தேவசகாயம் செய்வது அறியாமல் அலமந்து, நாற்காலியில் சாய்ந்தார். சூசை மாணிக்கம் வரும் நேரம் ஆயிற்று.மிக எதிர்பார்ப்புடன் வரும் அவரிடம் என்ன சொல்வது; எப்படி சொல்வது?
காலை ஜபத்தில் வைத்து தோத்திரம் செய்த வீட்டுப் பத்திரம் "கணகண " என எரிந்து கொண்டிருந்தது.காற்றில் சரிந்த,எரியும் மெழுகுவர்த்தியால் இந்த அசம்பாவிதம்.
தன் பையன் விக்டர் சம்பாதித்து அனுப்பின பணம், மொத்தமும் கொடுத்து அவருடைய வீட்டை கிரயம் செய்து வாங்கியிருந்தார். இன்று ரிஜிஸ்டர் ஆபிஸ் போவதாக இருந்த சமயத்தில் , இப்படி ஒரு நிகழ்வு.
சூசை மாணிக்கம் " "என்னப்பா கிளம்பலையா", என்று கேட்டபடி வரவும்; கண்ணீருடன் ஒரு வழியாக நடந்தவற்றை தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தார்.
ஒரு கணம் திகைத்துப் போனவர் " விடப்பா! இது ஒரு விசயமின்னு ஏன் பரிதவிக்கிற; மூல பத்திரமெல்லாம் ரிஜிஸ்டர் ஆபிஸில் இருக்கும். இப்போது உண்டான கிரயபத்திரம்; மற்றும் சில பேப்பர் மறுபடியும் எழுதிக்கிடலாம். என் செலவில் நானே ஏற்பாடு செய்கிறேன். நீ கலங்காதே.நான் மொத்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டேன் என்று எழுதி கொடுத்திடறேன். அதை இப்போதைக்கு வக்கீல் நோட்டரைஸ் பண்ணிக்கிடலாம். என்ன; கிரயபத்திரம் எழுதி மீதி பேப்பரெல்லாம் தயார் செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகும். உன்னையும் என்னையும் கர்த்தர் ஆசிர்வாதம் பண்ணுவார். நம்பிக்கை என்பது மனுசனுக்கு மனுசன் கொடுக்கற ஆசி எந்திரிச்சு வா".என்று நண்பர் சமாதனப்படுத்த, தேவசகாயத்திற்கு மீண்டும் கண்ணில் கண்ணீர் குளமாகியது.