
பூனையைப் போல் இருக்கிறாள் , பூனையைப் போல் நடக்கிறாள், பூனையைப் போலவே பதுங்குகிறாள் என்று இவளைப் பற்றி கல்லூரியில் தோழிகள் சொல்வார்கள். அது உண்மை தான் என்பது போல சிறிது காலத்தில் அவளது பெயரே ” பூளை ஸ்வேதா ” என்று மாறிற்று.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல திருமணத்திற்குப் பிறகு அவன் அவளை “மியாவ் ” என்று தான் அழைப்பான். அதற்குள் அத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.. சிரித்துக் கொள்வாள். அவளுக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்திருக்கிறதென்று அவன் உறுதிப் படுத்திக் கொண்டான்
ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய போது கையில் ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்தவன்
” இதோ என் பூனைக் குட்டிக்கு ஒரு அபூர்வமான பிறந்த நாள் பரிசு.
” இந்தப் பரிசு உனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டால் , எனக்கு நீ நூறு முத்தம் தர வேண்டும் ” என்றான்.
” அப்படியே ” என்றவள் நான்கு பக்கமும் துவாரங்கள் கொண்ட அந்த அட்டைப் பெட்டியை ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள் . பார்த்தவள் திடுக்கிட்டாள்.
உள்ளே ஒரு பட்டு பட்டு பூனைக்குட்டி . படுத்திருந்தது. ” அய்யோ ” என்று அலறி விட்டாள்.
தூக்கத்தை கலைத்ததும் பட்டுக் குட்டி
மெல்ல சோம்பல் முறித்து, கண் விழித்து “மியாவ்” என்றது. அவ்வளவு தான் ” உவ்வே “என்றபடி அந்தப் பூனைக்குட்டியை அட்டையுடன் சேர்த்து அவன் மேல் விட்டெறிந்தாள். அது அவன் மார்பில் தொற்ற நினைத்து முடியாமல் போகவே பொத்தென்று கீழே வழக்கி விழுந்தது.
“ஏன் செல்லம் என்னாச்சு’? ” என்று அவன் பதறிப் போய் கேட்டான். அவள் உடல் நடுங்கியபடி இருக்க ” பூனையை எனக்கு சுத்தமா பிடிக்காது, அவ்வளவு அலர்ஜி , “முதல்ல அதை தூக்கி
வெளியே போடுங்க ” ‘ என்றாள் அவசரமாக.
