சிறகு இரவி/கலக்கல் டாக்கீஸ்


  1. வெப்பன்
    அதாகப்பட்டது.. ஹிட்லர் ஆட்சியில் விஞ்ஞானிகளை வைத்து அரிய மருந்து ஒன்றை கண்டுபிடித்தார்களாம். அதை உடலில் ஏற்றிக் கொண்டால் சூப்பர்மேன் ஆகி விடலாமாம். இந்த காதுல பூவை விட்டு விட்டு தற்கால வசந்த் ரவியும்( அக்னி + ஆத்மா ) சத்யராஜும் ( செழியன் ) என்ன செய்தார்கள் என்று பூ மார்க்கெட்டை தலையில் ஏற்றி இருக்கிறார்கள். கொஞ்சம் சுத்தல் தான் என்றாலும் ஏதாவது சுவாரஸ்யமாகச் சொல்வார்கள் என்று காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!
    பிட்டு : இதுக்கு சிலந்தி கடியே பெட்டர்!
    #
  2. மைதான் ( அமேஸான்)
    அருமையான படம். அதிலும் அஜய் தேவகன் எனும் நடிப்பே வராத நடிகரை நடிக்க வைத்திருப்பது இயக்குனருக்கான விருது. அவரான அமித் ரவீந்தரநாத் ஷர்மாவுக்கு பலத்த பாராட்டு. பிரியா மணி சின்ன பாவங்களில் அள்ளுகிறார். நடுத்தர வயதில் இன்னும் சதை பிடிக்காமல் இருப்பது பிடிக்கிறது. படத்திற்கு இரண்டு ஒளி ஓவியர்கள்; இரண்டு எடிட்டர்கள்! ஒருவர் விளையாட்டு களம் தவிர மற்றதை சுட்டுத் தள்ள அதை அதற்கான கத்தரியுடன் விளையாடியிருக்கிறார் கூட்டான எடிட்டர். அதேபோல மற்ற காட்சிகளுக்கு ஓளியும் நறுக்கும் செமை. லைட்டா சிகரெட்டிற்கு எதிரான ஒரு உபதேசமும் உண்டு. கலை ஓவியரும் தன் பங்கிற்கு அச்சு அசலான சிற்றூரையும் வீடுகளை வடித்து தள்ளியிருக்கிறார். மனமும் நிறைகிறது.
    பிட்டு : பழைய சுருளை ஓட விட்டு மழைக்கோடுகளுடன் கோர்க்காமல் புதிதாக அதே காட்சிகளை அதே நாட்டு நடிகர்களோடு எடுத்திருப்பது மெனக்கெடலின் புதிய அவதாரம்.
    #
  3. மகாராஜா
    கதை பரண் சமாச்சாரம். ஆனால் அதற்கு திரைக்கதை எனும் டைல்ஸ் ஒட்டி நவீனமாக்கியிருக்கிறார்கள் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனும் எடிட்டர் ஃபிலோமின் ராஜும். மகளை சிதைத்தவர்களை பழி வாங்க வேண்டும். அதற்கு குப்பைத்தொட்டி காணாமல் போனதாக புகார் கொடுக்கும் விஜய் சேதுபதி ( மகாராஜா ) முதல் அரை மணி நேரம் சூது கவ்வும் சேதுவாக மாறி விடுகிறார். செமை கலாய். பின் ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ நமக்கு பதைப்பு கூடுகிறது.
    பிட்டு : பிட்டு துணியில பை தச்சா கூட நல்லாத்தான் இருக்குது!
  4. குரங்கு பெடல் ( ஆஹா ஓடிடி )
    நீங்கள் மணிகண்டனின் ‘காக்கா முட்டை ‘ திரைப்படத்தின் ரசிகரா? அப்ப இது அதன் சித்தப்பன் மகன். சைக்கிளே ஓட்டத் தெரியாத கந்தசாமிக்கு ஊர் மக்கள் வைத்த பெயர் நடராஜா சர்வீஸ். அவரது மகன் மாரியப்பன் வாடகை சைக்கிள் எடுத்து அதில் ஓட்டப் பழகுவதும் பின் தேர்ச்சி பெற்று சொந்த ஊரிலிருந்து அம்மாப்பேட்டை வரையிலும் பயணிப்பதும்.. ஒன் லைன்! படத்தில் வரும் நான்கு சிறுவர்கள் காளியை தூக்கி சாப்பிட்டு விட்டார்கள். அவர்களது முதிராத குரல்களும் கிராம நையாண்டியும் புன்னகையை நிரந்தரமாக படர உதவுகிறது. குரங்கு பெடல் அடிக்கும் மாரியை பள்ளி வாத்தியாரே தைரியம் கொடுத்து இருக்கை மேல் உட்கார்ந்து ஓட்ட ஊக்குவிப்பது நினைவில் சில காலம் நிற்கும் காட்சி.
    பிட்டு: இயக்குனர் கமலக்கண்ணன் எதையும் வலிந்து திணிக்கவில்லை. அதனால் குரங்கு பெடலில் ஆரம்பித்து ரேசர் சைக்கிள் சவாரியாக பயணிக்கிறது படம்.
    #

One Comment on “சிறகு இரவி/கலக்கல் டாக்கீஸ்”

Comments are closed.