ப்ரியம்/நகுலனின் இரு நீண்ட கவிதைகள்

நான் ஒரு

உடும்பு

ஒரு

கொக்கு

ஒரு

ஒன்றுமே இல்லை

(அஞ்சலி) 109

நகுலனின் இரு நீண்ட கவிதைகள் நவீன கவிதைகளில் நல்ல முயற்சி. ஆனால் இவை இரண்டும் நீண்ட கவிதைகள் தாமா? என்ற கேள்வி நெடுநாட்களாய்

மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. சிறுசிறு கண்ணிகளாக 193 கண்ணிகள்.

இக்கண்ணிகள் ஒற்றைப் பொருளை மையம் கொண்டது. அது அவருடையஅனுபவம். அந்த அனுபவமென்பது அப்படியே நம்மிடம் ஒப்படைப்பது அல்ல.அது பெருந்திரளான கூறுகள்.புரண்டு செல்லும் நினைவோட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

சூரிய நமஸ்காரத்தில் தொடங்கும் அஞ்சலி ஐந்தாவது கண்ணியில் சிறு

கேள்வியோடு பயணிக்கிறது.

“அந்தரத்தில் பறந்ததொரு பறவை:

ஒருமுறை பார்த்த பின்னர்

இருமுறை கண்டேன்

என்று சொல்வது முண்டோ?”

அது மேலும் நகுலனின் செதுக்கல்களாக

காட்சிகளாக கேள்விகளாக தகர்ப்புகளாக தன் எழுத்துகளாக பிறர் எழுத்தின் மீதான தழுவல்களாக சூழலின் தோற்றங்களாக அரசியல் எதிர்ப்புணர்வுகளாக சிந்தனைகளாக இன்ன பிற கவிஞர்களின் பாதிப்புகளாக புரண்டு செல்கிறது.

“அக்காக்குருவி என்றொரு பறவை;

அதுவெனைக் கண்டு சிறகடித்துச் சிரிக்கும்” 8

என்ற வரிகள் கலாப்ரியா கவிதைகளுக்கு நகர்த்தி நினைவுப்படுத்தி அடுத்த கண்ணியில்

“இங்கு பனையேறி கள்ளெடுப்பார்

பந்தல் கட்டி மணம் முடிப்பார்.” 9

என தமிழ் நில வாழ்வின் திணைக்கு தாவுகிறது. அடுத்த கண்ணியில்

“வீங்குதிரைக்கடலில் பாய்ந்து சென்ற

தொருபாய்மரக் கப்பல் ;

கரை நெடுக ஒரு வரிசை மீன் வற்றல்” 10

பழம் பெருமையைப் பேசும் வரியை

முன்வைத்து அடுத்த வரியில் மீன்களை

காயவைக்கும் நெய்தலுக்கு மாறுகிறது.

ஆக நகுலனின் அனுபவமென்பது வாழ்க்கை. வாழ்வின் சகல பக்கங்களில்

புரளும் அவரின் நினைவுச் சுருள்களைத் தாவித்தாவிச்சென்று கண்டுணர வேண்டும். இக்கண்டுணர்வின் பேரம்சங்கள் மூலம் நகுலன் வரைந்து செல்லும் மிகப்பெரிய திரையொன்று புலப்படும். அது மட்டுமல்லாமல் ஊடே நிகழ்த்தும் கேள்விகள் சந்தேகங்கள்விவாதப்பொருளாக அல்லாமல் தனக்குத்தானே கேட்டுக்கொள்வதை

முன்வைப்பாகத் தந்துள்ளார்

தெய்வங்கள், பேய்கள்….

தெய்வங்கள் நிறைந்திருந்தால் பேய்களுக்கு இடமில்லை. பேய்கள் பணிபுரிந்தால் தெய்வங்களுக்கு வேலையில்லை இரண்டுமே கலாச்சாரத்தின் பின்புல அநித்திய வேலைக்காரர்கள் அவற்றையும் விவாதத்திற்குள் கொண்டுவருகிறார்.

“திக்குகள் அனைத்தும் திகம்பரமென்றால் தில்லையம்பலத்தானில் இகம்பரம் என்பதுண்டோ? 35

இது பட்டினத்தாருக்கு விடுக்கும் கேள்வி

“இடை அசைய நடை குலுங்க நடம் பயின்றாள் வாலைக் குமரி” 29

பெண்ணீர்ப்பு சொலவடை யென்றால்

“வெறித்து நின்ற என்னிலைக் கண்டு

ஈமக்காட்டில் மேல் கிழாக நடைபயிலும்

பேய்கள்” 30.

இப்படி நினைவின் பலமையப் பொருட்களை ஓரிடத்தில் குவித்து பெரும் மையத்தை உருவாக்குவது. (பேச்சு மொழியில் நாம் உருவாக்கும் மையம் சிதறாத

தன்மை போல இங்கு குறிப்பிட்ட ஒரு பொருளை பேசுவதல்ல.ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பற்று பேசினால் உளறல் எனும் பதம் பாயும். )

நகுலன் கவிதைகள் பிதற்றல்கள், உளறல்கள் என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. சொல்லட்டும். பிதற்றல்கள் வழியாக உண்மையை அறியும் பாதையாக நாம் கொள்ளலாம். அது மட்டுமல்ல உணர்ந்து பார்த்தோமெனில் இது ஒரு புதிய தோற்றுவாய்.சரியாக சொல்வதென்றால் நாம் பயணிக்கவும் சென்று திரும்பவதுமான மிகப்பெரிய Terminal ஐ உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார் ஒவ்வொரு கண்ணியிலும் ஒரு பயணம் .சில கண்ணிகள் ஒன்றையொன்று சந்திக்கச் செய்கின்றன. சில தனித்த பயணம் கொண்டுள்ளன.

முதலில் நகுலனை தத்துவ

மூட்டைக்குள்ளிருந்து விடுபட வைக்க வேண்டும்.மெல்லிய எதிர்ப்புணர்வு

கவிதைகளும் தென்படுகின்றன. அதிகாரத்திற்கு எதிராகவும்,

“ஆனாலங்கே அதிகாரமென்றாலக்கிரமம்

அக்கிரமமென்றாலோ

அநீதி

தட்டை வார்த்தைகள்

அடுக்கு மொழியில்

தடுக்கிவிழும் சொற்கள்.”144

கவிதை வெளிவந்த ஆண்டு 1975 அதன்

முன்னர் எழுதப்பட்டிருக்கலாம்.

திராவிட அரசியல் குறித்தும் மேடை இலக்கியம் குறித்தும் இக்கவிதையில்

எதிர்கருத்துகளாக பதிந்துள்ளன.

இதனால் நாம் இவரை தவிர்த்துவிட முடியுமா?

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால்

மணக்காமலா போய்விடும்.

All reactions: