வலம்புரிமுத்து

உஷாதீபன்

திருத்தக்கத் தேவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது சீவக சிந்தாமணி என்னும் செந்தமிழ்க் காப்பியம். இவர் இளமையிலேயே துறவு பூண்டவர். அவரது அறிவாற்றலையும், பெரும் புலமையையும் எண்ணுங்கால் மிகுந்த இளமையிலேயே காதலும், கற்பனையும் கலந்துறவாட, இன்பச்சுவை சொட்டச் சொட்ட சீவக சிந்தாமணியை அவர் இயற்றியிருப்பது நமக்கு மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தருகிறது. 

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியே முதல் காப்பியம் என்னும் பெருமைக்குரியது. சீவகனின் கதையைச் சொல்லும் இக்காப்பியம் கம்பனின் கற்பனைக்கு அடித்தளமாய் நின்று உதவியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பொறுப்பான ஆட்சியைத் தந்து சிறப்புச் செய்ய வேண்டிய அரசன், அந்தப்புரக் காட்சிகளில் மதி மயங்கியிருந்தால் ஆட்சிக்கட்டில் என்னாவது என்பதை விளக்கும் அறம் சார்ந்த நூல் இச் சீவக சிந்தாமணி. காவியத்திற்கான இலக்கணங்களைக் கட்டுக்கோப்போடு எடுத்துரைக்கும் இந்நூல் வாழ்க்கைக்கான அத்தனை இலக்கணங்களையும் வரையறுத்துச் சொல்கிறது என்பதனாலேயே இதன் பெருமை மேலோங்கி நிற்கிறது. 

ஆனாலும் காப்பியத்தின் பெண்மைக்கும், பெண்களுக்குமான எளிய கற்பனைக்கெட்டாத அதீத வர்ணனை நம்மை மதிமயங்கச் செய்கிறது என்பதே உண்மை. வலம்புரிச் சங்குக்குள் விளைந்த முத்துக்கள்  இந்த மண்ணில்  பிறந்த மாந்தர்களுக்கே பயன்படும். அழகுக்கு அழகு செய்யும்.  அதன் பயனை அந்த வலம்புரிச் சங்குகள் ஒருக்காலும்  அடைய மாட்டா. அது போலத்தான் பெண்களும் அவர்களின் பெற்றோர்களுக்கு…

தூசுலாய்க் கிடந்தவல் குற்றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி ஊசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றான் காசிலயாழ்ச் கணங்கொடெய் வக்காந்தர் வதத்தை யென்பாள்

தன் மகள் காந்தருவதத்தையின் சார்பாக மன்னன் கழலுவேகன் விலை மதிப்பற்ற கடகம் அணிந்த சீதத்தனின் முன் கையை அன்போடு பற்றி தன் மனைவியான தாரணிக்குக் காட்ட, அவள் அன்போடு உபசரிக்க…அவ்விடத்திலேயே மன்னன் ஒரு உறுதிமொழி கூறுகிறான். மணம் நிறைந்த மலர்க்கூந்தல்  உடைய மின்னல் கொடி போல் அழகிய முலையில் பூசிய சாந்தில் தோயும்படி அசைந்தாடும் நீண்ட குண்டலம் அணிந்து நிற்பவளாகிய இவள் தெய்வ மாதங்கியைப் போன்ற காந்தருவதத்தை எனப்படுபவள். இப்போது இவள் உன் மகளாவாள்…

இவளை உன் நகருக்கு அழைத்துச் சென்று இன்னிசைத் திறமையால் வாதில் வெல்லத்தக்க ஒருவனைத் தேர்ந்து அவனுக்கு இவளை மணமுடிப்பாயாக….என்று கூற நின் திருவுளப்படியே செய்து முடிப்பேன் என்று உறுதி மொழி கூறுகிறான் சீதத்தன்.

யாழிலே வல்லமைமிக்க காந்தருவதத்தை என்னும் வித்யாதர நங்கையை சீவகன் இசைப்போட்டியில் வென்று மணம் புரிந்து கொள்கிறான். பின்னர் வெவ்வேறு சாகங்களை பற்பல நிகழ்வுகளில் நிகழ்த்தி இன்னும் சில பெண்களை மணக்கிறான். இறுதியில் வாழ்க்கையின் நிலையாமையை எண்ணி ஆட்சியைத் தன் மகன் சச்சந்தனுக்கு அளித்துவிட்டு தன் தேவியரோடு துறவறம் பூணுகிறான்.

காவிய இலக்கணம் முற்றாக் கொண்டது என்பதோடல்லாமல் வாழ்க்கை இலக்கணங்களையெல்லாம் வரையறுத்துச் சொல்லும் நூலாக விளங்குகிறது திருத்தக்கத் தேவரின் சீவக சிந்தாமணி.