பி.ஆர்.கிரிஜா/சிதைந்த வாழ்க்கை

அமுதாவிற்கு தூக்கம் வரவில்லை. தனக்கு ஏற்பட்ட கொடுமையை நினைத்து கண்ணீர் விடத்தான் முடிகிறதே தவிர யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. படித்திருந்தாலாவது ஏதோ ஒரு வேலை கிடைத்திருக்கும். வீட்டில் உள்ள வறுமையின் காரணமாக அவள் அப்பா தம்பியைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இவளை பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த இவளை விட பன்னிரெண்டு வயது பெரியவனை இவளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஏனெனில் அவர்கள் சீர் எதுவும் கேட்காமல் கோவிலில் கல்யாணத்தை முடித்தனர். இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது , அவள் கணவன் வீராச்சாமி இல்வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் என்ற உண்மை. இது பேரிடியாக அமுதாவின் தலையில் இறங்கியது. அம்மாவிடம் சொல்லலாம் என்றால் திருமணம் செய்து கொடுத்த கையோடு இவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அவர்கள் கவனம் முழுவதும் தம்பி செல்வத்தின் மீதுதான். ஏதோ அவன் பிற்காலத்தில் தாய் தகப்பனைப் பார்த்துக் கொள்வான் என்ற அசராத நம்பிக்கை.
இவள் இருதலைக் கொள்ளி எறும்பாய் துடித்தாள்.
மாமியார் கேட்கவே வேண்டாம், இவள் வந்தவுடன் எல்லா வேலைகளையும் இவளைச் செய்யச் சொல்லி விட்டு திண்ணையில் உட்கார்ந்து அக்கம் பக்கத்தில் வம்பு பேசுவதில் மும்முரமாக ஈடுபட்டாள்.
தன் தலை விதியை நொந்து கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
நாட்கள் உருண்டோடின. அமுதா ஒரு குடிசைத் தொழிலில் தன்னை இணைத்துக் கொண்டு ஓரளவு வருமானம் ஈட்டத் தொடங்கினாள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடின. அப்போதுதான் அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் கற்பகம் உடம்பு முடியாமல் படுத்த படுக்கை ஆகி விட்டாள். ஏற்கனவே அவள் கணவன் மூன்று வருடங்களுக்கு முன் கொரோனா வந்து காலமாகி விட்டார். அவளும் அவள் ஆறு வயது மகனும் தான். ஒரு தீர்மானத்துடன் அமுதா அவள் வீட்டிற்குச் சென்று கற்பகத்திடம் அவள் பிள்ளையை தனக்குக் கொடுக்கச் சொல்லி கேட்டாள். தான் நன்றாக அவனைப் படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பதாக அவளிடம் உறுதி அளித்தாள். கற்பகமும் சிறிது யோசித்து விட்டு சரி என்றாள்.
அடுத்த நாளே அமுதா தான் வேலை செய்யும் குடிசைத் தொழில் மையத்தில் உள்ள மேலாளரை அணுகி அவரிடம் விஷயத்தைக் கூறினாள். அவரும் ஒரு பேப்பரில் கற்பகம் தன் மகனை அமுதாவிற்கு தத்து கொடுப்பதாக எழுதி அதில் இருவரின் கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அமுதா கற்பகத்தின் சென்று விஷயத்தைக் கூறி அவளிடம் கையெழுத்துப் போடச் சொன்னாள். இருவரும் ஆறாம் வகுப்பு வரை படித்திருந்ததால் கையெழுத்து போட்டனர். அதற்கேற்றாற்போல் சில நாட்களிலேயே கற்பகம் இறந்து போனாள்.
அமுதா அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். அவள் கணவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள்தான் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து
விட்டாளே ….. வாயை மூடிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தான். மாமியாருக்கும் உடம்பு முடியாமல் போனதால் அவளும் வாயைத் திறக்கவே இல்லை.
வாழ்க்கையில் இந்தக் கட்டத்திலாவது தன்னால் சுயமாக முடிவெடுக்க வைத்த அந்த இறைவனுக்கு மனதார நன்றி சொன்னாள் அமுதா. காலைச் சூரியன் பளீர் என்று முகத்தில் பட்டது. ஆம். சிதைந்து போன அவள் வாழ்க்கையிலும் ஒளி வீச ஆரம்பித்தது.


07/06/2024