
நல்ல நடுங்கும் குளிர். ஜேம்ஸ் தன் இரு கைகளையும் இறுக முகத்தில் அழுத்திக்கொண்டு கண்களை மூடி வெலவெலத்து உட்கார்ந்தார்.
அந்த அறையில் அவரைத் தவிர யாரும் இல்லை.
அருகில் அடுப்பு ஓன்று அறைக்கு சூடு அளித்துக் சற்று குளிரை குறைக்க உதவிக் கொண்டிருந்தது.
ஆனால், ஜேம்ஸ் க்கு வயது 70 ஆகிவிட்டது. அடுப்பின் கதகதப்பு போதவில்லை.
மனைவியை இழந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் அவள்.நினைவு இன்னும் புதுமையாகவும் பசுமையாகவும் இருக்கிறது.
ஒரு கப் சூடான தேனீர் குடித்தால் தேவலை.ஆனால் யார் போட?
நகரக் கூட முடியவில்லை.
சாக்ஸ், ஷூ எல்லாம் போட்டும் பல்லை கடிக்கும் குளிர்.நாற்காலியில் அவர் பசை வைத்து ஓட்டினார் போல் உட்கார்ந்தவர் எழ மனசு வரவில்லை.
சற்று நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு நடுங்கிய வண்ணம் கதவின் பக்கம் போய் ஜன்னல் கம்பி வழியாக பார்த்தார்.
என்ன ஆச்சர்யம்?
பக்கத்து வீட்டில் இருந்து சிறுவன் ராகுல் கையில் ஃப்லாஸ்க், கப் சகிதம் சிரித்தபடி நின்று
“தாத்தா,.கதவைத் திறவுங்கள். அம்மா தேனீர் அனுப்பி இருக்காங்க. ரொம்ப குளிர் தாத்தா.?”
ராகுல் உள்ளே வந்து கோப்பையில் தேனீர் ஊற்றி பாக்கெட் உள் இருந்து பிஸ்கட் எடுத்து தட்டில் வைத்தான்.
ஜேம்ஸ்க்கு தன் பேரன் ரோஹனை பார்த்தது போல் மகிழ்ச்சி.
இது வரையிலும் அவர் ராகுல் பெற்றோர்களை பார்த்ததே இல்லை.
ராகுல் அப்பப்ப வந்து அவரோடு செஸ்
விளையாடுவான்.
இன்று ராகுலைப் பார்த்து பழைய நினைவுகள் பலதும் எழும்பி அலை மோதியது.
ஜேம்ஸ் வாழ்கை சிதறி சின்னாபின்னம் ஆனது அவர் மனைவி ரோஸி இறந்தவுடன்.
எல்லாம் அவளோட போய்விட்டது. சொந்த பந்தங்கள் யாரும் நெருங்குவதில்லை.
ஒரே மகன் லண்டனில் வேலை. காதலி மருமகள் ஆனாள்.
நான்கு ஆண்டுகளில் காதல் சலித்து விட்டது போலும்.
விவாகரத்தில் முடிந்தது.
ரோஸி மிகவும் மனம் நொந்து போனதனால் தானோ என்னவோ இத்தனை விரைவாக ஜேம்ஸ் சை தனிமையில் விட்டு போய் விட்டாள்.
மகன் மீண்டும் திருமணம் செய்து கொண்டான்.
முதல் மனைவியில் பிறந்தவன் தான் ரோஹன்.
அருமை பேரன்.
ரோஹன் மிக துடிப்பான பிள்ளை.
ரோஸி இறப்பதற்கு. சரியாக ஒரு வருடம் முன்பு, குட் ஃப்ரய்டே அன்று ரோஹன் நண்பர்களுடன் கடலில் குளிக்க போய் பேய் அலை ஒன்று எமனாக வந்து ரோஹனை விழுங்கியது. உடல் கூட கிடைக்கவில்லை.
அன்று படுத்த ரோசியும் ஓராண்டு கிடந்து அவளும் போய் சேர்ந்து விட்டாள்.
தனிமை மட்டுமே இப்பொழுது எல்லாம் ஜேம்ஸ் க்கு சொந்தம்.
நடுங்கும் குளிரில் ராகுலை அணைத்து நெஞ்சோடு சேர்த்து கொண்டபோது ஒருத் தனி உணர்வு, ஆயிரம் சொந்தங்கள் கூட இருப்பது போல.
“ரோஹன், நீ என்னுடனேயே இரு”என்றார் ஜேம்ஸ்.
ராகுல் விக்கித்து நின்றான்.
