

மடித்தேன். கொடுத்தேன்..

“போய்க் குளிச்சிட்டு வா”

குளித்துவிட்டு வந்தேன்.

தலையைத் துவட்டியபடி வந்து பார்க்கையில், அவளுடைய சித்திரத்திற்கு சடைப் பிரிகள் முளைத்திருந்தன. அதை முடிக்கும் முகமாக நாக்கைத் துருத்திக் கொண்டு வண்ணப் பென்சில்களால் டச்அப் செய்து கொண்டிருந்தாள்.

“சூப்பர் அக்ஷரா! யாரும்மா இந்தப் பொண்ணு? இவ்ளோ அழகா இருக்காளே?”

“இது நீ தான் தாத்தா! உன்னை கேர்ல் ஆக்கிட்டேன்!”

பொய்க்கோபம் காட்டினேன்.
“டேய் ! பிச்சிப்புடுவேன்” ஜாக்கிரதை உணர்வில் மேலும் பேசாமல் அதோடு நிறுத்தி விட்டேன்.

‘நானென்ன பொண்ணா?’ என்கிற மாதிரி கேட்டிருந்தால் என்னைப் புரட்டியெடுத்திருப்பாள். நானறிந்த பெண்ணியவாதிகளில் அக்ஷரா தலையானவள் . ‘பிங்க்’ நிற ஜிப்பாவைக்கூட நான் போட இயலாது!

“நல்லாத்தானே படம் போட்டிருக்கேன்?
இவள் பேரு மோகினி!”

“சூப்பரா இருக்குடா கண்ணு. கரெக்டா என்ன மாதிரியே இருக்கு” என்றேன்.

என் முகத்தருகே தாளை வைத்து ஒருமுறை சரிபார்த்தாள்.

“மோகினி தாத்தா! இவளை மாதிரி இனிமே தலை வாரிக்கோ” என்றபடி அகன்றாள்.

மோகினியாக இருப்பதில் எனக்கு என்ன ஆட்சேபனை இருக்கமுடியும்?

மீள்