பொன்னையா வாத்தியார்

இரா.நாறும்பூநாதன்

” தண்ணீ  வந்துட்டா ?”  பொன்னையா வாத்தியார் வேப்பங்குச்சியால் பல்துலக்கியபடி

காம்பவுண்டு சுவர் வழியே எட்டிப்பார்த்தபடி கேட்டார்.

மனுஷனுக்கு எப்படித்தான் வேர்க்குமோ தெரியல.

நள்ளிரவு முதல் போர் போடும் சத்தம் கேட்டு வந்திருக்க வேண்டும் .

அவர் வீடு இங்கிருந்து ஐநூறு மீட்டர் தள்ளித்தான் இருக்கிறது.

அவருக்கு யார் வீட்டில், வீட்டு வேலை நடந்தாலும் முதல் ஆளாய் போய் நின்று ஏதாவது அபிப்பிராயம் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும்.

” யார் காண்ட்ராக்டர் ?” என்பார்.

சொல்லி முடிக்குமுன்பே, ” அவன்கிட்டயா கொடுத்துருக்கீக ? அவன் சதுர அடிக்கு கட்டுற ரேட் வேண்ணா குறைய தெரியும். ஆனால், கலவை சரியா இருக்காது. போயும் போயும் அவன்தானா கிடைச்சான் உங்களுக்கு ” என்று சொல்ல ஆரம்பிப்பார். கேட்கும் நபர் மூஞ்சி சுருங்கிப்போகும்.

ஒரு சமயம் பாத்துமா கோவில் பள்ளிவாசல் பக்கம் நின்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

” இங்கன மட்டும் ரெண்டு பிளாட்டை வாங்கிப்போட்டீகன்னு வைங்க. அஞ்சு வருசத்துல என்னமா ரேட்டு ஏறும்கீக ? ஒரு பிளாட்டை வித்து, இன்னொரு பிளாட்டில் பெரிய பங்களாவே கட்டீரலாம், அஞ்சு பைசா செலவில்லாமல். நால்வழி சாலைன்னு ஒன்னு வரப்போகுதுன்னு சொல்லுறாங்க..அது மட்டும் வந்ததுன்னு வைங்க..ரோடு முழுக்க வெளிநாட்டு  கார் கம்பெனிகள் வந்துரும். சொல்லிக்கிடுதாங்க. அப்புறம் வேலைக்கு என்னத்துக்குப் போகணும் ? திண்ணையில படுத்துக்கிட்டு காலாட்டிட்டே சாப்பிடலாம்..”


இளிச்சவாயர்கள் என்று நெத்தியில் எழுதாக்குறையாக நிற்கும் நாலு பேரிடம் மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார் அவர்.

எதிராளிக்கு லேசாக சந்தேக ரேகை முகத்தில் படர்ந்து விடாதபடி சாதுர்யமாய் பேசுவார்.

“..என்கிட்ட மட்டும் இப்ப ஒரு அஞ்சு பெரிய நோட்டு இருந்ததுன்னு வையுங்க..( அஞ்சு பெரிய நோட்டு என்பது அம்பதாயிரமாம் ) கண்ணை மூடிட்டு ரெண்டு பிளாட்டு வாங்கிப்போட்டுட்டு அக்கடான்னு இருந்துருவேன்..பொன் விலையுற பிளாட்டு..எண்ணி ரெண்டே வருசத்துல டபுள் லா ஆயிரும். பத்து வருஷம் போட்ட ரூபாய மறந்துட்டு செவனேன்னு இருந்தீகன்னு வைங்க..அப்புறம் என்னாகும் ..சொல்லுங்க அண்ணாச்சி ” என்று நம்மையே கேள்வி கேட்பார்.

எதிராளி என்ன சொல்ல என்று தெரியாமல் முழிப்பார்.

” எனக்கு ஒரு கோவில் கட்டி கும்புடுவீக..” என்று ஒரு போடு போடுவார்.

” இடத்தோட விலை அப்படி ஒரு ரேட்டுக்கு போயிருக்கும்..ஆமா “
என்று சொல்லி விட்டு, ஒரு ஓரமாய்ப்போய் கோல்ட்பிளாக் பில்டர் சிகரெட்டை பவ்யமாக பற்ற வைப்பார்.

