ஒரு கொடுங்கனவின் இருப்பு

அதங்கோடுஅனிஷ்குமார்

கையறுநிலையின்
ஒருநாளை கடத்துவதற்குள்
அங்கலாய்ப்புகளின் குரல்கள்
நிம்மதி இழக்கச் செய்கின்றன.

மீட்சியின் கால்தடங்கள்
அழிந்த வண்ணமாய் இருக்கும் போது
கண்ணீர் வழிந்தோடி
காய்ந்த தடங்களில்
அலைக்கழிப்புகளின் கணங்கள்
தலைகாட்டி ரணப்படுத்துகின்றன.

விம்முதல்களுக்கும்
கதறல்களுக்கும் பதிலாக
ஒரு சொல்
கிடைக்கத் தவறும்
காலத்தில்
நாம் கை விடுகிறோம்
அல்லது
கை விடப்படுகிறோம்.

கோர காட்சிகளுக்கு
மௌன சாட்சியாய்
நிற்கும்
நம்மை மீட்டெடுக்க
எத்தனிக்கும்
ஒவ்வொரு நொடியும்
கண்களுக்குள் விழுகின்றன
பிணங்களின் முகங்கள்.

ஒவ்வொரு அடி
முன் வைக்கும் போதும்
ஏதோ ஒன்று
பின்னுக்கு இழுக்கிறது.

மயான
அமைதிகள்
நம்
இருப்பை
கேலி செய்யும்
காலங்களில்

இந்த வாழ்வின்
கைத்தலம் பற்றத் துடிப்பது
கொடுங்கனவொன்றை
சுமந்தலைய
சபிக்கப்படுவது
போலாகும்.
அதங்கோடுஅனிஷ்குமார்