இப்படியெல்லாம்கூட_பெற்றோரை_பிள்ளைகள்_ஏமாற்ற_முடியுமா என்ற அதிர்ச்சி விலகாமல்தான் இதை எழுதுகிறேன்!
மதுரையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் அது. ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். கையில் பாதியளவு பணமும் இருந்தது..ஆனால், அப்பாவுக்கு ரிடையராக இன்னும் 5 வருடங்களே இருந்தன. அதனால் அவர் பேரில் லோன் வாங்க முடியாது என்பதால், பையனிடம் ஆலோசனை கேட்டார்கள். பையன் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு பெங்களூருவில் இருக்கும் மிகப் பிரபலமான ஒரு மல்டிநேஷனல் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் துறையில் பணி புரிய ஆரம்பித்து 6 மாதங்கள் ஆகியிருந்தது..
பையன் படித்துக் கொண்டிருக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் அப்படியொரு மிகப் பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்தில் வேலை கிடைத்துப் போனது பற்றி அந்தப் பெற்றோருக்கு சொல்ல முடியாத பெருமை!. தங்கள் சொந்த பந்தங்கள் என்று அனைவரிடமும் இதுபற்றி பெருமையாக அந்த அம்மா குறிப்பிடுவார். ‘‘எங்க பையன் பிளஸ் டூ விலேயே 1045 மார்க் எடுத்தவன். எப்போவும் அவனுக்கு படிப்பு பத்தின ஞாபகம்தான். நாங்க வீட்டுக்கு ஒரு காய்கறி வாங்கணும்னாகூட பையன்கிட்டே வேலை சொல்ல மாட்டோம்!’ என்று மகன் பெருமை சொல்லிக் கொண்டேயிருப்பார்.
பையனுக்கு நேரமிருக்காது என்பதால் அவன் துணிமணிகளைக் கூட அவனது அப்பாதான் தன் கையாலேயே துவைத்துக் கொடுப்பார்.
வீடு வாங்கவிருக்கும் விஷயம் பற்றி மகனிடம் சொன்னார் அம்மா. ‘‘தம்பி.. அப்பா கையில் பாதியளவு பணம் இருக்கு… நீயும் லோன் போட்டேன்னா, இப்போ பார்த்து வச்சிருக்க வீட்டை வாங்கிடலாம்’’ என்று பையனை மொபைலில் கூப்பிட்டுச் சொல்லி ஒரு மாதமானது.. ஆனால், பையனோ, ‘‘நான் இப்போ ரொம்ப பிஸியா இருக்கேம்மா’ என்று சொன்னதோடு சரி. அதுகுறித்து மறுபடி பேசவே இல்லை.
இடையில் ஒருநாள்
அவன் லீவுக்காக மதுரை வந்தபோது, வங்கியில் அதிகாரியாக பணிபுரியும் தெரிந்த குடும்ப நண்பரும் வீட்டுக்குவர, இதே விஷயத்தை மறுபடி அம்மா ஆரம்பித்தார்.
அந்த வங்கி அதிகாரி, லோன் போட்றலாம் என பையனிடம் சம்பளத்துக்கான சான்றிதழ் தரக்கேட்டிருக்கிறார். நெருக்கிப் பிடித்துக் கேட்டபோதுதான் தெரிந்தது, அவன் அப்படியொரு நிறுவனத்தில் பணிபுரியவே இல்லை என்கிற உண்மை!! விசாரிக்க விசாரிக்க அவனுக்கு இன்னும் வேலையே கிடைக்கவில்லை என்ற விவரமும் புரிந்தது..
அந்த பெற்றோரால் அப்படியொரு உண்மையைத் தாங்கவே முடியவில்லை. உடைந்து போனார்கள்!..
வேலையே கிடைக்காமல் அப்புறம் ஏன் பெங்களூரு போனான்? அல்லது பெங்களூரு போகவில்லை என்றால் அந்த 6 மாதமும் வேறு எங்கே இருந்தான் என்றும் புரியவில்லை.
அப்பா உடனே மனதைத் தேற்றிக் கொண்டு, ‘‘சரி, விடு. கேம்பஸில் வேலை கிடைத்தால்தான் ஆயிற்றா? எத்தனையோ பசங்க அப்புறம்தானே வேலை தேடறாங்க. நீ மத்த இடங்களுக்கு அப்ளை பண்ணு!’’ என்று ஊக்குவித்தார். ஆனாலும் மகன் அதிலும் ஆர்வம் காட்டவில்லை. மறுபடி விசாரித்தால் அவன் இன்னும் காலேஜ் அரியர்ஸே முடிக்கவில்லை என்ற விவரமும் தெரிய வந்தது. ‘‘கடவுளே!’’என்று தலையில் கை வைத்துக் கொண்டுவிட்டார்கள் பெற்றோர்.