இடம் வாங்க வந்தவனுக்கு யோசிக்க டயம் கொடுக்காராம்.

மனுஷன் ரியல் எஸ்டேட் தொழிலுக்குத்தான் முதலிலேயே வந்திருக்க வேண்டும். பி.எட்.படிச்சுட்டு வாத்தியார் வேலைக்கு ஏன் வந்தார்னு தெரியலை.
அன்றொரு நாள், மாலை ஆறு மணிக்கு சிமெண்ட் கடைப்பக்கம் நின்று கொண்டிருந்தார்.

” இப்ப மூடை என்ன ரேட்டுப்பா ? சிமெண்ட் விலை குறைஞ்சிருக்குன்னு பேப்பர்ல போட்டுருக்கானே ” என்று விசாரித்துக்கொண்டிருப்பார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பக்கம் ஒரு சிவில் என்ஜினீரை பார்க்கப்போயிருந்தேன்.

அவரது அறையில் மேஜையில் விரித்து வைக்கப்பட்டிருந்த வரைபடத்தைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்த இரண்டு பேரில் ஒருவர் பொன்னையா வாத்தியார்.
” ..ரோட்டுக்கு கிழக்கே இருக்கு நீங்க சொல்றது..மேற்குப்பக்கமா ஒரு ரோடு போகுது பாருங்க..” என்று அந்த வரைபடத்தை பார்த்து தீவிரமாய் சொல்லிக்கொண்டு இருந்தார்.
தூணிலும் துரும்பிலும் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, பொன்னையா  வாத்தியார் இருப்பார் என்றே நினைக்கிறன்.

அதிகாலையில், ரஹமத்நகர் தாண்டி நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு காலிமனையில், இவர் ஒரு கவட்டைக்கம்பு வைத்தபடி அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தார். கம்பு இவர் கைப்பிடியில் இருந்தபடி சுழன்று கொண்டிருந்தது அல்லது சுழற்றிக்கொண்டிருந்தார் , எதோ ஒன்னு.
கூட நின்று கொண்டிருந்த இருவரது கண்களிலும் சந்தோச ஒளிக்கீற்று.
அடப்பாவி..இந்த வேலையும் வேற செய்கிறாரா ?

தண்ணீர் நீரோட்டம் பார்க்கிறாராம்.

” இந்த இடத்துல போட்டா, அட்சயபாத்திரத்தில் இருந்து கொட்டுவது போல கொட்டும். தண்ணீர் இனிச்சுக்கிடக்கும் ஐயா..சுத்துவட்டாரம் முழுக்க தண்ணி வத்தினாலும், உங்க வீட்டுத்தண்ணி வற்றாது. எல்லாவனும் உங்க வீட்டு வாசல்ல தானே கிடப்பான்..”
பேசியே அஞ்சு சின்ன நோட்டுக்கு வழி பண்ணி விடுவார்.

நான் பொன்னையா வாத்தியாரிடம் ” சார்..ரிட்டயரான கைவசம் நிறைய வேலை இருக்கு உங்க கிட்ட ” என்பேன்.

” இதெல்லாம் ஒரு கலை தம்பி..நாலும் கத்துக்கணும் ” என்று சொல்வார்.

வங்கி வேலையாக ஒருமுறை, சப் ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் சென்றபோது, கூட்டத்தில் அவர் முகமும் தெரிந்தது. டோக்கன் நம்பர் பதினாறு என்று அழைத்தபோது, யாரோடோ இவரும் உள்ளே ஓடினார்.

இன்னொருமுறை, மணல் லோடு அடிக்கும் லாரிக்காரனுடன் சீரியஸ் ஆகப்பேசிக்கொண்டிருந்தார்.

ஒருமுறைகூட, அவரை பள்ளியில் வைத்து நான் பார்த்ததே இல்லை.

ஆனாலும், அவரை எல்லோரும் பொன்னையா வாத்தியார் என்றே அழைத்தார்கள், நான் உட்பட.

2 Comments on “பொன்னையா வாத்தியார்”

Comments are closed.