
சுகா: சாதாரணமா படிக்கற பையன் நல்லா படிச்சு என்ஜினியர் ஆகிட முடியும். ஆனா அவன் எவ்வளவு குட்டிக்கரணம் அடிச்சாலும் இலக்கியவாதி ஆயிற முடியாதில்லையா? அப்படித்தானே சொல்லுதாங்க!
வண்ணநிலவன்: இல்லை, நான் அப்படி நினைக்கல. இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.
யாராலையும் முடியும். இப்ப எழுத்தாளன் ஆகணும்னா நெறைய படிக்கணும். படிச்சு உங்க மனசுக்குள்ள போகணும். அது எப்படி வெளிய வருதுன்னு நாம சொல்ல முடியாது. எல்லாரும்தான் படிக்காங்க, ஆனா வெளிய வரும்போது எப்படி மாறுது, என்ன ரசாயன மாற்றம் நடக்குது அப்படின்னு சொல்ல முடியாது. அத வெச்சுதான் அதனோட மதிப்பைச் சொல்லுதோம். அதனால இது ஒரு பெரிய காரியம்னு நான் நெனைக்கவேயில்லை. அது அப்படிச் சொல்லக் கூடாது. எதையுமே பெரிசுன்னு நாம கொண்டாடக் கூடாது. எனக்கு அப்படி பழக்கம் கிடையாது. செய்யக்கூடாது அப்படின்னுதான் நான் நெனைக்கேன்.
தவிர ஒரே துறையில பல பேர் இருக்காங்க. நான் எழுதிக்கிட்டு இருக்கும்போதே பூமணி, வண்ணதாசன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன் எல்லாரும்தான் எழுதிக்கிட்டு இருந்தாங்க. அது மாதிரிதான் பாக்கேன். அதே மாதிரி முந்தின தலைமுறையில் ஜானகிராமன், புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தின்னு இருபது முப்பது பேர் தேறுதாங்க.
சூழ்நிலை ரொம்ப முக்கியம். எழுதறதுக்கான சூழல் இருக்கில்லையா, சூழல்னா சும்மா பேப்பர், பேனா, லைட்டு அந்த மாதிரி வசதியில்லை. ஒத்துப்போற மனோபாவம் இருக்கறவங்களோட இருக்கறது, எழூதறதுக்கான பத்திரிகைகள், அதுக்கான வேண்டுதல், அதெல்லாம் இருக்கணும். அதெல்லாம் இருந்தா நல்லா வர முடியும். இல்லையின்னா கஷ்டம்தான்.
-சுகா நேர்காணலில் வண்ணநிலவன் பதில்
நன்றி: சொல்வனம்
