
போயிற்று! எல்லாம் போயிற்று! இத்தனை வருடங்களாக மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த என் பொக்கிஷங்கள்.. எல்லாம் ஒரு நொடியில் எரிந்து சாம்பலாய்ப் போயிற்று! எல்லாம் என் தவறு! அவளை நம்பி எல்லாவற்றையும் கொடுத்தேன் அல்லவா! எனக்கு இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும்!
இத்தனை வருடங்களாக யாரையும் நம்பாமல் நானே பத்திரமாக வைத்திருந்தது எல்லாம் வீண்! என் மூளையற்ற செயலால் அத்தனையும் இந்த நெருப்பின் பசிக்கு இரையாகிப் போனதே!
என்னால் தாங்க முடியாமல் வாய் விட்டு அழுதேன். முகத்தை மூடிக் கொண்டு அழுது தீர்த்தேன்.
இனி அழுதுதான் என்ன பயன்? போனவர் மீள்வாரா? அல்லது நெருப்பில் அழிந்து போனதுதான் மீளுமா?
அழுது அழுது ஓய்ந்து போனேன். ஆனால் என் வேதனையும் வருத்தமும் குறையவேயில்லை.
எப்படிக் குறையும்? எத்தனை வருடங்கள்? முப்பது இருக்குமா? முப்பத்தைந்து? எத்தனையாயிருந்தால்தான் என்ன? அத்தனையும் போயிற்றே!
தகதகவென்று எரிந்து முடிந்ததை வெறித்தேன்.
எரிந்து முடிந்த சாம்பலுக்குள் எதோ ஒன்று பளபளத்தது.
என்ன அது? மெதுவாக பாதி எரிந்து கிடந்த சுள்ளியை வைத்து சாம்பலைக் கிளறினேன்.
என் பொக்கிஷமா அது? ஆம்! அதுவேதான்! நெருப்பில் அழியாமல் பத்திரமாக வைத்தது வைத்தது போல அப்படியே இருந்தது.
மேலே மூடியிருந்த சுள்ளிகளும் என் பொக்கிஷத்தின் மேல் டப்பியும் மட்டும்தான் எரிந்திருக்கிறது. என் பொக்கிஷம் எரியவில்லை.
இறைவா! உனக்குதான் என் மேல் எத்தனை கருணை!
மெதுவாக என் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எடுத்தேன். கை கொஞ்சம் சுட்டது. சுட்டால் என்ன? என் பொக்கிஷம் கொஞ்சம் கூட அழியாமல் பத்திரமாகக் கிடைத்துவிட்டதே! இது போதும்! இதைப் பார்த்துக் கொண்டே இன்னும் இருக்கும் என் மிச்ச வாழ்க்கையை ஓட்டிவிடுவேன்.
சொல்லிக் கொண்டே அவற்றை எடுத்து என் கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
“என்னாத்த சொல்றது? என்னமோ பவுன் நகை மாதிரி அந்த கண்ணாடி வளவிய வெச்சிகினு கெழம் படுத்தற பாடு.. எடுத்து நெருப்பில போட்டேன்.. அதுக்கு போயி என்னா அழுவ அழுவுது..” அவள் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் கிடக்கிறாள். அவளுக்கென்ன தெரியும் இந்த வளையல்களைப் பற்றி.
நீ ஒண்ணும் அழுகாதம்மா! அப்பா உன் வளையலை பத்திரமா காப்பாத்திட்டேன். இனிமே இத யாரிட்டயும் கொடுக்க மாட்டேன் சரியா?
“ஏய்! அவரு பாவம்டீ! பத்து வயசு பொண்ண கண் முன்னால ரோட் ஆக்சிடென்ட்ல பறி கொடுத்தவரு.. அதுல இருந்து அவரு சித்தம் கலங்கி போயிடுச்சு.. அவர் உயிர் வாழறதே அந்த வளையலாலதான்.. அதெல்லாம் அவரோட பொண்ணோட வளையல்கள்.. இத வாங்கிட்டு வரப்பதான் அந்த பொண்ணு செத்து போச்சு.. சாகறதுக்கு முன்னால அந்த பொண்ணு, அப்பா! என் வளையல்லாம் உடையாம பாத்துக்கோப்பா ன்னு சொல்லிச்சாம்.. அதான் அவரு அத அப்டி பாதுகாக்கறாரு.. அதப் போய் பிடுங்கி நெருப்பில போட்டிருக்கியே.. அறிவிருக்கா உனக்கு? போ! போயி சமைக்கற வேலைய பாரு!”
யாரோ அவளை திட்டினார்கள்.
அப்டிதான்! நல்லா திட்டு வாங்கட்டும்! என் செல்லத்தோட வளவிய எடுத்து நெருப்பில போட்டா ல்ல.. நல்லா திட்டு வாங்கட்டும்.
♥♥♥♥♥♥
நன்றியுடன்,
