
சைக்கிளை துடைத்து துடைத்து பள பளவென வைத்திருந்தான். சோமு. அவனுக்கு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த சைக்கிளைத் தொட விட மாட்டான். அவன் அப்பா கூட சில சமயம் கெஞ்சுவார், ” சோமு.. நான் அம்புட்டு தூரம் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து. போய் பஸ் பிடிக்க கஷ்டமா இருக்கு பா..எனக்கு உன் சைக்கிளை கொடுத்துட்டு புதுசா வாங்கிக்க ராசா “
“.ம்ம்… போயா உன் வேலய பாத்துக்கிட்டு” என்று எரிந்து விழுந்தான்.
தன் விதியை நொந்து கொண்டு அங்கிருந்து வாயைத் திறக்காமல் சென்றார்.
அவன் தயவு தேவை. சம்பாதிக்கிற பய….பொறுத்துத்தான் போகணும்… மனதில்
முனகியவாறு பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தார்.
சோமு விசிலடித்துக் கொண்டே தன் அலுவலகத்திற்கு சைக்கிளில் கிளம்பினான்.
சோமு…. சோமு என்று யாரோ அவனைக் கூப்பிட்டனர். குரல் வந்த திசையில் பார்த்தான்..அவன் நண்பன் செந்தில். ப்ரேக் போட்டு சைக்கிளை நிறுத்தி “என்னப்பா … என்ன விஷயம் ?” என்று கேட்டான்.”சோமு ..எங்கப்பாக்கு சீரியசா போச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன். கைல சுத்தமா பணம் இல்ல…அதான் உன்கிட்ட
கேக்கலாம்னு…..” என்று இழுத்தான். சோமுவுக்கும் ஒரு சாதாரண வேலை தான். மாசக் கடைசி ஆனா திண்டாட்டந்தான். ஒரு நிமிடம் யோசித்து விட்டு ” சரி வா செந்தில்… என்னோடு வா … என்று அவனைக் கூட்டிக் கொண்டு விரைந்தான். செந்திலும் நம்பிக்கையுடன் அவனோடு நடந்தான். நேராக பழைய சைக்கிள் கடையில் போய் சைக்கிளை விற்று ஒரு ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை அவன் கையில் கொடுத்தான். செந்தில் உணர்ச்சிப் பெருக்கில் அவனைக் கட்டிக் கொண்டான். அவனை அனுப்பி விட்டு பஸ் ஸ்டாப் வந்தான் . அவன் அப்பா இன்னும் பஸ் வருவதற்காக காத்திருந்தார். அவரிடம் விவரத்தைக் கூறினான். அதற்குள் பஸ் வந்து விடவே இருவரும் சேர்ந்து ஏறினார்கள். இப்போது அப்பாவிற்கு களைப்பே தெரியவில்லை. மகனைப் பெருமையுடன் பார்த்தார். சோமுவும் புன்னகையுடன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.