‘‘முடிக்கலேன்னா, இப்பவாவது முடி. நாங்க இருக்கோம்!’’ என்று அந்த நிலையிலும் கை கொடுத்தார்கள் பெற்றோர். ‘‘இல்லே இனிமே என்னால படிக்க முடியாது!’’ என்று திரும்பத் திரும்ப மறுத்தான் மகன்.
இவனுக்கு வேறு என்ன தான் பிரச்னை? என்று பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருவேளை நாலு பேப்பர் அரியர்ஸ் என்று சொன்னது போய், பத்து பேப்பருக்கு மேலே வச்சிருப்பானோ என்று பயந்து போய்க் கேட்டார்கள்.
‘‘உண்மையைச் சொல்லுடா? எத்தனை பேப்பர் இருக்கு? என்று கதறி அழுது விசாரிக்க விசாரிக்க, மொத்தமே காலேஜில் முதல் வருஷம் ஒரு செமஸ்டருக்கு மேலே அவன் போகவே இல்லை என்ற மகா பேரதிர்ச்சி பதில் கிடைத்தது!
மொத்தம் மிச்சம் இருப்பது 42 அரியர்ஸ் பேப்பர்கள்!
அப்போ அந்த 4 வருடங்களும் காலேஜுக்குப் போகிறேன் என்று வேறு எங்குதான் சென்றான்? பரீட்சைக்குப் பணம் கட்டப் போகிறேன் என்று வாங்கிக் கொண்டுபோய் வேறு என்ன செய்தான்?
பேசவே முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டார்கள் அந்த பெற்றோர். உறவுகளை எதிர்கொள்ள முடியாத அவமானம் வேறு அவர்களை அடித்து நொறுக்கித் தின்று கொண்டிருக்கிறது.
பிள்ளைகளை சந்தேகப்பட முடியுமா? என்றுதான் எந்தப் பெற்றோருமே நினைப்போம்?. ‘என் பிள்ளை அப்படியெல்லாம் ஏதும் செய்ய மாட்டான்’ என்ற நம்பிக்கையில் நாம் சொல்லும் வார்த்தைகள் அவை. ஆனால்..
பெற்றோரும் வீட்டுப் பெரியவர்களும் மட்டுமே நம் வீட்டுப் பிள்ளைகளை வளர்த்த காலத்தில் பிள்ளைகளை அப்படி நெகட்டிவாக நினைக்க அவசியம் இல்லாமல் இருந்தது. இன்றோ ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டி.வி., சினிமா போன்ற மீடியாக்களும் இணைந்து நம் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் ஒரு காலச் சூழ்நிலையின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதில் அவர்களுக்குக் கிடைக்கும் வழிகாட்டல் & தூண்டுதல் பொறுத்து பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் திசை மாறி நிற்க வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் சொல்லும் பதிலை ஒரு முறை அப்படியா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன் என்று
கல்லூரி ஃபீஸ் கட்ட அவ்வப்போது கல்லூரி சென்று வாருங்கள். அதான், நெட்டில் செமஸ்டர் மார்க்குகள் வருகிறதே. மகனோடு நீங்களும் செமஸ்டர் ரிசல்ட் பார்த்து கன்ஃபர்ம் செய்து கொள்ளுங்கள். பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே மார்க் விஷயத்தில் எதையும் மறைக்காமல் காட்டி, தன் சுகதுக்கங்களை வெளிப்படையாக ஷேர் செய்துகொள்ளும்படியான ஒரு நட்பான உறவில் நீங்கள் இருந்தாலே, பிள்ளைகள் உங்களிடம் எதையும் மறைக்க மாட்டார்கள்.
கல்லூரிகளும், ஒரு பையன் தொடர்ந்து கல்லூரிக்கு வரவில்லை என்றாலோ, தொடர்ந்து தேர்வுகள் எழுதவில்லை என்றாலோ அந்த பையனின் பெற்றோர் நம்பருக்குக் கூப்பிட்டு தகவல் சொல்வது அவசியம். படிக்கும் வயதில் வீட்டில் பிள்ளைகளை வைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பெற்றோருக்குமே இதை சமர்ப்பிக்கிறேன்!
-லோகநாயகி முகநூல் பதிவில்

All reactions:
92You, Puthiyamaadhavi Sankaran, Subashini Tirumalai and 90 others
